[X] Close

திரை விமரசனம்- தேவி 2


2

  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 08:04 am
  • அ+ அ-

நாலு பக்கமும் தண்ணீர் சூழ்ந்த நிலப்பரப்புக்கு அழைத்துச் சென்றால் பேயிடம் இருந்து மனைவி தமன்னாவை காப்பாற்றலாம் என ஜோதிடர் சொல்ல, தமன்னாவுடன் மொரீஷியஸ் தீவுக்கு புறப்படுகிறார் பிரபுதேவா. ஆனால், அங்கோ காதல் ஆசை நிறைவேறாமல் சுற்றிக்கொண்டிருந்த அலெக்ஸ், ரெங்கா ரெட்டி என்ற 2 இளைஞர்களின் ஆன்மாக்கள் ஒரே நேரத்தில் பிரபுதேவாவின் உடம்புக்குள் பேயாக நுழைகின்றன. இதை அறிந்துகொள்ளும் தமன்னா, அந்த பேய்களை விரட்ட கோவை சரளாவின் உதவியை நாடுகிறார்

இருவரும் சேர்ந்து பேய்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள். அதன் மூலம் பேய்களை வழிக்கு கொண்டு வந்து, பிரபுதேவாவை மீட்டெடுக் கலாம் என்பது அவர்கள் திட்டம். ஆவிகள் அதை ஏற்றுக்கொண்டதா? பிரபுதேவா விடுபட்டாரா என்பதே ‘தேவி 2’.

முதல் பாகத்தில் கிருஷ்ணன் - தேவியாக வந்த பிரபுதேவா - தமன்னா ஜோடியே 2-ம் பாகத்திலும் தொடர்கிறார்கள். இதையும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் ரூபி ஆவியைக் காட்டி ஆட்டம் காட்டிய இயக்குநர், இதில் இரு அருவங்கள் பிரபுதேவாவின் உடலுக்குள் புகுந்து படுத்துவதாய் காட்டி, ‘காமெடி த்ரில்லர்’ என்ற பெயரில் நம்மைப் படுத்துகிறார்.

சுவாரஸ்யமற்ற திரைக்கதை ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. பிரபுதேவாவின் உடலில் நுழைபவை காதல் நிறைவேறாத ஆன்மாக்கள் என்பதற்கான பின்னணி காரணமும் பெரிதாக ஈர்க்கவில்லை.

பிரபுதேவா வழக்கம்போல ‘ஸ்லிம் ஃபிட்’, ‘ஸ்டைல் லுக்’கில் கவர்கிறார். ஒரே உடம்பில் 3 பாத்திரங்களைக் காட்ட, மூன்று விதமான அங்க அசைவுகளைக் காட்டி அசத்துகிறார்.

கணவர் மீது காதலாகி கசிந்து உருகுவதில் தமன்னா ஸ்கோர் செய்கிறார். ஆனால், வலுவான காட்சி யமைப்பு இல்லாததால் இருவரது மெனக்கெடலும் விழலுக்கு இறைத்த நீராகின்றன.

நந்திதா, டிம்பிள் ஹயாதி, சிறப்பு தோற்றத்தில் வரும் சோனு சூட், அஜ்மல், அர்ஜய் ஆகியோரும் படத்தின் கதையை நகர்த்தப் பயன்படுகிறார்கள். ‘ஆர்ஜே’ பாலாஜி சின்ன ரோலில் வந்து சிரிக்க வைக்கிறார். கோவை சரளா சில இடங்களில் சிரிக்க வைத்து, பல இடங்களில் சோதிக்கிறார்.

ஆவி அவ்வப்போது கதவை திறந்து வீட்டுக்குள் வருவதும், திடுக்கிட்டு எழும் பிரபுதேவா கதவை தாழிட்டதும் காற்றின் சத்தம் குறைந்து நிசப்தம் நிலவுவதுமாக சில இடங்கள் காட்டப்படுகின்றன. இந்த இடங்களில், வீட்டின் உள்பகுதிக்கு பதிலாக, வெளிப்பகுதி நிசப்தம் அடைகிறது. ஏன் இந்த கவனக்குறைவு?

சாதாரண காட்சிகளையும் சற்றே திகிலாய் தூக்கிக் காட்ட துணை நிற்கிறது சாம் சி.எஸ். பின்னணி இசை.

மொரீஷியஸ் தீவின் கடற்கரை, வண்ணமயமான வீடுகள், தூய்மை யான கடைத்தெரு ஆகியவற்றை மேலும் அழகாக காட்டுகிறது அயனங்கா போஸ் ஒளிப்பதிவு. தமன்னா தவிர மற்றவர்களின் மேக்கப் ஏனோ உறுத்தல். பவுடர் பூசிக்கொண்டு வந்து நிற்பது அப்பட்டமாக தெரிகிறது.

இது திகில் கலந்த விறுவிறுப்பான படமா? கலகல காமெடி தெறிக்க வைக்கும் படமா? என்ற குழப்பத் தில் இரட்டைப் பாதையிலும் பயணித் திருக்கிறார் இயக்குநர். அதனால், திகிலும் இல்லாமல், காமெடியும் ஈர்க்காமல் நகர்கிறது படம்.

இரட்டைப் பேய், அவற்றுடன் கான்ட்ராக்ட் போடுவது, இந்த விஷயத்தில் ஆவிகள் எடுக்கும் முடிவு ஆகிய நல்ல சரக்குகளை வைத்துக் கொண்டு, திரில், திகில், கலகலப்பு ஆகியவற்றில் மெனக்கெட்டிருந்தால், ‘தேவி 3’-க்கு ரசிகர்களை காக்க வைத்திருக்கலாம்.

tt.JPG 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close