[X] Close

''பன்னீர்புஷ்பங்கள்’ படத்துக்கு இளையராஜா சம்பளமே வேணாம்னு சொல்லிட்டார்’’ - இயக்குநர் பி.வாசு நெகிழ்ச்சிப் பேட்டி


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 13:28 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

‘’பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு இளையராஜா சம்பளமே வேணாம்னு சொல்லிட்டார் என்று ‘பன்னீர் புஷ்பங்கள்’ பட அனுபவங்களை இயக்குநர் பி.வாசு பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் சந்தானபாரதியும் இயக்குநர் பி.வாசுவும் இணைந்து ‘பாரதி வாசு’ எனும் பெயரில், தங்களின் முதல் படத்தை இயக்கினார்கள். அந்தப் படம்... ‘பன்னீர்புஷ்பங்கள்’.

இந்தப் படம் வெளியாகி, 38 வருடங்களாகிவிட்டன. 1981ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ‘பன்னீர் புஷ்பங்கள்’ வெளியானது. பிரதாப், சுரேஷ், சாந்திகிருஷ்ணா முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் தொடர்பான அனுபவங்களை இயக்குநர் பி.வாசு ’ இந்து தமிழ் திசை’க்கு பிரத்யேகப் பேட்டி அளித்த போது, பகிர்ந்துகொண்டார்.

‘’டைரக்டர் ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குநர்களாக நானும் பாரதியும் பணியாற்றினோம். அப்போது ஸ்ரீதர் சார், ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் எடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் கமலையும் ரஜினியையும் அவர் நினைக்கவில்லை. நானும் பாரதியும்தான், கமல், ரஜினி ஒர்க் அவுட்டாகும் என்றோம். ஸ்ரீதர் சார் சரியென்று சொன்னதும், சந்தான பாரதி கமலை அழைத்து வந்தான். நான், ரஜினியை அழைத்து வந்தேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். அமரும் (கங்கை அமரன்) பாரதியும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு ராஜா அண்ணன் இசையமைச்சா நல்லாருக்கும். ஸ்ரீதர் சார்கிட்ட கேட்டுப்பாருங்க’ன்னு அமர் சொன்னார். அதையும் கேட்டோம். முதல்ல திட்டிவிட்டாரு சார்.

அப்புறம், மறுநாள் வழக்கம் போல எங்களுக்கு கார் வந்துச்சு. நாங்க ஏறிப்போனோம். அங்கே போனா, ஸ்ரீதர் சார், இளையராஜா சார், வாலி சார்னு உக்கார்ந்திருக்காங்க. ரெண்டு பாட்டு ஓகே ஆயிருச்சு. ‘ராஜா, நீ இந்தப் படத்துக்கு மியூஸிக் பண்றதுக்கு  இவனுங்கதான் காரணம்’னு எங்களைக் காட்டிச் சொன்னாரு ஸ்ரீதர் சார். அப்போ இளையராஜா சார், ‘ஒரேநாள் உனை நான்’ பாட்டையும் ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா’ பாட்டையும் வாசிச்சுக் காட்டினார். நாங்க கிறுகிறுத்துப் போயிட்டோம்.

அதுக்குப் பிறகு அமர் (கங்கை அமரன்) தான், என்னையும் பாரதியையும் இணைச்சு, பாரதிவாசுவாக்கினார். எங்களோட முதல் படத்துக்கு தயாரிப்பாளரைத் தேடுதேடுன்னு தேடினார். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கான எல்லா வேலைலயும் கங்கை அமரனின் பங்கு இருக்கு.

ஒருவழியா, படம் பண்ணக் கிளம்பறதுக்கு முன்னாடி, ‘அமர், படத்துக்கு ராஜா சார் இசைதான் வேணும். நீதான் பேசணும்’னு சொன்னோம். அடுத்தநாளே... அமர் என்னையும் பாரதியையும் கூட்டிட்டுப் போனார். ‘அண்ணே, ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்றாங்கன்னு சொன்னேனே. ஒருவழியா, இப்பதான் நல்லவிதமா கைகூடி வந்திருக்குண்ணே. நீங்கதான் மியூஸிக் போட்டுத் தரணும்னேன்’னு அமர் சொன்னார்.

ராஜா சார், ‘பண்ணிருவோம்’னு சொன்னார். இப்ப எங்களோட அடுத்த பயம்... ராஜா சார் சம்பளம் எவ்ளோ கேப்பார்னு விதுக்குவிதுக்குன்னு இருக்கு. முதல்ல கதை சொல்லச் சொன்னார். சொன்னோம். நல்லாருக்குன்னு சொன்னார். அப்பாடான்னு இருந்துச்சு. ’சம்பளம் எவ்ளோ சார்’னு கேட்டோம். ‘போய் படமெல்லாம் எடுத்துட்டு வாங்க. பாத்துக்குவோம்’னு சொன்னார் இளையராஜா.

படம் எடுத்து முடிச்சாச்சு. அவர்கிட்ட போய் நின்னோம். சம்பளம் பத்திக் கேட்டோம். ‘முத படம். கஷ்டப்பட்டு பண்றீங்க. அடுத்தடுத்து பாத்துக்கலாம். இந்தப் படத்துக்கு என்னோட இசை ஃப்ரீ’ன்னு சொன்னார் ராஜா சார். சம்பளமே வாங்காம எங்களுக்காகப் பண்ணிக்கொடுத்த ‘பன்னீர் புஷ்பங்கள்’ பாடல்களாகட்டும், படத்தோட பின்னணி இசையாகட்டும்... புதுமை பண்ணிருப்பார்; இங்கிலீஷ் படம் மாதிரி ஸ்டைலீஷா மியூஸிக் போட்ருப்பார் ராஜா சார்.’’

இவ்வாறு பி.வாசு தெரிவித்தார்.

பி.வாசுவின் வீடியோ பேட்டியைக் காண...

'ரஜினி அறையில் டிஸ்கஷன்; கமல் வீட்டில் சாப்பாடு’ - ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுவாரஸ்யம் - பி.வாசு 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close