[X] Close

என் வாழ்வின் எல்லாமுமாக இருந்தவர்: கிரேசி மோகன் மறைவுகுறித்து நடிகர் சதீஷ் உருக்கம்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 17:53 pm
  • அ+ அ-

பிரபல நாடக ஆசிரியர் கிரேசி மோகன் மறைவுகுறித்து, ‘என் வாழ்வின் எல்லாமுமாக இருந்தவர்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவை நடிகரான சதீஷ், கிரேசி மோகனின் நாடகக்குழுவில் பணியாற்றியவர். ‘என் வாழ்வின் எல்லாமுமாக இருந்தவர்’ என கிரேசி மோகனின் மறைவுகுறித்து உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சதீஷ்.

“என் வாழ்வின் தொடக்கமாய் இருந்து, என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்து, என் மாதாவாக, பிதாவாக, குருவாக, இறைவனாக இருந்தவர், இன்று இறைவனிடம் சென்றுவிட்டார். நீங்கள் இருந்தவரை, உங்களால் மட்டுமே சிரித்துப் பழகிய நாங்கள், முதல்முறையாக அழுகிறோம்... நீங்கள் இல்லாததால்” எனப் பதிவிட்டுள்ளார் சதீஷ்.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close