[X] Close

என் மீதும் பாய்கிறது வெளிச்சம்! - அஞ்சலி பேட்டி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:01 am
  • அ+ அ-

-கா.இசக்கிமுத்து

‘கற்றது தமிழ்’, ‘அங்காடி தெரு’ படங்களின் மூலம் தமிழில் நிரந்தர இடம்பிடித்தவர் அஞ்சலி. தற்போது. ‘லிசா’ என்ற பெண் மையப் பேய்ப் படத்தில் துணிந்து நடித்திருக்கிறார். அஞ்சலியிடம் உரையாடியதிலிருந்து...

‘லிசா' பட அனுபவம் எப்படி இருந்தது?

கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. தவிர 3டி படம் என்றவுடன் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டேன்.  நிஜத்தில் பேய் பயம் உண்டு. ஆனால், படப்பிடிப்பில் பயந்ததில்லை. நடிப்பு என்றவுடன் பயம் போய்விடும்.

கொடைக்கானலில் பெரிய வீட்டில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேய் இருப்பதாகச் சொன்னார்கள். அதற்காகவே படப்பிடிப்பு முடித்த கடைசிநாள் இரவு, இயக்குநர்  உட்பட மொத்த படக்குழுவும் அந்த வீட்டில் போய்த் தங்கிவிட்டுக் காலையில் வந்தார்கள்.

அந்த வீட்டில் பேயும் இல்லை, ஒன்றுமில்லை என்றார்கள். அந்த விஷப் பரீட்சைக்குப் போகாமல் நான் நழுவிட்டேன். பேயாக நடிப்பது சரி; பேயோடு விளையாடுவது எல்லாம் எனக்குப் பிடிக்காது.

முதன்முறையாக கதாநாயகியை முன்னிறுத்தும் கதையில் நடித்திருக்கிறீர்கள்..

ஆமாம்.. படப்பிடிப்பு செம ஜாலியாக இருந்தது. நம்மை முன்னிலைப்படுத்தியே அனைத்தும் நடக்கும். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் பெரிய பொறுப்பு அது. படத்தில் என்னைத்தான் பார்க்கப் போகிறீர்கள், நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது என்னை மட்டுமே சேரும். ஆகையால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தேன்.

இப்போது பேய் படங்களுக்கு பெரியதாக வரவேற்பு இல்லை. ஒருசில படங்கள் மட்டுமே விதிவிலக்கு. ரசிகர்களின் இந்த மனநிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரசிகர்கள் அப்படிப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.  நல்ல கதையாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ‘லிசா' படத்தை முன்பே வெளியிட்டு இருந்தால், இப்போது வந்திருக்கும் இறுதிவடிவம் கிடைத்திருக்காது.

காமெடி இருக்கா, இல்லயா என்று ரசிகர்கள் பார்ப்பார்களா எனத் தெரியவில்லை. ஹாரர் அல்லது ஹாரர் காமெடி என எந்த வகையாக இருந்தாலும் அதில் கதையும் காட்சிகளும் சரியாக அமையவேண்டும். ரசிகர்கள் இதை மட்டுமே பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கதாநாயகிகளை முன்னிறுத்தும் கதைகள் அதிகரித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சில படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன், அதில் கதாநாயகி இருப்பதையே மறந்துவிடுவார்கள். அந்த அளவுக்குத்தான் சினிமாவில் கதாநாயகிகளின் இடம் இருக்கும்.

 கதாநாயகிக்கு முக்கியத்துவம் என்றால், பெண் மையக் கதைகளில் மட்டுமல்ல; நாயகர்கள் சார்ந்த படத்திலும் கொடுக்கப்பட வேண்டும். அது இப்போது அதிகரித்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. அந்த வெளிச்சம் என் மீதும் பாய்வதில் மகிழ்ச்சி. 

கமர்ஷியல் படம், ஒரு பாடலுக்கு நடனம், நடிப்புக்கு முக்கியத்துவம் என அனைத்திலுமே ஆர்வம் காட்டுகிறீர்களே?

சினிமா என்றால் எனக்கு உயிர். அதில் ஒரு அங்கமாக எப்போதுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ரசித்து நடிப்பேன். கமர்ஷியல் படங்கள் என வரும்போது மக்களை மகிழ்விப்பது மட்டும்தான் நோக்கம்.

ஒற்றைப் பாடலுக்கு  இருமுறை மட்டுமே ஆடியிருக்கிறேன். ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினால் என்ன தவறு எனத் தோன்றியதால் நடனமாடினேன்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்ன செய்வீர்கள்?

பட்டியலிட்டு வைத்திருந்த படங்கள் அனைத்தையும் பார்த்து முடித்துவிடுவேன். படங்களை பார்த்து முடித்துவிட்டால் அடுத்து இணையத் தொடர்களைப் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அவை சினிமாக்களை மிஞ்சத் தொடங்கிவிட்டன.

பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் போதெல்லாம், சினிமாதான் காரணம் என்ற பேச்சும் வந்துவிடுகிறது. இதற்கு உங்களுடைய பதில்?

சினிமாவில் நல்ல விஷயங்களும் சொல்கிறார்கள். சினிமாவை எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் விஷயம். ஒரு ஹீரோ நூறு பேரைக் காப்பாற்றுகிறார் என்றால், நிஜத்தில் காப்பாற்றுவதில்லை ஏன்? அதை ஏன் யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

ஒரு பெண்ணை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அனைத்து விஷயங்களுமே இருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் மாற்றம் வர வேண்டும். அது எந்த வகையில் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் மீதான பார்வை கண்டிப்பாக மாற வேண்டும்.

13 ஆண்டுகள் திரையுலக வாழ்க்கையில் கற்றுக்கொண்டது என்ன?

என்ன கற்றுக்கொண்டேன் என்பதைவிட, பல விஷயங்களில் முன்னேறி இருக்கிறேன் என்று சொல்லலாம். ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் குழந்தைத்தனமாக உடனே கோபம் வந்துவிடும். இப்போது அப்படியில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close