[X] Close

''நான் காமெடி நடிகரானதுக்கு கிரேஸி மோகன்தான் காரணம்’’ - டெல்லிகணேஷின் ‘அவ்வை சண்முகி’ நினைவுகள்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 10:35 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

''கிரேஸி மோகன் வசனத்தைக் கேட்டுட்டு, ஜெமினி கணேசன் விழுந்து விழுந்து சிரிச்சாரு’’ என்று ‘அவ்வை சண்முகி’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ நினைவுகளை டெல்லிகணேஷ் பகிர்ந்துகொண்டார்.

நாடக ஆசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், மாரடைப்பால் கடந்த 10ம் தேதி காலமானார். அவரின் உடலுக்கு திரையுலகினர், நாடகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் டெல்லிகணேஷ், கிரேஸி மோகன் உடனான தன் அனுபவங்களை தனியார் இணையதளச் சேனல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

‘’நான் டெல்லிலேருந்து சென்னைக்கு வந்து, காத்தாடி ராமமூர்த்தி டிராமால சேர்ந்து நடிச்சிட்டிருந்தேன். ரெண்டுமூணு டிராமா பண்ணிருந்த சமயத்துலதான், ‘மோகன்னு ஒருத்தர் நல்லா டிராமா எழுதுறாரு. காமெடியா இருக்கு’ன்னு சொன்னாங்க. அப்ப நான் வெறும் கணேஷ்தான். டெல்லி கணேஷ் ஆகலை. அதேபோல அவரும் மோகன்தான். கிரேஸி மோகன் ஆகலை.

அப்போ, எங்களுக்கு ஒரு டிராமா கொடுத்தார். அதுதான் ‘ஐயா... அம்மா... அம்மம்மா’. பிரமாதமாப் பண்ணிருந்தாரு. ஒரு இடத்துல கூட கைவைக்கத் தேவையில்ல. பக்காவா இருந்துச்சு ஸ்கிரிப்ட்.

அந்த டிராமா டிவில வந்துச்சு. ரேடியோ டிராமாவா வந்துச்சு. நிறைய பேர், டிராமாவை அப்படியே ரிக்கார் பண்ணிட்டு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. பெரிய ஹிட்டாச்சு டிராமா.

அதுக்கு முன்னாடி சீரியஸா நடிச்சிருக்கேன். செண்டிமெண்ட்டா நடிச்சிருக்கேன். நல்ல கைத்தட்டல் கிடைச்சுது. ஆனா, காமெடி பண்ணி, காமெடி டயலாக் பேசி, எனக்கு முதன்முதல்ல  கைத்தட்டல் கிடைச்சிச்சுன்னா, அது கிரேஸி எழுதின டிராமால, நான் நடிச்சப்போதான்! அதனால, ‘இனிமே நாம காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கற கேரக்டர்ல நிறைய்ய நடிக்கணும்’னு முடிவு பண்ணினேன். இதுக்குக் காரணம் கிரேஸிதான்.

ரொம்ப அற்புதமான மனிதர். பண்பானவர் கிரேஸி மோகன். அடுத்தவங்களைப் பத்தி குறையே சொல்லமாட்டார். சொல்லும்படியான சூழல் ஏற்பட்டுச்சுன்னா, ‘அப்புறம் கணேஷ்... என்னென்ன படங்கள்லாம் நடிச்சிட்டிருக்கீங்க? எந்தப் படம் முதல்ல வருது?’ன்னு பேச்சை மாத்திருவாரு. அதேபோல, யாரா இருந்தாலும் பாராட்டத் தயங்கவே மாட்டாரு. அந்த அவரோட பாராட்டுற குணம் பாத்து வியந்திருக்கேன்.

ஒருநாள் கமல் போன் பண்ணினார். ‘நாளைக்கு ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கீங்களா? மலையாளம் கலந்து பேசணுமா? வாங்களேன்... ஒத்திகை பாத்திருவோம்’னு கூப்பிட்டார். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்லயே ரிகர்சல் பாத்துப்போம்னு முடிவாச்சு.

அடுத்தநாள்... கமலும் நானும் மலையாளம் பேசி ஒத்திகை பாக்குறோம். வெத்தலை சீவல் வாயோட பறந்தடிச்சிட்டு எழுந்து வந்தார் கிரேஸி. ‘இதென்ன முழுசா மலையாளமா பேசுறீங்க? தமிழும் மலையாளமும் கலந்து பேசுங்க. அப்பதான் காமெடி புரியும்’னு சொன்னார். அப்புறம் அவர் சொன்னபடியே பேசினோம். அந்த பாலக்காட்டு மணி ஐயர், காமேஸ்வரன் போர்ஷன்தான் படத்துலயே மிகப்பெரிய ஹிட்டான போர்ஷனாச்சு.

‘அவ்வை சண்முகம்’ படத்துக்கும் கிரேஸி மோகன்தான் வசனம். அதுல நாசர் ஊமையா வேஷம் போட்டுக்கிட்டு வேலை கேப்பார். அப்போ அவர் ஏதோ சொல்ல, ‘அண்ணா காயத்ரி மந்திரம் சொல்றாண்ணா’ன்னு சொல்லுவேன். இந்தக் காட்சி எடுக்கும் போது, ஜெமினி கணேசனால சிரிப்பை அடக்கவே முடியல. விழுந்து விழுந்து சிரிச்சாரு. கமலால சிரிக்க முடியல. ஏன்னா... சண்முகி மேக்கப்போட கமல் இருந்தார் அப்போ!

படத்துல மணிவண்ணன் என்னை அடிக்கிற சீன். நான், கமல், மணிவண்ணன், அப்புறம் யூனிட்ல இருக்கற எல்லாரும் சேர்ந்து சிரிச்சிக்கிட்டே இருந்தோம். மறக்கமுடியாத காட்சி அது. இப்படி பல காட்சிகள்ல தன் காமெடி எழுத்தால நம்மளையெல்லாம் சிரிக்கவைச்ச கிரேஸி மோகன், இப்ப நம்ம கூட இல்லேன்னு நினைக்கவே ஷாக்கா இருக்கு.

இவ்வாறு டெல்லிகணேஷ் தெரிவித்தார்.  

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close