[X] Close

டிஜிட்டல் மேடை 27: பனிக் காட்டில் வளர்ந்த ஒருத்‘தீ’


27

  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:01 am
  • அ+ அ-

-எஸ்.எஸ்.லெனின்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ‘ஹன்னா’. அதே தலைப்பில் அதே கதையை இணையத் தொடருக்கு ஏற்ற வகையில் நீட்டியும் ஆங்காங்கே கிளைக் கதைகளைப் பொருத்தியும்  ‘ஹன்னா’ இணையத் தொடர் உருவாகியுள்ளது.

அமேசானில் எட்டு அத்தியாயங்களுடன் வெளியான இந்தத் தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீஸனுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

போலந்தின் உறைபனிக் காட்டில் பதுங்கியபடி, ஏராளமான ரகசியங் களுடன் மகளை வளர்க்கிறார் ஒரு தந்தை. சிறுமி ஹன்னா பிறவியிலே சிறப்புத் திறன்களுடன் வளர, அவளது அப்பா எரிக் கூடுதலாகத் தற்காப்புக் கலை முதல் பன்னாட்டு மொழிகள்வரை கற்றுத் தருகிறார்.

சிறுமிக்கு 15 வயதாகும்போது தந்தையின் எச்சரிக்கையை மீறிக் காட்டுக்கு வெளியே சென்று வருகிறாள். பல காலமாக அவளைக் கொல்லத் தேடியலையும் எதிரிகள், சிறுமியை அடையாளம் காண அதுவே வாய்ப்பாகிறது. மகளிடம் அவளது கடந்த காலத்தை அந்த அப்பா விளக்குவதுடன் காட்டிலிருந்து தப்பிக்கவும் உதவுகிறார்.

கடந்த காலத்தில் சி.ஐ.ஏ மேற்கொண்ட ‘மரபணு மாற்றப்பட்ட போர் வீரர்களை’ உருவாக்கும் அட்ராக்ஸ் என்ற ரகசியத் திட்டத்தில் எரிக் பணிபுரிந்திருக்கிறார். எரிக் மூலம் இணங்கி வந்த பெண்களில் ஒருத்தியாக ஹன்னாவின் தாயும் இந்தத் திட்டத்துக்கு குழந்தையைப் பெற்றெடுத்துத் தருகிறாள். திடீரெனத் திட்டத்தைக் கைவிடுவதாக சி.ஐ.ஏ அறிவிக்க, குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

ஹன்னாவின் தாய் மீதான தனது காதலால் எரிக் அவளது குழந்தை உயிர் தப்ப உதவுகிறார். அட்ராக்ஸ் ரகசிய திட்டத்தின் சூத்திரதாரியான பெண் அதிகாரி, ஹன்னாவைக் கொல்ல முன்னெடுக்கும் வேட்டையில் ஹன்னாவின் தாய் கொல்லப்படுகிறாள். குழந்தையுடன் தப்பித்து அடர் பனிக்காட்டில் அடைக்கலமாகும் எரிக், சிறுமியை அவளது விஷேசத் திறன்களில் பட்டை தீட்டி வளர்க்கிறார்.

15 வருடங்களுக்குப் பின்னர் சி.ஐ.ஏ அமைப்பின் உயர் பதவியை அலங்கரிக் கும் அந்தப் பெண் அதிகாரிக்கு ஹன்னா உயிருடன் இருப்பது தெரிந்ததும் கொலை விரட்டலின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. தாயைக் கொன்றவர்களைப் பழிவாங்க பயிற்சிவிக்கப்பட்ட ஹன்னா, தன் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பித்து ஓடுகிறாள்.

தனது பிறப்பு, அதனையொட்டிய தனது தந்தை மற்றும் கொலைகார சி.ஐ.ஏ அதிகாரியின் கடந்தகால ரகசியங்களை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். இடையே ஹன்னாவுக்குக் காதல் வருகிறது.

5.jpg 

உயிர்த் தோழி கிடைக்கிறாள். சொந்தக் குடும்பத்தை அடையாளம் காண்கிறாள். தந்தையைப் பிரிந்து சேர்கிறாள். கடைசியாய் சி.ஐ.ஏ. மீண்டும் கட்டமைத்த புதிய அணி மரபணு மாற்ற பெண் வீராங்கனைகளை எதிர்கொள்கிறாள்.

ஒரு திரைப்படத்தின் கதையை உருவி, அதனை இணையத் தொடராக்குவதற்கான மெருகூட்டல் அனைத்தையும் அளவாக ஹன்னாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். திரில்லரும் ஆக்‌ஷனும் கலந்த கதையில் பதின்மச் சிறுமி வெளியுலகைத் தரிசிப்பது, தன் வயதை ஒத்தவர்களுடன் கலப்பது, பருவத்தின் எதிர்பாலீர்ப்பை உணர்வது, குடும்பப் பாசத்துக்காக ஏங்குவது, தோழிக்குத் துரோகம் செய்ததாக மருகுவது என அவ்வப்போது சுவாரசியமான காட்சிகள் கலந்து செல்கின்றன. திரைப்படத்தின் சாராம்சத்தை இணையத்தொடருக்காக இழுவையாக்குவதன் தடுமாற்றங்களை இந்தக் கலவைகள் ஒப்பேற்றுகின்றன.

ஹன்னாவைவிட அவளைக் கொலைவெறியுடன் துரத்தும் சி.ஐ.ஏ அதிகாரியாக வரும் மிரைல் இனோஸ் ஈர்க்கிறார். கள்ளத்தனம் மினுங்கும் கண்களுடன் புன்னகை மாறாது அவர் பிரவேசிக்கும் காட்சிகள் தொடருக்கு வேகம் தருகின்றன.

பால்முகம் மாறாது சீறும் சிறுமி ஹன்னாவாக எஸ்மே க்ரீட் மைல்ஸ் வளையவருகிறார். சி.ஐ.ஏ பங்கேற்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஏராளமான சொதப்பல்கள் இருந்தாலும் கதையில் அதற்கான காரணங்களையும் கவனமாகப் புகுத்தி ஒப்பேற்றுகிறார்கள்.

 ‘ஹன்னா’ திரைப்படத்தை இணைந்து உருவாக்கிய டேவிட் ஃபார் இணையத் தொடருக்கான கதையையும் உருவாக்கி உள்ளார். சாரா அடினா ஸ்மித் இயக்கி உள்ளார். சி.ஐ.ஏ கடத்திச் செல்லும் மரபணு மாற்றப்பட்ட பெண் வீராங்கனைகளால் அடுத்த சீஸனுக்கான எதிர்பார்ப்புகளுடன் ‘ஹன்னா’ முதல் சீஸன் முடிந்திருக்கிறது.

ஹன்னா திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்கு, இந்த இணையத் தொடர் மேலும் ரசனையான அனுபவமாக அமையும்.

முன்னோட்டத்தைக் காண:

 https://bit.ly/2HtmHbw

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close