[X] Close

மோகனாம்பாள்... சாவித்திரி மாமி... பூங்காவனம் பாட்டி;இன்று நாட்டியப் பேரொளியின் பிறந்தநாள்


  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jun, 2019 12:06 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

ஐம்பதுகளில் இருந்து ஆரம்பித்த வெற்றிப் பயணம், எண்பதுகள் வரை தொடர்ந்தது. எல்லோருக்கும் பிடித்தமானவராக ஒருவர் இருப்பது கடினம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்தமானவர்கள் என்கிற பட்டியலில் இவரும் இடம்பிடித்தார். அவர்... பத்மினி.

திருவிதாங்கூர் சகோதரிகள் என ஆரம்பத்தில் அறியப்பட்டார். இவரின் சகோதரிகள் லலிதாவும் ராகினியும் இவரைப் போலவே நடனத்தில் வெளுத்துவாங்கினார்கள். ஆனால், நடிப்பில் பேரெடுத்தவர் பத்மினி மட்டும்தான். தொடக்கத்தில், படத்தில் நடனம் மட்டுமே ஆடினார் பத்மினி சகோதரிகள். பிறகு, இவரின் முகபாவங்களே நடிப்பின் பக்கம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

நாற்பதுகளின் இறுதிக் காலத்தில் நடிக்க வந்தவர், ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிகப்பெரிய நடிகையாக ஒளிர்ந்தார். சிவாஜியுடன் இவர் நடித்த ‘தூக்குதூக்கி’ 1954ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்ட்டித்தது. பிறகு ‘ராஜா ராணி’யும் வெற்றி பெற்றது. அதையடுத்து ‘உத்தமபுத்திரன்’ அதிரிபுதிரி ஹிட்டானது.

அப்படியே சிவாஜி - பத்மினி ஜோடி சூப்பர் ஜோடி எனப் பேரெடுத்தார்கள். வரிசையாகப் படங்கள் வந்தன. ‘தங்கப்பதுமை’ திரைப்படம் கலங்கடித்தது.

இதேகாலகட்டத்தில் எம்ஜிஆருடனும் நடிக்கத் தொடங்கினார். ’ராஜா தேசிங்கு’, ‘அரசிளங்குமரி,’ ‘மன்னாதி மன்னன்’ என வரிசையாக படங்கள் வந்து வெற்றியைத் தந்தன.

திருவாங்கூர் சகோதரிகள் என்று சொல்லப்பட்டு வந்தவர், நடிகை பத்மினி என அழைக்கப்பட்டார். பிறகு நாட்டியப் பேரொளி என பெருமிதத்துடன் அழைக்கப்பட்டார். அதேசமயத்தில், திரையுலகில் பலராலும் ‘பப்பி’என்று அழைக்கப்பட்டார். ‘பப்பி’ என்பது பத்மினியின் செல்லபெயர்.

பத்மினியின் கண்கள் மகத்துவமும் தனித்துவமும் வாய்ந்தவை. கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நர்த்தனமாடும். பத்மினியின் வசன உச்சரிப்புகள் தனிரகம்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என பலருடனும் நடித்து வந்தாலும் சிவாஜியுடன் மட்டுமே 50க்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பொருத்தமான ஜோடிப் பட்டியலில் சிவாஜி - பத்மினிக்கும் இடம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

இந்த ஜோடியின் இரண்டு முக்கியமான படங்களைச் சொல்லியே ஆகவேண்டும். ‘தில்லானா மோகனாம்பாள்’. நாட்டியமாடும் மோகனாவாகவே வாழ்ந்திருப்பார். கொஞ்சம் கர்வமும் லேசான அலட்டலும் அதீத அன்புமாக பத்மினி கேரக்டரை வேறு எவருமே செய்யமுடியாது.

அதேபோலத்தான் சண்முகசுந்தரமும்! நாகஸ்வர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமும் மோகனாம்பாளும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். ஒவ்வொரு காட்சியிலும் பத்மினி தன் குணச்சித்திர நடிப்பால் நம்மைக் கரைத்துவிடுவார்.

அடுத்து ‘வியட்நாம் வீடு’. பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜியென்றால்... திருமதி சாவித்திரி பத்மநாபனாகவே இணையாக வாழ்ந்திருப்பார் பத்மினி.

‘சாவித்ரீ...’ என்று கொஞ்சலும் கெஞ்சலுமாக சிவாஜி அழைக்கும்போதெல்லாம், பத்மினியிடம் பரவியிருக்கும் வெட்கமும் புன்னகையும் எத்தனை கோடி கொடுத்தாலும் எவரிடமும் கிடைக்காத எக்ஸ்பிரஷன்.

‘ஆபரேஷன் வேணாம்ணா. நான் சுமங்கலியாவே சாகறேன்’ என்று அழுதுகொண்டே சொல்லுவார் பத்மினி. ஒவ்வொரு முறை பசங்களின் தவறுகளை மறைத்து, கணவரிடம் இருந்து அவர்களை தப்பிக்கச் செய்யும் முயற்சிகள் நம் அம்மாக்களை நினைவுபடுத்தும். மடிசாரும், குங்குமமும் மூக்குத்தியுமாக வளைய வரும் சாவித்திரியை மாமியை மறக்கவே முடியாது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘சித்தி’ திரைப்படம், பத்மினியின் திரை வாழ்வில் இன்னொரு மகுடம். தன் குடும்பத்துக்காக, சகோதர சகோதரிகளுக்காக, அதிக வயதுகொண்ட எம்.ஆர்.ராதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தை நடத்தும் விதமும் குணமும் கண்டு, பிரமித்துப் பார்த்தார்கள் ரசிகர்கள். ’பத்மினி மாதிரி நடிக்க முடியாதுப்பா’ என்று ஹீரோயின்களில் தனித்த அடையாளங்களுடன் பத்மினியைக் கொண்டாடினார்கள்.

எண்பதுகளில் பத்மினிக்குக் கிடைத்த கதாபாத்திரம், இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத அபூர்வ வாய்ப்பு. தமிழ் சினிமாவில், பாட்டிக்கும் பேத்திக்குமான ஓர் நல்லுறவை எந்த சினிமாவாவது எடுத்துரைத்திருக்கிறதா? பத்மினியும் நதியாவுமாக, பாட்டியும் பேத்தியுமாக இயக்குநர் பாசில் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலமாக வாழவைத்திருந்தார். பாட்டி பூங்காவனத்தம்மாவில் பத்மினி காணாது போனார். அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டினார்.

இப்படி எத்தனையோ படங்கள். ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். திருவிதாங்கூர் சகோதரி என்கிற பத்மினி என்கிற நாட்டியப் பேரொளி என்கிற பிரஸ்டீஜ் சாவித்திரி பத்மநாபன் என்கிற, தில்லானா மோகனா என்கிற, பாட்டி பூங்காவனத்தம்மா என்கிற பப்பிம்மா... திரையுலகில் ஜொலித்து ஜெயித்தார்.

1932ம் ஆண்டு, ஜூன் 12ம் தேதி பிறந்த பப்பிம்மாவுக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 87 வயது. கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பப்பிம்மா என்கிற பத்மினி மறைந்தார். ஆனாலும் மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் பத்மினி.

இந்த இனிய பிறந்தநாள் வேளையில்... மோகனாவை, சாவித்திரி மாமியை, பூங்காவனத்தம்மாவை... நினைத்துக்கொண்டே இருப்போம்.

பத்மினியின் புகழ் இன்னும் இன்னும் வளரட்டும்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close