[X] Close

டீச்சர் கதாபாத்திரத்துக்காக ஜோதிகா காட்டிய அக்கறை: 'ராட்சசி' இயக்குநர்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:44 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

டீச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகாவின் மெனக்கிடல்கள் குறித்து 'ராட்சசி' இயக்குநர் கெளதம்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் 'ராட்சசி'. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, தற்போது இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இம்மாத வெளியீட்டுக்கு தயாராகி வரும் 'ராட்சசி' குறித்து இயக்குநர் கெளதம்ராஜ், “ஒவ்வொரு பையனோட முதல் நாயகியும் ஒரு டீச்சராகத் தான் இருக்கும். எனக்கு என்னோட 4-ம் வகுப்பு 'நிர்மலா டீச்சர்'. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பெயர் கட்டாயம் மனதிலிருக்கும்.

நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்தில் நடக்குற நடக்க வேண்டிய விஷயங்களை எனக்கென்ன என்று இல்லாமல் எதிர்த்து நின்று அத்தனை பேருக்கும் முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனதில் 'இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயின்' என்று தோன்றும். அப்படிப்பட்டவங்க தான் 'ராட்சசி' கீதாராணி.

உங்களைப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாமல் ட்ரெய்லரில் கேட்குற அந்த குட்டிப் பையனாகத் தான் நாம் அனைவரும் இந்த கீதா டீச்சரைப் பார்ப்போம். கல்லூரியில் கூட  எத்தனை வயதானாலும் ஏதாவது ஒரு வகையில படிக்க முடியும்.

ஆனால் பள்ளி வாழ்க்கை ஒரு தடவைதான். திரையரங்கை விட்டு வெளியில் வரும் போது அந்த நினைவுகளை இந்தப் படம் தரும். அரசுப் பள்ளியில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருத்தருடைய எண்ணமும், என்னோடதும் அது தான். அதை தான் திரை வடிவமாக மாத்தியிருக்கேன்.

இதில் ராட்சசியாக ஜோதிகா மேடத்தை தவிர வேறு யாரும் இவ்வளவு கச்சிதமாக செய்ய முடியாது. ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் போதும், அதில் நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்தில்  பொறுப்புணர்வு உள்ளது என்று முழுமையாக நம்புகிறார்.

இந்தக் கதையை கேட்டதிலிருந்து நிறைய ஹோம் ஓர்க் பண்ணினார். நிறைய டீச்சர்களிடம் பேசினார். அவர்களுடைய டிரஸ்ஸிங், மேக்கப், உடல்மொழி என்று முழுமையாக டீச்சராகவே மாறிவிட்டார். அவர் ஒரு நடிப்பு ராட்சசி.

வியாபார நோக்கத்தில் கல்வியை விற்க ஆரம்பித்தவர்கள், அரசுப் பள்ளியை மக்களின் பொதுப் புத்தியில் வேறு மாதியாக உருவாக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்கியது அரசுப் பள்ளி தான் என்று அழுத்தமாக சொல்ல முடியும்.

கடந்த பத்து வருடங்களில் உருவான அடுத்த தலைமுறை தனியார் பள்ளிகளில் இருந்து அதிகமாக வெளியே வந்தார்கள். தனியார் பள்ளி – அரசுப் பள்ளி அப்படிங்கிற ஏற்றத்தாழ்வு  உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று போராடுறவங்க தான் இந்த 'ராட்சசி' கீதா ராணி.

இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களாக, அரசுப் பள்ளியை உயர்த்த போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்பேன்” என்று தெரிவித்துள்ளார் கெளதம் ராஜ்.

'ராட்சசி' படத்தை முடித்துவிட்டு, 'ஜாக்பாட்' படத்தில் நடித்து வந்தார் ஜோதிகா. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close