[X] Close

'மரகதமணி’... ‘கீரவாணி’... மனமார்ந்த வாழ்த்துகள்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 11:36 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

இசையமைப்பாளர் மரகதமணி பிறந்தநாள் இன்று!

நாலா திசையிலும் பயணிப்பது பெரியவிஷயம். அப்படி நாலா இடங்களிலும் நான்குவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு, ஜெயிப்பதும் சாதாரணமானது அல்ல. எம்.எம்.கீரம் அவர்களின் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? ‘இல்லையே’ என்று சிலர் சொல்லலாம்.

‘சரி... கீரவாணியின் பாடல்களையாவது ரசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டால், கொஞ்சம் பேர் மட்டும் கொஞ்சம் குழம்பி, பிறகு ‘ஆஹா...’ என்று தலையாட்டுவார்கள்.

‘மரகதமணியின் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?’ என்றால், நிமிடம் கூட பாதிக்காமல், ‘அடடா...’ என்று சொல்லிப் பூரிப்பார்கள்.

எம்.எம்.கீரம், கீரவாணி, மரகதமணி என பெயர்கள்தான் வேறுவேறு. எல்லாம் ஒருவரே! ஆக, மரகத மணி என்று தமிழிலும் கீரவாணி என்று தெலுங்கிலும் எம்.எம்.கீரம் என இந்தியிலும் இசையமைத்து வருகிறார் கீரவாணி.

எல்லா விதமான படங்களுக்கும் முதல் சாய்ஸ் மரகதமணிதான். எல்லா விதமான இசையிலும் புகுந்து புறப்படுவார். லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, ‘பாகுபலி’ மாதிரியான மெகா மெகா பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி... மரகதமணியின் இசை சேரும்போது, அதற்கான அழகும் கம்பீரமும் கூடிவிடும். இதைத்தான் மார்க்கெட் வேல்யூ என்று சினிமா பாஷையில் சொல்லுவார்கள்.

தெலுங்கில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வரும் கீரவாணியை, தமிழுக்குக் கொண்டு வந்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் என்று கோலோச்சிய காலகட்டத்தில்தான் தன்னுடைய முதல் படமான நீர்க்குமிழி படத்துக்கு வி.குமார் எனும் இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தினார். அதையடுத்து தான் இயக்கிய படங்களுக்கும் தான் தயாரித்த படங்களுக்கும் வி.எஸ்.நரசிம்மன் எனும் இசையமைப்பாளரைக் கொண்டு வந்தார்.

தன்னுடைய ‘அழகன்’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தினார். ‘அழகன்’ படத்தில் அத்தனை பாடல்களையும் அசத்தலாகக் கொடுத்திருந்தார் மரகதமணி.

இதன் பிறகு மீண்டும் கே.பாலசந்தர் ‘வானமே எல்லை’ படத்துக்குப் பயன்படுத்தினார். இதில் போட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ’தோல்வி இனியில்லை... அட இனி வானமே எல்லை’, ‘ஜனகணமன என ஜதி சொல்லும் நேரம்’, ‘நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்’,' ஜனனமும் மரணமும் ஜதி சொல்லும் நேரம்’, ’நீ ஆண்டவனா...’,என்று எல்லாப் பாடல்களும் இளைஞர்களுக்கு நம்பிக்கையைப் பெருக்கும் விதைகளாக இருந்தன.

அடுத்து ‘நீ பாதி நான் பாதி’ பாடலுக்கு மரகதமணி இசையமைத்தது வேறு லெவல். ஒவ்வொரு பாடலும் காதலின் மென்மையைச் சொல்லும். ஒவ்வொரு வாத்தியங்களும் அன்பை விதைத்தன. அதேபோல், ஒரு படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமாக அமைப்பார். இவரின் மெலடி மெட்டுக்களை இரவில் கேட்டால், கேட்ட மாத்திரத்தில் தூங்கிப்போய்விடுவோம் என்று கொண்டாடுகிறார்கள் ஆந்திர ரசிகர்கள்.

தெலுங்கின் கே.விஸ்வநாத்தை யாருக்குத்தான் தெரியாது? ‘சங்கராபரணம்’, ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ என நம் மனதைத் தொட்டவர். மனதில் தனியிடம் பிடித்தவர். கே.விஸ்வநாத், கமலை வைத்து இயக்கிய ‘பாசவலை’ (தெலுங்கு டப்) படத்துக்கு, இசையாலும் பாடல்களாலும் உயிரூட்டியிருந்தார் மரகதமணி.

அவ்வளவு ஏன்... இயக்குநர் ராஜமவுலியின் பல படங்களுக்கு கீரவாணி என்கிற மரகதமணிதான் இசை. ’நான் ஈ’ பாடல்களும் செம ரகம். முக்கியமாக, பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் பாடல்களையும்... மிரட்டியெடுத்து பிரமாண்டம் காட்டுகிற பின்னணி இசையையும் மறக்கவே முடியாது.

அன்னமாச்சார்யா முதலான பல படங்களுக்கு இசையமைத்தார். ஆந்திர விருதுகள் பலவற்றைப் பெற்றார்.

மரகதமணி இசையா...  கீரவாணி இசையா... எம்.எம்.கீரம் இசையா... அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகிவிடும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

இசையையே மூச்செனக் கொண்டிருக்கும் மரகதமணி, ஜூலை 4ம் தேதி, 1961ம் ஆண்டு பிறந்தார். இன்று மரகதமணிக்குப் பிறந்தநாள்.

மரகதமணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லுவோம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close