[X] Close

'தங்கப்பதக்கம்’ செளத்ரிக்கு இன்றுடன் 45 வயது!


45

  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 11:14 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

தமிழ் சினிமாவில் போலீஸ் கதையைக் களமாகக் கொண்டு எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. இன்னும் இன்னும் எத்தனையோ படங்கள் வர இருக்கின்றன. எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும், எஸ்.பி.செளத்ரிக்கு நிகராக எவருமே வரமுடியாது என்பதுதான், தங்கப்பதக்கத்தின் வெற்றி. அந்த செளத்ரியும் அவரின் நெஞ்சில் குத்திக்கொண்டு கம்பீரத்துடனும் பெருமையுடனும் காட்சி தரும் தங்கப்பதக்கமும், யாரால்தான் மறக்கமுடியும்?

உண்மையான போலீஸ்காரருக்கு பொய்யும்புரட்டுமாக ஒரு மகன். ஒரேயொரு மகன். வீட்டில் ஆரம்பிக்கிற திருட்டு, சூதாடுகிற புத்தி என்று அப்பனுக்குத் தப்பிப் பிறக்கிறான். சிக்கிக்கொள்கிறான். கூடுதல் பணம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு, ஊரைவிட்டு ஓடுகிறான். வடக்கே மாட்டிக்கொண்டு, சிறுவர் ஜெயிலில் அடைபடுகிறான். அந்த ஜெயில் வாழ்க்கையில் திருந்துவதற்குப் பதிலாக, இன்னும் பல சூதுவாதுகளையும் கெட்டதுகளையும் கற்றுக்கொண்டு வருகிறான்.

காசுபணத்தின் மீது ஆசை. அப்பாவின் மீது வெறுப்பு. எது செய்தாலும் அப்பாவுக்கு வலிக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய டார்கெட். அப்படியொரு கோபவிளைவில், குற்றவாளியின் மகளை மணந்துகொண்டு வந்து நிற்கிறான். ஆனால், சொக்கத்தங்கம் அவள்.

மகனின் தவறும் குறுக்குபுத்தியும் தெரியவர, அவனை ஆதாரத்துடன் பிடிக்க நாடகம் போடுகிறார் போலீஸ் அப்பா. அதில் வசமாய்ச் சிக்கிக்கொள்கிறான். இன்னும் கோபம் அதிகமாகிறது அப்பா மீது!

வீட்டைவிட்டே மனைவியுடன் செல்கிறான். அம்மாக்காரி துக்கித்துப் போகிறாள். கணவன் பக்கமும் நிற்கமுடியவில்லை; மகன் செய்வதும் தவறு என வெதும்புகிறாள். நொந்துபோகிறாள்; நோய்வாய்ப்படுகிறாள். படுத்தபடுக்கையாகிறாள். இறந்தும்போகிறாள்.

அங்கேயும் மகனாலேயே அவமானப்படுத்தப்படுகிறார். ஆனாலும் சட்டத்தை மீறுகிற மகனை, சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க போராடுகிறார். இறுதியில் தான் தூக்கிவளர்த்துக் கொஞ்சிய மகனையே சுட்டுக்கொல்கிறார்.

மிகப்பெரிய தேசவிரோத செயலை தன் முயற்சியால், கட்டிக்காத்த அந்தப் போலீஸ் அதிகாரிக்கு, தங்கப்பதக்கம் கிடைக்கிறது.

இந்தக் காக்கிச்சட்டைக்கான கடமையை செவ்வனே செய்துவிட்டோம் என்கிற நினைவு மட்டும் கண்ணில் நிழலாட நிற்கிறார். படம் முடிந்தும் கூட, நம் மனங்களில் எல்லாம் இன்றைக்கும் நின்றுகொண்டிருக்கிறார், டிஎஸ்பி செளத்ரி.

பாசம் காட்டுகிற கே.ஆர்.விஜயா, நம் அம்மாவை ஞாபகப்படுத்துவார். கண்டிப்புக் காட்டுகிற போதெல்லாம், கண்டிப்புடன் அன்பை வெளிப்படுத்துகிற போதெல்லாம் சிவாஜிகணேசன், அப்பாக்களை நினைவுபடுத்துவார். ஏட்டிக்குப்போட்டியாக இருக்கும் மகன் ஸ்ரீகாந்த், நம் பால்யங்களைத் தொட்டு, நம் தவறுகளை நமக்கே சுட்டிக்காட்டி, சூடுபோடுவார்.

குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு, இங்கும் அங்குமாக அறையில் செல்வார் சிவாஜி. ‘பயலை எவ்ளோ நேரம்தான் தோள்ல சுமந்துட்டிருப்பீங்க?’ என்பார் கே.ஆர்.விஜயா. ‘நீ பத்துமாசம் சுமந்துருக்கியே. நான் பத்துசெகண்டாவது சுமக்கிறேனே...’ என்பார். முன்னதாக அவர்களுக்குள் நடக்கிற கேலியையும் சண்டையையும் ரகளையாகப் பண்ணியிருப்பார்கள் இருவருமே!

‘எலிமெண்ட்ரி ஸ்கூல்லேருந்து என்னை அடிச்சிக்கிட்டிருக்கியேடா’ என்று சொல்கிற பால்ய நண்பன் வி.கே.ராமசாமியும் அவ்வப்போது வருவார். அப்படி வரும்போதெல்லாம் அந்தக் கேரக்டருக்குக் கனம் சேர்த்து, பெருமையும் சேர்த்துவிடுவார். கொலைகார மேஜர் சுந்தர்ராஜனைப் பிடிக்கும் போதும் ஆர்.எஸ்.மனோகரை அடித்து உதைத்து கைது செய்யும்போதும் சிவாஜி தன் நடிப்பாலும் வசன நக்கல்களாலும் கலக்கியிருப்பார்.

பார்க்கிற எல்லோரின் வெறுப்புகளையும் சம்பாதிக்கிற கதாபாத்திரம் ஜகன் ஸ்ரீகாந்துக்கு. பேச்சில் அலட்சியம், வார்த்தைகளில் விஷம், செயல்களில் தேச விரோதம்

எலெக்‌ஷன்ல நிக்கிற. எந்த அருகதையும் உனக்கில்லையே. ஏண்டா நிக்கிறே? - எதுவும் இல்ல. அதனாலதான் நிக்கிறேன் என்று படத்தில் வருகிற போதேல்லாம் அரசியல் சரவெடிகளை, திரிகிள்ளிப் போட்டு வெடிக்கச் செய்துகொண்டே இருப்பார் சோ. இதில் இரண்டு சோ வேறு. நக்கல்நையாண்டிக்கு கேட்கவா வேண்டும்? போலீஸ் சோ, அரசியல்வாதி சோ. அதிலும் அரசியல் சோ, வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்று சொல்லிக் கலாய்த்தெடுத்துவிடுவார்.

பையனுக்கு முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட ரூமில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும். ‘சரி அந்தப் பாலை எடு’ என்பார். வெட்கிப் போவார். ரேடியோவில், ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு. ஆனால் இதுதான் முதலிரவு’ பாட்டு.

மறுநாள். டைனிங் ஹால். ‘என்ன இது சாப்பாட்டுல உப்பும் இல்ல; புளிப்பும் இல்ல’ என்று சத்தமிடுவார். ‘வயசாயிருச்சுன்னா, இதெல்லாம் குறைக்கணும் மாமா’ என்பார் மருமகள் பிரமிளா. சாதத்தை உருட்டி உருட்டிச் சாப்பிடுவார் ஸ்ரீகாந்த். இது குடும்பத்துக்கு ஆகாது என்பார் பிரமிளா. எப்படி என்பார் சிவாஜி. என் மருமக இல்லியா அதான் என்பார் கே.ஆர்.விஜயா. நம்ம மருமகன்னு சொல்லேன் என்பார் சிவாஜி. அடுத்த சீன்... வாசலில் மேஜர் நிற்பார். சாப்பிட்ட துகள் பல்லிடுக்கில் ஒட்டிக்கொண்டதை நாக்கால் எடுத்துக்கொண்டிருக்கிற பாவனையில் ஸ்டைலாக வருவார் சிவாஜி!

மகன் ஸ்ரீகாந்தை அப்பா சிவாஜி மிகச் சாமர்த்தியமாகப் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவார். எல்லாம் முடிந்ததும் ‘என்ன, சாப்பிடலையா?’ என்று விஜயாவிடம் கேட்பார். ‘ஒருநாள் சாப்பிடலேன்னா உயிரா போயிரும்?’ என்று முகம் தூக்கிக்கொள்வார். மருமகள் பிரமிளாவிடம் கேட்பார். அவரும் ‘ஒருநாள் சாப்பிடலேன்னா உயிரா போயிரும்’ என்று வாட்டத்துடன் சொல்லுவார். பிறகு ஒரு அதட்டல் போடுவார் சிவாஜி. இருவரும் டைனிங் டேபிளில் சாப்பிட உட்காருவார்கள். அவர்களுக்குப் பரிமாறுவார் சிவாஜி. ‘இதுக்கு முன்னாடி, எத்தனையோ பேரை கைது பண்ணிருக்கேன். நீ சந்தோஷப்பட்டிருக்கே. ஏன்னா... அவங்க யாரும் உனக்கு உறவு இல்ல’ என்பார். ‘நீங்க ஒண்ணை மறந்துட்டீங்க. உன்னோட பையன்னு நீ நினைக்கிறே. அவளோட கணவன்னு அவ நினைக்கிறா. ஆனா, அவன் என் பையன்னும் எனக்கும் இது வலிக்கும்னும் யாருமே நினைக்கலை’ என்று கலங்குவார். அப்போது, ‘மாமா நீங்க சாப்பிட உக்காருங்க’ என்பார் பிரமீளா. ‘ஒருநாள் சாப்பிடலேன்னா, உயிராப் போயிரும்’ என்று அவர்களின் டயலாக்கையே சொல்லிவிட்டுச் செல்வார். தியேட்டரில் விசில் சத்தம் பட்டையைக் கிளப்பும்.

அம்மா இறந்துட்டாடா என்று ஸ்ரீகாந்த் வீட்டில் நிற்கும்போது படுகிற அவமானம்... அந்தத் தகப்பனுக்கானது மட்டுமின்றி, நாம் படுகிற வலியாகவே உணர்ந்து கதறினார்கள் ரசிகர்கள்.

tp.jpg 

‘பெரியமனுஷனா இருக்கறதுக்கு ரெண்டு தகுதிகள் இருக்கு. ஒண்ணு... நன்றியை மறக்கறது. இன்னொன்னு... நல்லவங்களை மறக்கறது. என்பார் சோ. தியேட்டரில் விசில் பறக்கும்.

மனுநீதி சோழனின் கதைதான் அடித்தளம். ஆனால் அந்தக் கதைக்குள் சமூக, விரோத, அரசியல், சட்ட சிக்கல்களையும் நுணுக்கங்களையும் அவலங்களையும் ஆபத்துகளையும் அத்தனைத் துல்லியமாகச் சொல்லியிருப்பார் கதை, வசனகர்த்தா மகேந்திரன்.

ஸ்ரீகாந்த் வேலை செய்யும் சிட்பண்டில் பணம் திருடுபோயிருக்கும். விசாரிக்க வருவார் சிவாஜி. அப்போது இருவருக்குமான கான்வர்சேஷன் அசத்தல். இறுதியாக, மிஸ்டர் ஜெகன். விசாரணை முடியும் வரை வெளிநாடு போகக்கூடாது என்பார் சிவாஜி. ‘எங்க அம்மாவும் அப்பாவும் எம்மேல ரொம்பப் பாசமா இருக்கறவங்க சார். பக்கத்து ஊருக்குக் கூட என்னை தனியா அனுப்பமாட்டாங்க’ என்பார் நக்கலாக. உடனே சிவாஜி, ‘வேலூருக்குப் போறதா இருந்தா, தனியாத்தான் போகணும் சார்’ என்பார் படு நக்கலாக!

இப்படி காட்சியும் காட்சிக்கான வசனங்களும்  வசனங்களைச் சொல்லும்போதான முகபாவங்களும் ஒன்றோடொன்று போட்டிப் போடும்.

மகன் - அப்பா., கணவன் - மனைவி, மாமா - மருமகள், அதிகாரி - செளத்ரி என்று யாருடன் நின்று நடிக்கும்போதும் அதற்கேற்ற பாடிலாங்வேஜில் மிரட்டியெடுத்துவிடுவார் எஸ்பி சிவாஜிகணேசன்.

தத்திச் செல்லும் பாடல், நல்லதொரு குடும்பம், சுமைதாங்கி சாய்ந்தால்..., சோதனை மேல் சோதனை என்று பாட்டுக்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பியிருக்கும். கண்ணதாசன், எம்.எஸ்.வி. ஜோடியின், இசை ஆட்டம்... சக்கைப்போடுபோட்டிருக்கும்.

இன்னும் நிறைய காட்சிகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் சிவாஜியைப் பார்த்துப்பார்த்து, பிரமித்துச் சொல்லி, பூரித்து புளகாங்கிதப்பட்டிருப்பார்கள் ரசிகர்கள்.

நாடகமாக வந்து, பிறகு பி.மாதவனால் இயக்கப்பட்டு, பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற தங்கப்பதக்கத்தையும் எஸ்பி செளத்ரியையும் மறக்கவே முடியாது நம்மால்!

1974ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதி ‘தங்கப்பதக்கம்’ வெளியானது. இதோ... இப்போது 45 வருடங்களாகிவிட்டன. இத்தனை வருடங்களாகியும் எஸ்பி செளத்ரிக்கு ரிடையர்டே கிடையாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close