[X] Close

'மேரி’ ராதாவுக்கு ஹேப்பி பர்த்டே!


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 11:18 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

லலிதா, பத்மினி, ராகினி என சகோதரிகள் கோலோச்சிய காலம், தமிழ் சினிமாவில் உண்டு. அந்த சகோதரிகளுக்கு அடுத்தபடியாக, சகோதரிகள் இருவர், எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தார்கள். வாராவாரம் அவர்களின் படங்களே அவர்கள் படங்களுக்குப் போட்டியாக இருக்கும். அக்காவுக்குத் தங்கை, தங்கைக்கு அக்கா என போட்டி போட்டுக்கொண்டு வலம் வந்தார்கள். அந்த அக்கா அம்பிகா. தங்கை... ராதா.

லலிதா சகோதரிகள் போலவே அம்பிகா, ராதாவுக்கும் கேரளாதான் பூர்வீகம். அக்கா அம்பிகா, 79ம் ஆண்டு, தமிழில் ‘சக்களத்தி’ படத்தில் அறிமுகமானார். 81ம் ஆண்டு, தங்கை சந்திரிகா ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமானார். ஆமாம்... ராதாவின் இயற்பெயர் சந்திரிகா. பாரதிராஜாவின் ‘ஆர்’ சென்டிமென்ட் காரணமாக, ராதா எனப் பெயர் மாற்றப்பட்டது.

முதல் படமே ஹிட்டானது. நாயகனும் நாயகியும் கொண்டாடப்பட்டார்கள். ராதாவுக்கு வரிசையாகப் படங்கள் வந்தன. ‘வாலிபமே வா வா’, ‘டிக் டிக் டிக்’, ’காதல் ஓவியம்’ என பாரதிராஜாவின் படங்களில் வரிசையாக நடித்தார். இதில், ‘காதல் ஓவியம்’ படத்தில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராதா.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மேரி கேரக்டரில், அச்சுஅசல் கிறிஸ்தவப் பெண் போலவே இருந்தார் ராதா. தவிர, முதல் படம் போல் இல்லாமல், பல இடங்களில், தைரியமாக க்ளோஸப் வைக்கப்பட்டது.

ராதாவுக்கும் கார்த்திக்கிற்கும் ஜோடிப்பொருத்தம் அமர்க்களம் என விமர்சனங்கள் வந்தன. அதேசமயம், கார்த்திக், சுரேஷ், சிவக்குமார், மோகன் என நடித்துக்கொண்டே இருந்தவர், கமலுடனும் ரஜினியுடனும் ஜோடி சேரத் தொடங்கினார். அவ்வளவுதான்... மளமளவென மார்க்கெட் எகிறியது.

ao.jpg 

மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையில் கமலுடன் நடித்த படம் ரிலீசாகும். இன்னொரு வாரத்தில் ரஜினியுடன் நடித்த படம் வெளியாகும். இந்தப் பக்கம், மோகனுடன் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் ஹிட்டாகியிருக்கும். அந்தப் பக்கம் பார்த்தால், விஜயகாந்துடன் நடித்த ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படு வெற்றி அடைந்திருக்கும்.

நடிகர்களைப் போலவே எல்லா இயக்குநர்களும் கதை ரெடி பண்ணும்போதே, ராதாதான் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தார்கள். பாரதிராஜா, ராம.நாராயணன், எம்.பாஸ்கர், எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், கே.ரங்கராஜ், ஏ.ஜெகநாதன், பரணி, ஆர்.சுந்தர்ராஜன், பாலு ஆனந்த் என பல இயக்குநர்கள் தங்களின் படங்களில் ராதாவை நடிக்கவைத்தார்கள். மனிதனின் மறுபக்கம், மறுபக்கம், நியாயத்தராசு, அம்மன் கோவில் கிழக்காலே, அண்ணாநகர் முதல் தெரு, எங்க சின்ன ராசா, நினைவே ஒரு சங்கீதம் என பல படங்களில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தி, அசத்தியிருந்தார்.

மரணத்தை நோக்கிக் காத்திருக்கும் ’நினைவே ஒரு சங்கீதம்’ கேரக்டரும் கர்வமும் அலட்டலுமாக இருக்கும் ’அம்மன் கோவில் கிழக்காலே’ கேரக்டரும் சொத்துக்கு ஆசைப்படும் மாமியாரின் சதியை முறியடிக்கும் மருமகளாக ‘எங்க சின்னராசா’ கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.

ஆரம்பத்தில், கிளாமர் நாயகியாக அறிமுகமானாலும் அடுத்தடுத்த படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்தார். இது, அடுத்தடுத்து வந்த, வர இருக்கிற நடிகைகள் அறிந்து உணர வேண்டியது ரொம்பவே அவசியம்.

‘ஒரு கைதியின் டைரி’ படத்திலும் ‘முதல் மரியாதை’ படத்திலும் ராதாவின் நடிப்பு, தனித்துக் கொண்டாடப்பட்டது. அதிலும் ‘முதல் மரியாதை’யில் சிவாஜிக்கு நிகராக நடித்திருந்தார். ரவிக்கை அணியாமலும் கொசுவம் வைத்த புடவை அணிந்துகொண்டும், பரிசல்கார கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருந்தார் ராதா.

எண்பதுகள், கமல் - ரஜினியின் காலம். இளையராஜாவின் காலம். பாரதிராஜா, பாக்யராஜின் காலம். அதேபோல், அம்பிகா - ராதாவின் காலம். அம்பிகா ஒருபக்கம் நடிப்பால் அசத்த, ராதா இன்னொரு படத்தில் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கி ரசிக மனங்களை அள்ளினார்.

ஆனாலும் கூட அந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ மேரியை யாரால்தான் மறக்கமுடியும்.

நடிகை ராதாவுக்கு இன்று (3.6.19) பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே ராதா மேடம்!

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close