[X] Close

நடிகர் சங்க நில மோசடி விவகாரம்: சரத்குமார், ராதாரவி மே 20-ல் ஆஜராக சம்மன்


20

  • kamadenu
  • Posted: 18 May, 2019 07:43 am
  • அ+ அ-

நடிகர் சங்க நிலம் மோசடியாக விற்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்காக வரும் மே 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் இடம் இருந்தது. கடந்த 1986-ம்ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி, இந்தஇடத்தை கீர்த்திராஜ் என்பவரிடம் இருந்து நடிகர் சங்கத்துக்காக வாங்கினார். பின்னர் இந்த இடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

அந்த இடம் நடிகர் சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தற்போதுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர். இந்த புகார் தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, நடேசன், செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது கடந்த ஜூன் மாதம் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் விரைவில் முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். மனுவை விசாரித்தநீதிபதி, புகார் குறித்து விசாரணை நடத்தி, 3 மாதங்களில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்டகுற்றப்பிரிவு போலீஸாருக்குஉத்தரவிட்டார்.

விஷால் ஆஜராகவில்லை

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை கடந்த 10-ம்தேதி நேரில் வந்து தாக்கல்செய்யும்படி ஏற்கெனவே விஷாலுக்கு சம்மன் அனுப்பினர். அவர் படப்பிடிப்பில் இருப்பதால் வேறொரு நாளில்ஆஜராவதாகக் கடிதம் கொடுத்திருந்தார். இந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை மட்டும்அவரது மேலாளர் மூலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்களும் முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளுமான ராதாரவி, சரத்குமார் ஆகியோரும் வரும் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “நடிகர் விஷால் தரப்பில்ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. அவரிடம் எழுத்துப்பூர்வமான வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் வரும் மே 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close