[X] Close

''சீயான் விக்ரம் எப்பவோ ஜெயித்திருக்கணும்’’ - ‘கடாரம் கொண்டான்’ விழாவில் கமல் புகழாரம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 10:59 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

’’சீயான் விக்ரம் ‘சேது’வுக்கு முன்பு, பல வருடங்களுக்கு முன்பே ஜெயித்திருக்கவேண்டும்’’ என்று ‘கடாரம் கொண்டான்’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான்'. ஜிப்ரான் இசையமைப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கமலும் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.

அப்போது கமல் பேசியதாவது:

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்னுடைய நண்பர், ஒரு படத்தை எடுத்துவிட்டு, என்னிடம் திரையிட்டுக் காட்டினார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘யாருய்யா இந்த ஆளு?’ என்று கேட்டேன். ‘உறுதியாச் சொல்றேன். இந்தப் பையனுக்கு எதிர்காலம் இருக்குய்யா’ என்று சொன்னேன். அந்தத் திரைப்படம் ‘மீரா’. அதில் நடித்தவர் விக்ரம்.

பிறகு, காலதாமதம். சினிமா அப்படித்தான். ஒருத்தருக்கு பொங்கல் போடும். இன்னொருத்தருக்கு பிரியாணி போடும். சிலபேருக்கு சாப்பாடே போடாது. ஆனாலும் விக்ரம் சோர்ந்துவிடவில்லை. பிறகு ‘சேது’ வந்தது. சீயான் விக்ரம் என்று கொண்டாடப்பட்டார்.

ஆனால் இந்தத் தாமதம் எனக்குப் பிடிக்கவில்லை. ‘சேது’வில் ஜெயிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே விக்ரம் ஜெயித்திருக்கவேண்டும். ஒரு கலைஞனாக, எழுத்தாளனாக, இயக்குநராக விக்ரமைப் பார்த்து, எனக்குள் இருந்த வருத்தம் இது.

’சேது’ படத்தை தோற்கடித்தீர்களென்றால், விக்ரமின் மனநிலை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். நல்ல படம் பண்ணவேண்டும் என்று இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறார். ஆகவே, விக்ரமின் முயற்சிக்கு அவரது ரசிகர்கள்தான் உறுதுணையாக இருந்து வெற்றி அடையச் செய்யவேண்டும்.

‘கடாரம் கொண்டான்’ படத்தைப் பார்த்தேன். சக நடிகனாக ஒரு பொறாமை இருக்கும். நான் இளைஞனாக இருந்த போது பொறாமைப்பட்டிருக்கிறேன். இப்போது, விக்ரமின் நடிப்பைப் பார்த்து, அவரைப் பாராட்டத் தோன்றுகிறது. ரொம்பவே ரசித்து, ஜாலியாகப் பார்த்தேன். ஸ்டைல் என்று சொல்லுவோமே. விக்ரம், அப்படியொரு ஸ்டைலுடன் நடித்திருக்கிறார். இப்படியான படங்களை தயாரிக்கவேண்டும் என்பதற்குத்தான் ராஜ்கமல் நிறுவனத்தையே தொடங்கினோம். அந்த வகையில், சீயான் விக்ரமிற்கு இப்படியொரு படம், ராஜ்கமல் நிறுவனத்துக்கு இப்படி ஸ்டைலாக ஒரு படம் என்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close