[X] Close

டிஜிட்டல் மேடை 33: தூய்மைவாதத்தின் அழுக்கு முகம்


33

  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 10:57 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

ஜூன் மத்தியில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் புதிய வலைத் தொடரான ‘லெய்லா’, ஆதரவு - ஆட்சேபம் எனப் பரபரப்பான விமர்சனங்களுடன் நாட்டின் பிரதான பேசுபொருளாகி இருக்கிறது.

தணிக்கை நடவடிக்கைகளால் அதிகம் பாதிப்புக்குள்ளான இந்திய இயக்குநர்களில் தீபா மேத்தாவும் ஒருவர். தணிக்கையற்ற இணையவெளி படைப்புகளின் சுதந்திரம், அவரை ‘லெய்லா’வைப் படைக்க வைத்திருக்கிறது.

பத்திரிகையாளரான பிரயாக் அக்பர் எழுதிய நாவலைத் தழுவி, அதே தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த வலைத் தொடரின் ஆறு அத்தியாங்களை பவன்குமார், சங்கர் ராமன் ஆகியோருடன் இணைந்து தீபா மேத்தா இயக்கி உள்ளார்.

ஆர்யவர்தா என்ற உருவக தேசத்தில், எதிர்வரும் 2047-ம் ஆண்டில் கதை தொடங்குகிறது. தேசத்தின் குடிமக்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் தனிக் குடியிருப்பு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆதிக்கச் சமூகத்தினர் வசதி படைத்தவர் களாகவும் மற்றவர்கள் ஏழைகளாகவும் இருக்கின்றனர்.

இவர்களை இரண்டாள் உயரச் சுவரும் வேலிகளும் பிரித்து வைத்திருக்கின்றன. பிறப்பின் அடிப்படையில் குடிமக்களின் தலைவிதி நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் ஆளும் தலைவரைக் கடவுளாகத் துதிக்க குடிமக்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். தேசத்துக்காகப் பெற்ற குழந்தை களைக் கொல்லவும் தாய்மார்கள் உறுதிமொழியேற்கிறார்கள்.

சூழல் சீர்கேட்டால் தூய காற்றும் குடிநீரும் தட்டுப்பாடாகி, சாமானியர் களுக்கு அவை எட்டாத உயரத்தில் இருக்கின்றன. தண்ணீருக்காக உள்நாட்டுக் கலவரங்கள் நித்தம் அரங்கேறுகின்றன.

கழிவு நீர்போல் கறுப்பாக மழை பெய்கிறது. ரேஷனில் கிடைக்கும் தண்ணீரை முறைகேடாகச் செலவழிப்பவர்கள் தண்டனைக்கு ஆளாகிறார்கள். கதைக்குள் ஒன்றுவதற்கு முன்னர் இப்படி அரசியல், சமூக, சுற்றுச்சூழல் அவலங்களுடன் விரியும் காட்சிகளே நம்மை உலுக்கி நிமிர உட்கார வைக்கின்றன. 

காதல் கணவர் மற்றும் இரண்டு வயது மகள் என மகிழ்ச்சியுடன் வாழும் ஷாலினியின் வீட்டுக்குள் சில குண்டர்கள் அடாவடியாக நுழைந்து, கணவரைக் கொல்வதுடன் அவரைக் கவர்ந்து செல்வதுடன் கதை தொடங்குகிறது. தொடர்ந்து தூய்மைவாத முகாம் ஒன்றில் ஷாலினி அடைக்கப்படுகிறார்.

மாற்றுச் சமூகத்தினரை மணம் புரிந்த பெண்களுக்கான ‘சுத்திகரிப்பு’ பயிற்சிகள் அங்கே வழங்கப்படுகின்றன. தூய்மையடையாத சக பெண்களைக் கொல்லும் விபரீதத் தேர்வு ஒன்றையும் பயிற்சியின் முடிவில் நடத்துகிறார்கள்.

இதற்கிடையே மாற்றுச் சமூகத்தினரை மணந்து கலப்பு ரத்தத்தில் பிறந்த ‘தூய்மையற்ற’ குழந்தைகளைக் கொல்ல புதிய சட்டம் அமலானதை அறியும் ஷாலினி, தன் மகள் ‘லெய்லா’வை மீட்கக் களமிறங்குவதில் கதை வேகமெடுக்கிறது.

மகளுக்காக வதை முகாமிலிருந்து தப்பிச் செல்வது, தனக்கு உதவக்கூடிய பத்திரிகையாளர், மருத்துவர், ஆட்சி பீடத்தின் உச்சாணியில் இருப்பவர் களை நெருங்க முயல்வது என சகலத்துக்கும் ஷாலினி துணிகிறார்.

அவருக்கான உதவிகளைச் செய்ய முன்வரும் கிளர்ச்சியாளர் முகாமைச் சேர்ந்தவர்கள், கைமாறாக சில வேவுப் பணிகளைச் செய்யுமாறு பணிக்கின்றனர். முழுமூச்சாய் மகளைத் தேடியலையும் ஷாலினி இடையிடையே உயிரைப் பணயம் வைத்து கிளர்ச்சியாளர்களுக்கும் உதவ முற்பட்டு திகில் சேர்க்கிறார். 

குழந்தையை மீட்கத் துடிக்கும் தாயின் துடிப்பைக் கதையாக முன்வைத்து, அச்சுறுத்தலாகும் நிதர்சன அரசியல், சமூகத் தூய்மைவாத அழுக்குகளைச் சராமாரியாக இந்த வலைத்தொடரில் வெளுத்தெடுக்கிறார்கள்.

தாய்மையின் தவிப்புடன், சமூக அவலத்தைக் கண்டு வெதும்பும் முதிர்ச்சியுள்ள பெண்ணாக ஹூமா குரேஷி ஈர்க்கிறார். அவரை விரட்டும் அரசாங்கக் காவலாளியாக சித்தார்த் மற்றும் சீமா பிஸ்வாஸ், ராகுல் கன்னா, ஆரிஃப் ஷகாரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எதிரெதிர் சமூகத்து அடிப்படை வாதிகள் உதவிக்கொள்ளும் கயமை, மாற்றுச் சமூகத்தை அடியோடு வெறுப்பவரை உருதுப் பாடல்கள் மயங்கச் செய்யும் படைப்பின் மகிமை, மத அடிப்படைவாதத்தில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் போன்றவற்றை உணர்த்தும் காட்சிகள் சுவாரசியமாக உள்ளன. தாய்ப்பாசம் மைய இழையாகவும், அரசியல், சமூக அவலங்கள் ஊடுபாவு இழைகளாகவும் செல்ல, ஒட்டுமொத்த திரைக்கதை திரில்லர் பாணியில் பயணிக்கிறது.

காட்சிகள் நெடுக விரவிக் கிடக்கும் வண்ணங்கள் உணர்வுகளை ஆழமாகப் பதியவைக்கின்றன. நாஜிக்களின் கொடுங்கோன்மை வித்தைகளைத் தேவையான இடங்களில் பயன்படுத்தி இருப்பது பொருந்துகிறது. ஒருசில காட்சிகள் முழுமையின்றியும் லாஜிக் ஓட்டைகள் நிறைந்திருப்பினும் கதையோட்டத்தின் விறுவிறுப்பில் அவை காணாது போகின்றன.     

அவசியமான அரசியல் சமூகப் பாடங்களுடன், அதற்கு நிகரான குடிநீரும் காற்றும் அருகிப் போவதன் அபாயத்தையும் முகத்தில் அறைந்து சொல்கிறது ‘லெய்லா’.

‘லெய்லா’ முன்னோட்டத்தைக் காண:

Leila 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close