[X] Close

கான் திரைவிழா 2019: கைபேசி கேமரா முதல் கான் விருது வரை


2019

  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 09:46 am
  • அ+ அ-

-ம.சுசித்ரா

நல்ல கதை - திரைக்கதை, அற்புதமான பின்னணி இசை, நறுக்கான எடிட்டிங், அபாரமான நடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

ஆனால், படத்தைப் பார்த்து முடித்துத் திரையரங்கத்தைவிட்டு வெளியேறிய பின்பும் படத்தின் ஒரு காட்சியேணும் பார்வையாளர் மனத்தில் ஒட்டிக்கொண்டு இமைகளை மூடும்போதெல்லாம் கண்களுக்குள் தோன்றுமானால் அதுவே காலத்தை வென்ற திரைப் படைப்பு. அந்த வகையில் முதல் காட்சியிலேயே கதை மாந்தரின் மனவோட்டத்தை, கதை செல்லும் திசையை உணர்த்தக்கூடிய பிம்பங்களைத் திரையில் பதிவுசெய்துவிடுகிறது மதுரா பலித்தின் கேமரா.

நடந்து முடிந்த 72-வது கான் திரைப்பட விழாவில், உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ‘பியரி அங்கனீஸ் ஸ்பெஷல் என்கரேஜ்மெண்ட்’ விருதை வென்றிருக்கிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த மதுரா பலித். கான் திரைப்பட விழாவில் வழங்கப்படும் இந்த உயரிய விருதைப் பெற்றிருக்கும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் இவர்.

ஐஃபோனில் பதிவான இருள்

பழமைவாய்ந்த கொல்கத்தா நகருக்குள் பாயும் ஹூக்ளி நதியின் படித்துறையில் இருக்கும் ஒரு மரப் பலகையில் உறங்கிக்கொண்டிருக்கிறான் அந்தச் சிறுவன். விடியற்காலையில் அவனைத் தட்டி எழுப்புகிறது நாளிதழ் மூட்டை தரையில் விழும் ஓசை. வீதிவீதியாகச் சென்று நாளிதழ் போடும் ஆதரவற்ற அந்தச் சிறுவனைப் பற்றிய ‘பேப்பர் பாய்’ குறும்படத்தை இந்தக் காட்சி அமைப்புகளோடு தொடங்குகிறார் ஒளிப்பதிவாளர் மதுரா பலித். தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2016, 21-ம் கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டது உள்ளிட்ட பல பெருமைகளைப் பெற்றது இந்தப் படம்.

சுவர்க்கோழி கொக்கரிக்கும் நள்ளிரவில் வீட்டின் முன் தொங்கும் மங்கலான மின்விளக்கின் கீழ் அமர்ந்திருக்கிறார் நடுத்தர வயது பெண் ஒருத்தி. அந்த விளக்கையும் அணைத்துவிட்டுத் தன் வீட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள இருளால் நிரம்பி வழிகிறது திரை. மூன்று கதாபாத்திரங்களின் தனிமையைக் கதைக் கருவாகக் கொண்ட ‘மனோகர் அண்ட் ஐ’ என்ற வங்காளத் திரைப்படத்தின் கடைசிக் காட்சி இது. மதுரா பலித்தால் ஐஃபோனில் படம் பிடிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு சர்வதேச கேரளத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

cannes.jpg 

பெண்ணுக்கான சவால்

தாய், தந்தை இருவருமே ஒளிப்படக் கலைஞர்கள் என்பதால் ஒளிப்பதிவாளராகும் கனவுடனே வளர்ந்தவர் மதுரா. குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் சத்யஜித் ராய் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். ஒளிப்பதிவானது முற்றிலும் ஆண்களின் ஆடுகளமாக இருந்துவருவதால் பல புறக்கணிப்புகளை எதிர்கொண்டார். “திறமையை நிரூபிக்கறதுக்கு முதல்ல யாராவது வாய்ப்பு தரணும்ல?

இங்க ஒளிப்பதிவாளரென்றாலே வாட்டசாட்டமான ஆம்பிளையாத்தான் இருக்கணும்னு நினைக்கிறாங்க. அதனால ‘உன்னால கேமராவத் தூக்க முடியுமா?’, ‘20 மணிநேரம் ஷூட்டிங் பண்ணுவியா?’ போன்ற கேள்விகள்தாம் துரத்திக்கிட்டே இருக்கு. இதைத் தாண்டி ஷூட்டிங் ஃப்ளோருக்குள்ள ஒரு பெண் நுழைவதுங்கிறதுதான் பெரிய சவால்” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மதுரா, இந்தியாவின் முதல் வெர்ச்சுவல் ரியாலிட்டிப் படத்தை ஒளிப்பதிவு செய்தவர்.

இவரது ஒளிப்பதிவில் உருவான ‘வாட்ச்மேக்கர்’ என்ற குறும்படத்தை வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக்கழகம் திரைக் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் இந்தத் திரைப் பெண்ணின் திறமையைக் கூடுதல் வெளிச்சத்துடன் புரிந்துகொள்ள முடியும்.

cannes 2.jpg

பட்ஜெட் தெரியக் கூடாது!

குறும்படம், ஆவணப்படம், விளம்பரப் படம், திரைப்படம் எனப் பல்வேறு வகைப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் 28 வயதான இவர். இதுபோக சீன இளைஞர் திரைப்படத் திட்டத்துடன் இணைந்து ‘தி கேர்ள் அக்ராஸ் தி ஸ்ட்ரீம்’ (The Girl Across The Stream) படத்தைப் படம்பிடித்து, இயக்கி, தொகுத்து 2015-ல் வெளியிட்டார். ஆசியத் திரைப்பட அகாடமியுடன் சேர்ந்து ‘மீட் சோஹீ’ (Meet Sohee) கொரியன் குறும்படத்தை இயக்கினார்.

இவர் பணி புரிந்த அனைத்துப் படங்களுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உண்டென்றால் அது பட்ஜெட்தான். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் மட்டுமே இதுவரை பணிபுரிந்திருக்கிறார். பட்ஜெட்டை மீறி அத்தகைய படங்களில் பணிபுரியத் தூண்டியது காட்சி மொழியில் புதிய பார்வையை உண்டாக்கத் துடிக்கும் சக கலைஞர்கள்தாம் என்கிறார்.

 “மின் தட்டுப்பாடுக் கிடையில், கொட்டும் மழையில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது என்றெல்லாம் நம் படத்தைப் பார்ப்பவர்களிடம் சொல்ல முடியாது. படத்தைத் திரையில் காணும்போது இத்தகைய குறைபாடுகள் தெரியாதபடி படம் பிடிக்க வேண்டிய சவாலை நான் ஒவ்வொரு முறையும் எதிர்கொண்டிருக்கிறேன். சில நேரம் ட்ரைபாட் ஆக, கேமரா ரிக் ஆக என் தோள்களை மாற்றித்தான் படம்பிடித்திருக்கிறேன்.

cannes 3.jpg

இப்படி பட்ஜெட் போதாமையை நான் என்னை வைத்தே சரிசெய்வதுண்டு. இதற்கிடையில் ஒளிப்பதிவாளருக்கான உயரிய கவுரவமும், அதிநவீனமான விலை உயர்ந்த Optimo Ultra 12X கேமரா லென்ஸும் விருதாக அளிக்கப்பட்டிருப்பது என்னுடைய கேமரா காதலுக்குக் கிடைத்த உண்மையான அங்கீகாரம்” என்று விருது வழங்கிய விழாவில் ஏற்புரை வழங்கினார் ஒளிரும் ஒளிப்பதிவாளர் மதுரா.

புதுச்சேரியின் மைந்தர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொம்பள்னே கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ரஹிபாய் பாப்ரே. இவருடைய வாழ்க்கையையும் இவர் செய்துவரும் பாரம்பரிய இயற்கை விவசாயத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட மூன்று நிமிட குறும்படம் ‘சீட் மதர்’ (Seed Mother). இந்தப் படத்தை இயக்கியவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் திவேதி. 72-வது கான் திரைப்பட விழாவில் இந்தப் படம், ’நெஸ்ப்ரெஸோ டேலண்ட் 2019’ பிரிவில் மூன்றாம் பரிசை வென்றுள்ளது.

ஆரோக்கியமான உணவு தனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற வேள்விதான் அச்சுதானந்தை புதுச்சேரியில் இருந்து மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச் சென்றது. அதே உணர்வுதான் கான் திரைப்பட விழாவிலும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்து வரும் அச்சுதானந்த், அடுத்ததாகத் தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய படம் ஒன்றையும் இயக்கவிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close