[X] Close

கிரீஷ் கர்னாட்ட் அஞ்சலி: அச்சம் துறந்த கலைஞன்!


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 10:55 am
  • அ+ அ-

கிரீஷ் கார்னாட் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்தவர். திரைப்படங்கள் வாயிலாகவே பரவலாக அறியப்பட்டவரும்கூட. அதனால்தானோ என்னவோ கிரீஷ் கார்னாட்டின் மரணச் செய்தியை ஒரு இதழ் ‘காதலன்’ திரைப்படத்தின் வில்லன் நடிகர் மரணம்!’ எனத் தலைப்பிட்டு அறிவித்தது.

கிரீஷ் கார்னாட் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்ல; கன்னட எழுத்துலகின் மிக முக்கிய ஆளுமை. கன்னட மொழியில் அவர் ஆக்கிய நாடகங்களுக்காக சாகித்ய அகாடமி விருது, காளிதாஸ் சம்மான், ஞான பீட விருது என மிக முக்கியமான விருதுகளை அள்ளிக் குவித்தவர்.

இந்திய மொழிகளில் தோன்றிய மிக முக்கியமான நாடகாசிரியர் அவர்.மராத்தியில் விஜய் டெண்டுல்கர், இந்தியில் மோகன் ராகேஷ், வங்காள மொழியில் பாதல் சர்க்கார், தமிழில் இந்திரா பார்த்தசாரதி, மலையாளத்தில் சங்கரப்பிள்ளை, கன்னடத்தில் கிரீஷ் கார்னாட் என நாம் அவரை  வரிசைப்படுத்த இயலும்.

மாறிய முகவரி

அவரது எழுத்துச் செயல்பாடுகள் என்பது பேரளவு நாடகமாகவே இருந்தது. 60-களின் தொடக்கத்தில் ‘யயாதி’ எனும் நாடகம் மூலம் தனது பயணத்தைத்  தொடங்கிய அவர், தனது நாடக எழுத்துக்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறித்து சாகித்ய அகாடமிக்காக கே.எம்.சைதன்யா உருவாக்கிய ஓர் ஆவணப்படத்தில் இவ்வாறு பேசியுள்ளார்.

“நானும் மோகன் ராகேஷும் கல்கத்தாவில் ஒரு வங்க நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அது ஓர் இசை நாடகம். பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அது முழுக்க முழுக்க மெலோ ட்ராமாவாக இருந்தது.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மோகன் ராகேஷ் சிரித்தார்; நானும் சிரித்தேன். நாம் ஏன் சிரிக்கிறோம் தெரியுமா என்று கேட்ட மோகன் ராகேஷ், அதற்கான பதிலையும் சொன்னார். ‘ஏனென்றால் இந்திய நாடகங்களின் எதிர்காலம் இனி நம் கையில்தான் இருக்கிறது’ என்று”

 ‘யயாதி’, ‘ஹயவதனா’, ‘துக்ளக்’, ‘நாகமண்டலா’ , ‘தலெதண்டெ’,   ‘திப்பு சுல்தான் கண்ட கனசு’ (திப்பு சுல்தான் கண்ட கனவு), ‘ஒடகுகள பிம்பா’ (சிதிலமுற்ற பிம்பங்கள்), ‘அக்னி மத்து மளெ’ (அக்னி மற்றும் மழை), ‘ரக்‌ஷா தங்கடி’ போன்ற நாடகங்களை எழுதி இந்திய நாடகங்களின் முகவரியை மாற்றியவர்.

அவர் முதலில் எழுதிய நாடகம் ‘யயாதி’.  இது பாரதத்திலும் பாகவத புராணத்திலும் சொல்லப்படுகிற ஒரு கதை.

முதுமை அடையுமாறு சுக்ராச்சாரியாரால் சபிக்கப்பட்ட யயாதி, தன் மகன் புருவின் இளமைப் பருவத்தைத் தானமாகப் பெற்று முதுமையிலிருந்து மீள்கிறான். தங்களது கனவை நிறைவேற்ற தமது பிள்ளைகளின் வாழ்வைப் பலி கேட்கிற, தியாகம் செய்யக் கோருகிற இன்றைய குடும்பச் சூழல்களை இழுத்து வந்து நம் கண் முன்னால்  நிறுத்தும் இந்நாடகம், பெரும் வரவேற்பு பெற்றது. கிரீஷ் கார்னாடை நோக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

டெல்லியில் மேடையேறிய ‘துக்ளக்’

அவர் அடுத்து எழுதிய நாடகம் ‘துக்ளக்’. 14-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் முகமது பின் – துக்ளக்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

மிகப் பெரும் லட்சியங்களை நிஜமாக்கப்போகிறேன் என்று தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சுல்தான் துக்ளக், கடைசியில் மீளவே முடியாத ஒரு முட்டுச்சந்தில் வந்து சிக்கிக்கொள்கிற வரலாற்று அவலத்தைச் சுற்றிச் சுழன்றது இந்நாடகம்.

1964 -ம் ஆண்டு எழுதப்பட்ட ‘துக்ளக்’, மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நேருவின் சோசலிசப் பிரகடனங்கள், சொல்லொணா ஏமாற்றங்களில்  மூழ்கடிக்கப்பட்டதை ஓர் உருவகமாகச் சித்தரித்த நாடகம். ஒரு காலத்தின் துயரத்தை, ‘துக்ளக்’ எனும் கதாபாத்திர வார்ப்பின் வாயிலாக, நாடகம் பார்க்கும் ஒவ்வொரு தனிமனிதரின் துயரமாகக் கடத்திய நாடகம் இதுவெனவும் சொல்லலாம்.

1972-ம் ஆண்டு டெல்லி பழைய கோட்டையைப் (புராணா கிலா) பின்னணியாகக் கொண்டு ஆகப்பெரும் நாடக ஆளுமை இப்ராஹிம் அல்காஜி  ‘துக்ளக்’ நாடகத்தை மேடையேற்றினார். மனோகர் சிங் எனும் திறன்மிக்க நடிகர் துக்ளக் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்திய நாடக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இதைச் சொல்வோரும் உண்டு.

அது 1986-ம் ஆண்டு. ‘துக்ளக்’ மறுபடியும் டெல்லியில் மேடையேற்றப்பட்டது. கார்னாடும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்கிறார். இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து அது நடக்கிறது. நாடகத்தில் எட்டாவது காட்சியில் புதிய தலைநகரான தௌலதாபாத் கோட்டையில் ரோந்து செல்லும் இரு காவலர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக ஓர் இடம் வரும்.

வலுமிக்க வகையில் கோட்டையின் அரண்கள் அமைந்திருப்பது குறித்து பெருமிதம் கொள்ளும் ஒரு காவலன் இவ்வாறு சொல்வான்:

“எந்த ஒரு பெரிய படையாலும் இக்கோட்டையைத் தகர்த்துவிட முடியுமா என்ன? சொல்லுங்க அண்ணே!”

அதற்கு உடன் வரும் காவலன் சொல்வான்: “தம்பி ஒன்று தெரிந்து கொள்! வெளியிருந்து வரும் தாக்குதல்களைவிட உள்ளிருந்து வரும் தாக்குதல்களால்தான்  பெரும்பாலான கோட்டைகள் தகர்க்கப்பட்டுள்ளன!”

இவ்வசனத்தை அந்நடிகர் மொழிந்ததுதான் தாமதம், பார்வையாளர்களிடமிருந்து ஏக காலத்தில் ‘ஹா’வென ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

8.jpg 

சைதன்யா எடுத்த ஓர் ஆவணப்படத்தில் இச்சம்பவத்தை நினைவுகூர்கிற கர்னார்ட் “நாடகக் கதை 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுல்தானைப் பற்றியது. ஆனால், பார்வையாளர்கள் இந்திரா காந்திக்கு நேர்ந்த கதியைத் தொடர்பு படுத்திக்கொண்டார்கள்” என்கிறார்.

சாதியத்துக்கு எதிராக...

தொன்மங்களை, வரலாற்று நிகழ்வுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி சமகாலக் கண்கொண்டு அவற்றில் பொதிந்துள்ள இருத்தலியல் கேள்விகளை அலசுகிற அவரது நாடகங்கள், இந்திய நாடகங்களின் எல்லைகளை விரிவு செய்வதாயிருந்தன.

1989-ல் அவர் எழுதிய நாடகம் ‘தலெ தண்டெ’. தலெ தண்டெ எனில் தலையைத் தண்டமாக வெட்டிப் பலி கொடுப்பது எனப்பொருள். பாப்ரி மஸ்ஜித் - அயோத்யா பிரச்சினை மேலெழுந்தபோது அவர் எழுதிய நாடகம். 12-ம் நூற்றாண்டில், சாதிய மேலாண்மைக்கு எதிராக பசவண்ணர் தோற்றுவித்த சரணர் இயக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது இந்நாடகம்.

சரணர் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிற ஒரு பிராமணப் பெண்ணை அவ்வியக்கத்திலுள்ள சமர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனுக்குக் கல்யாணம் செய்துவைக்கும்போது, அவர்கள் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். அதையொட்டி மிகப்பெரும் கலவரம் மூள்கிறது. வரலாற்றிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளாதவர்கள் என்பதை இந்த நாடகம் நமக்குச் சொல்கிறது.

கடைசியாக அவர் எழுதிய நாடகம் ‘ரக்‌ஷா தங்கடி’ விஜய நகர சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னன் ராமராயனைப் பற்றியது.

ஆங்கில மொழியில் எழுத வல்லவராயிருந்தும் நாடகம் எழுதுவதற்கு அவர் கன்னட மொழியையே தேர்வு செய்தார். ஆங்கிலம் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இந்தியப் பல்கலைக்கழகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்ட,  விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட ஓர் இந்திய நாடகாசிரியர் எவரேனும் உண்டென்றால், அது கிரீஷ் கார்னாட்தான்.

9.jpg 

நியோ - ரியலிச இயக்குநர்

கிரீஷ் கர்னார்டின் இன்னொரு பரிமாணம் அவரது திரைப்படங்கள். அறுபதுகளின் இறுதியில் எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் மேலெழுந்த நியோ - ரியலிச, சுயாதீனப் படங்களின் இயக்கத்தில் கிரீஷ் கார்னாட் ஒரு பிரிக்க முடியாத சக்தியாக இருந்தார்.

அவர் திரைக்கதை எழுதி, நடித்த ‘சம்ஸ்காரா’, பி.வி.கரந்துடன் அவர் சேர்ந்து இயக்கிய ‘வம்ச விருக்‌ஷா’, ‘தப்பலியு நீனாதே மகனே’, அவர் தனித்து இயக்கிய ‘ஒந்தனொந்து காலதள்ளி’, ‘காடு’, ‘அஞ்சு மல்லிகெ’, ‘கானூரு ஹெக்கதிதி’, ‘உத்ஸவ்’ மற்றும் அவர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மந்தன்’, ‘நிஷாந்த்’, போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியாவின் நியோ - ரியலிச திரை இயக்கத்துக்கு வலுச் சேர்த்தவர்..

புனே திரைப்படக் கல்லூரியின் தலைவர், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் தலைவர், லண்டனிலுள்ள இந்திய அரசின் நேரு மையத்தின் இயக்குநர், (கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவி இது) எனப் பல  உயர் பொறுப்புகளை வகித்தவராக பல நிறுவனங்களை கட்டியெழுப்பியவராக இருந்த போதும், ஒரு சமூகச்செயற்பாட்டாளனாக இருப்பதையே அவர் நாடினார்.

சிக்மகளூரின் பாபா புதாங்கிரி மலையிலுள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபடுகிற

ஒரு சூஃபி வழிபாட்டுத் தலத்தை  2004-ம் ஆண்டு சில அடிப்படைவாத அமைப்புகள் கைப்பற்ற முயற்சி செய்தபோது அதை எதிர்த்து களத்தில் இறங்கியதற்காகக் கைது செய்யப்பட்டவர்.

மாட்டுக்கறி உண்பதைப் பகிரங்கமாக ஆதரித்தவர்; கடந்த 500 ஆண்டு காலப் பரப்பில்  கன்னட தேசம் தோற்றுவித்த உன்னதமான மனிதன் ‘திப்பு சுல்தான்’ என அறை கூவியவர்; பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு திப்பு சுல்தானின் பெயரை வைக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுப்பியவர்; அக்கருத்தை திரும்பப் பெறவேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டவர்; இதற்காகக் கொலை மிரட்டல் விடப்பட்ட போதும் எதற்கும் அஞ்சாதவர்; அவரது இருப்பும் பன்முகப் பங்களிப்பும் முன்னிலும் கூடுதலாகத் தேவைப்படுகிற இக்காலத்தில் அவர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

கையில் ஆக்ஸிஜன் சிலிண்டரை ஏந்தி மூக்கில் குழாயைச் செருகிக்கொண்டு, “நானும் ஒரு அர்பன் நக்ஸல்தான்” என எழுதப்பட்ட அட்டையை அணிந்து கொண்டு தனது எழுத்துக்களுக்கும் தனது செயல்பாடுகளுக்கும் இடைவெளியில்லாத ஓர் இருப்பை எப்போதும் தேர்ந்தெடுத்த கிரீஷ் கார்னாடின் தீரம் என்றென்றும் நினைவு கூரப்படும்.

- பிரளயன்

கட்டுரையாளர், நாடக இயக்குநர், சென்னைக் கலைக்குழுவின் நிறுவனர்.

தொடர்புக்கு: pralayans@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close