[X] Close

திரைப் பார்வை: ஒரு தேசத்தின் கதை (பாரத் - இந்தி)


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:53 am
  • அ+ அ-

-என்.கௌரி

நாட்டுப் பற்றுதான் பாலிவுட்டின் தற்போதைய போக்கு. அதிலும் கடந்த சில ஆண்டுகளில் ‘நாட்டுப் பற்றை’ மையப்படுத்தி வெளியான படங்களின் எண்ணிக்கை அதிகம். அரசியல் சூழல், மக்களிடம் அதிகரித்திருக்கும் வலதுசாரி சிந்தனை போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

அந்த  ‘நாட்டுப் பற்று’ படங்களின் வரிசையில், சல்மான் கான் நடிப்பில், இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘பாரத்’.  தென்கொரியத் திரைப்படமான ‘ஓட் டு மை ஃபாதர்’ (2014) படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

சல்மான் கானின் வழக்கமான ‘சூப்பர் ஸ்டார்’ பாணி திரைப்படங்களி லிருந்து எந்த வகையிலும் வித்தியாச மானது அல்ல இந்த ‘பாரத்’. ஆனால், எப்போதும் இளைஞராகவே  நடிக்கும் சல்மான்,  இந்தப் படத்தில் 70 வயதுக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2010-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கும் படம், பின்னோக்கிச் சென்று இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அப்போது ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும் பாரத், பாகிஸ்தானின் மீர்பூரில் இருக்கிறார்.  குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருவதற்காக ரயிலில் ஏறுகிறார்.

ஆனால், அவருடைய அப்பாவும் (ஜாக்கி ஷ்ராஃப்) சகோதரியும் கூட்டத்தில் தொலைந்துவிடுகிறார்கள். மீதியிருக்கும் தன் குடும்பத்தினருடன் டெல்லியில் கடை வைத்திருக்கும்  தன் அத்தையிடம் செல்கிறார் பாரத். அங்கு வந்து அவர்களைச்  சந்திப்பதாகச் சொல்கிறார் பாரத்தின் அப்பா. அந்தக் கடையின் பெயர் ‘இந்த் ரேஷன் ஸ்டோர்’.  தான் திரும்பி வரும்வரை, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தன் ஏழு வயது மகனிடம் ஒப்படைக்கிறார்.

பாரத், குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அகதி முகாமில், பாரத்துக்கு விளாயத்தின் (சுனில் க்ரோவர்) நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒரு சர்க்கஸில் பணிக்குச் சேர்கிறார்கள். வளர்ந்தபிறகு, பாரத், ‘சாகச பைக்’ ஓட்டுநராக மாறுகிறார். அவரின் நண்பர் விளாயத் அவர் மீது ‘பந்தயம்’ கட்டவைக்கும் பணியைச் செய்கிறார். கொஞ்ச காலத்தில், நிலையான வேலைதேடி இருவரும் வேலைவாய்ப்பு அலுவலக வாசலில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்தக் கட்டத்துக்குப் பிறகு, நாட்டில் என்னவெல்லாம் முக்கியச் சம்பவங்கள் நடைபெற்றனவோ, அவற்றின் வரலாற்றுக் குறிப்புகளோடு காட்சிகள் வரிசை கட்டுகின்றன. நேருவின் இறப்பில் தொடங்கி, இந்தியா உலகக் கோப்பை வென்றது, ஷாருக் கான், சச்சின், உலகமயமாக்கம்  அறிமுக மானதுவரை அனைத்தைப் பற்றியும் படத்தில் பேசப்படுகிறது. அதுவரை, பாரத் என்ற தனிமனிதனின் வாழ்க்கைக் கதையைப் பின்தொடர்ந்துகொண்டிருந்த பார்வையாளர்கள், திடீரென்று பாரத நாட்டின் கதையைப் பின்தொடரும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் 60-களில் இருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக பாரத்தும், விளாயத்தும் மத்திய கிழக்கின் எண்ணெய்க் கிடங்குகளில் கட்டுமானப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். அதற்கு பிறகு, யேமன் நாட்டின் ஏடன் நகரத்தில் வணிகக் கடற்படையில் பணியாற்றுகி றார்கள். ஒருவழியாக, எப்படியோ பணம் சேர்த்து அத்தையின் கடையைச் சொந்தமாக வாங்கிவிடுகிறார். அப்பாவுக்குக் கொடுத்த வாக்கின்படி, தம்பி, தங்கையை ஆளாக்கிவிடுகிறார்.

பாரத்தின் ‘லிவ்-இன் பார்ட்னர்’ குமுத் (கத்ரீனா கைஃப்). இவர் பாரத் பணியாற்றும் இடத்தில் மேற்பார்வை யாளராக இருந்ததால், கடைசிவரை, அவரை ‘மேடம் சார்’ என்றே அழைக்கிறார் பாரத்.

படத்தில் இருக்கும் எந்த அம்சமும் பார்வையாளர் களிடம் ஒட்டாததைப் போலவே, இவர்களின் காதலும் மனத்தில் ஒட்ட மறுக்கிறது.

அப்பா தன்னைச் சந்திப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நம்பி, அந்தக் கடையை யாரிடமும் விற்காமல், தன் எழுபது வயது வரை காத்திருக்கிறார் பாரத். பிரிவினையின்போது பிரிந்த தந்தையும் தங்கையும் பாரத்தைச் சந்தித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.

நீளமான திரைக்கதை யில் எந்த எதிர்பாராத திருப்பமும் இல்லை. பாரத்துக்கும் அவரது அப்பாவுக்கும் இருக்கும் ஆழமான உறவைப் புரியவைப்பதற்காக, ரயில் நிலையத்தில் அவர்கள் இருவரும் பேசும் காட்சி அடிக்கடி திரையில் வருகிறது.

ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தவில்லை. திரையில் பாரத்தின் இழப்பைப் புரியவைக்க இயக்குநர் மெனக் கெடவேயில்லை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்ற உணர்வு பூர்வமான கதைக்களத்தைத் தேர்வுசெய்துவிட்டு, அதைத் திரையில் கொண்டுவரத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

சுமாரான திரைக்கதை யைக் கூட, சில நடிகர்கள் தங்கள் நடிப்பால் திரையில் மெருகேற்றி விடுவார்கள். ஆனால், ‘பாரத்’ படத்தில் அந்த அம்சம் அறவேயில்லை. அனைவரும் நடிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

திரைக்கதைக்காக எழுபது வயது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்பது போல நடித்திருக்கிறார் சல்மான் கான். சுனில் க்ரோவரின் நகைச்சுவையான நடிப்பு மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல். கத்ரீனா கைஃப்புக்கு வலிமையான கதாபாத்திரம். ஆனால், வழக்கம்போல நடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் தவறவிட்டிருக்கிறார்.

படத்தில் தேசிய கீதத்தை இணைத்துவிட்டால் ‘நாட்டுப்பற்று’ படம் எடுத்துவிட்டதாகக் கருதிக்கொள்ளும் பாலிவுட் இயக்குநர்களின் வரிசையில்  இப்படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபரும் இணைந்துவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close