[X] Close

ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள்: வடிவேலு காட்டம்


  • kamadenu
  • Posted: 31 May, 2019 14:48 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள் என்று வடிவேலு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலக அளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani. 

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால், வடிவேலுவின் புகழ் மீண்டும் சமூக வலைதளங்களை ஆட்கொண்டுள்ளது. இதற்காக வடிவேலு தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

#Pray_for_Neasamani விவகாரம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் வடிவேலு. அதில், அவர் மீண்டும் நடிக்கத் திரும்புவதில் உள்ள சிக்கல் மற்றும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் உள்ள சிக்கல் தொடர்பாகவும் பேசியுள்ளார்.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ குறித்துப் பேசியுள்ள வடிவேலு, “எனது யோசனைகள் இல்லாமல் எப்படி புலிகேசி படம் எடுக்க முடியும்? ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இரண்டல்ல, மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறேன்.

எனது ஈடுபாடு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இல்லாமல் எப்படி வெற்றிபெற முடியும்? ஆக்‌ஷனும் காமெடியும் வேறு வேறு. எனக்கும் ஆக்‌ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் கூட, எனது மாமாவாக நடித்த நாசர் கதாபாத்திரத்தை கொல்லச் சொன்னார்கள். திரையில் கூட யாரையும் கொல்வதற்கு எதிரானவன் நான். எனவே, அந்தக் காட்சியை மாற்றினார்கள்.

இந்தப் படத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட காட்சியில் எனக்கு உடன்பாடில்லை. நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், ‘வாருங்கள் பேசுவோம்’ என்கிறார்கள். நான் ஏன் போக வேண்டும்? நான் நடிக்கத் தயார். நீங்கள் சொல்வது சரியென்றால் நான் ஏற்றுக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து என் வளர்ச்சியை முடக்குகிறார்கள். என் கையில் 10 படங்கள் உள்ளன. ஆனால், என்னால் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close