[X] Close

கிரேசி மோகன் மறைவு: மு.க.ஸ்டாலின், தமிழிசை இரங்கல்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 17:40 pm
  • அ+ அ-

பிரபல நாடக ஆசிரியர் கிரேசி மோகன் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின், தமிழிசை செளந்தரராஜன் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“திரையுல கதை - வசனகர்த்தாவாகவும் நடிகராகவும் பணியாற்றி, பல மேடை நாடகங்களை இயக்கி, நடித்த கிரேசி மோகன், உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிப்படையில் பொறியாளரான அவர், அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடக ஆசிரியராக, கதை - வசனகர்த்தாவாக விளங்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், திரையுலக, நாடக உலக நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

“பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close