[X] Close

சிரிப்பு ராஜன் கிரேஸி மோகன்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 06:57 am
  • அ+ அ-

-வீயெஸ்வி

சுற்றியிருப்பவர்களை சோகமாக்கிவிட்டு கண்ணாடிப் பேழைக்குள் கண்மூடிப் படுத்திருந்த கிரேஸி மோகனைப் பார்த்தபோது மனது பிசைந்தது. நேற்று காலைப் பொழுது அவருக்கு எப்போதும்போல் நல்லபடியாகவே விடிந்திருக்கிறது. காபி குடித்துவிட்டு மனைவி, மக்களுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று 10 மணிஅளவில் உடல் வியர்த்திருக்கிறது. நெஞ்சுவலித்திருக்கிறது. அவசரமாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சற்று நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது - அவசர சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. Cardiac arrest.

இந்த மாதம் 4-ம் தேதி கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவுடன், மோகன் ஆஸ்திரேலியா செல்வதாகத் திட்டம். தேதி நெருக்கத்தில், “என்னையும் அழைச்சுட்டுப் போனா உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும். பேசாம டிரிப்பை இப்போ கேன்சல் செய்துடு. செப்டம்பரில் போய்க்கலாம். அப்பவும் நான் வரலே... நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” என்று, தம்பி பாலாஜியிடம் சொல்லியிருக்கிறார். மோகனின் மனதில் என்ன மணி அடித்ததோ?அடுத்தவரை சிரிக்க வைக்காமல் கிரேஸிமோகனால் இரண்டு நிமிஷம்கூட பேச முடியாது. அவர் பேசுவதைக் கேட்பவர்களுக்கு இரண்டு மணி நேரம் நினைத்து நினைத்து சிரிக்காமல் இருக்க முடியாது. நாடக மேடை மட்டுமில்லாமல், மாடவீதி வெற்றிலைச் சீவல் கடையில் கிரேஸி மோகனை சந்திக்க நேரிட்டாலும் இதுவே நிலைமை. அந்த அளவுக்கு நகைச்சுவைப் பித்தன் அவர்.

தமிழ் நாடக மேடை நலிந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஆதரவு குறைந்துவிட்டதாகவும் எதிர்மறைக் குரல்கள் எழுந்த நேரத்திலெல்லாம் கூட கிரேஸி மோகனின் நாடகங்களுக்கு கூட்டம் அள்ளியது. சபாக்கள் மட்டுமின்றி, கார்ப்பரேட் அலுவலகங்களில் எல்லாம் கூரை அதிர சிரிக்க வைத்தது. தமிழ்நாடு தவிர, இந்தியா முழுவதும் பயணித்தது. விமானமேறி வெளிநாடுகள் பலவற்றுக்கும் பறந்தது. உலகம் முழுவதும் கிரேஸி விசிறிகள் பெருகினார்கள்.

நாடக மேடையுடன் தன் நகைச்சுவை ஆற்றலை நிறுத்திக் கொள்ளாமல் வெள்ளித் திரைக்கும் அதைக் கடத்திச் சென்றார் கிரேஸி மோகன். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. முக்கியமாக அவர் வசனம் எழுதிய ‘கமல்ஹாசன் படங்கள்’ பார்த்தவர்கள் வயிறு புண்ணாகி தியேட்டரைவிட்டு வெளியே வந்தார்கள். ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘பஞ்ச தந்திரம்’ போன்ற சினிமாக்களில் இடம்பெற்ற விரசமில்லாத கிரேஸி பிராண்ட் நகைச்சுவை காட்சிகள் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுத்தது நிஜம்.

தனக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் தலையில் ஏற்றிக்கொண்டு திமிர் பிடித்துஅலையாதவர் கிரேஸி மோகன். பந்தா காட்டத் தெரியாதவர். யாரிடமும் எளிதில் பழகக்கூடியவர். எளிமையானத் தோற்றம் கொண்டவர். கலைந்த தலையுடன் சரியாக இஸ்திரி போடாத டி-ஷர்ட்டின் முதல் இரண்டு பட்டன்களைத் திறந்துவிட்டுக்கொண்டு, வெற்றிலை - சீவல் இத்யாதிகளை ரெக்ஸின் பையில் போட்டு எடுத்துக்கொண்டு மிகவும் காஷுவலாகவே அவரை பார்க்க முடிந்தது.

பொறியியல் பட்டதாரி. டி.வி.எஸ் குழும கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தவர். எழுத்துப் பணி அதிகமாகவே தொழிலைத் துறந்தவர். ஆனந்த விகடனில் இணைந்து சிறிது காலம் பணியாற்றியவர். அப்போது அங்கே அனைவருக்கும் நோய்விட்டுப் போன காலம் அது - வாய்விட்டுச் சிரித்ததால்!நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும் மோகனிடம் வேறு இரண்டு திறமைகளும் ஒளிந்திருந்தன. மிக அருமையாக ஓவியம் வரைவார். அற்புதமாக வெண்பா எழுதுவார். பகவான் ரமணரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து அவர் எழுதிய வெண்பாக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, கர்னாடக ராகங்களில் அவற்றுக்கு மெட்டமைத்து மிகச் சமீபத்தில் நடந்த கச்சேரிக்கு, அரங்கம் வந்தார் மோகன். சற்று முடியாமல்தான் காணப்பட்டார்.

மறுநாள் காலை தொலைபேசியில் என்னை அழைத்து, “நேற்று வந்திருந்தீங்களா?’’ என்று கேட்டவர், “உங்க வீட்டுக்கு கட்டாயம் வரேன்... காபி குடிச்சுட்டு ஜாலியா அரட்டை அடிக்கணும்…” என்றார். ஆனால் வரவில்லை. நேற்று அந்த சிரிப்பு ராஜனின் மறைவுச் செய்தி மட்டுமே வந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close