[X] Close

மாற்றுக்களம்: சாதியில் உலவும் உளவியல்!


  • kamadenu
  • Posted: 16 May, 2019 19:24 pm
  • அ+ அ-

-கோபால்

‘இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா’ என்பது சாதியக் கொடுமைகள் நடக்கும்போது ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பகிரப்படும் வஞ்சப் புகழ்ச்சி வாசகம். இந்த வாசகத்தையே தலைப்பாகக் கொண்ட ஒரு குறும்படத்தை வெளியிட்டி ருக்கிறது ‘காம்ரேட் டாக்கீஸ்’ என்ற யூடியூப் அலைவரிசை.

ஏழு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் சாதியை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பலருக்குள் இருக்கும் சாதி குறித்த பிரச்சினைக் குரிய உளவியல் பார்வையை மிக அழுத்தமாகவும் கச்சிதமாகவும் பதிவு செய்கிறது இந்தக் குறும்படம்.

ராகுல் பாலாஜி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கண்டண்ட் ரைட்டராக இருந்துகொண்டே குறும்படங்கள் இயக்கிவரும் அஸ்வின் என்ற நவநாகரிக இளைஞனும் அவன் ஃபேஸ்புக்கில் விரும்பிப் பின்தொடரும் மகிழ்ந்தன் என்பவரும்தான் மையக் கதாபாத்திரங்கள்.

சாதிய ஏற்றத்தாழ்வு உள்படச் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைகளுக்கு எதிரான மகிழ்ந்தனின் பதிவுகள் அஸ்வினைப் பெரிதும் ஈர்க்கின்றன. அவர் ஃபேஸ்புக்கில் பதிவு போட்டவுடன் தனக்கு மொபைலில் நோட்டிஃபிகேஷன் வருவதற்கான ஏற்பாட்டைத் தன் ஃபேஸ்புக் பக்க அமைப்புகளில் செய்துவைத்திருக்கிறான்.

ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கும் போதுகூட நோட்டிஃபிகேஷன் வந்தவுடன் மகிழ்ந்தனின் பதிவை முழுமையாகப் படித்து அந்தப் பதிவைத் தான் மிகவும் விரும்புவதை வெளிப்படுத்தும் ‘இதயக் குறி’யை இடுகிறான். இவற்றின் மூலம் அஸ்வினுக்கு மகிழ்ந்தனின் கருத்துகள் மீதிருக்கும் பெரும் மதிப்பும் அவற்றைப் படிப்பதில் இருக்கும் ஆர்வமும் தெரியவருகிறது.

மகிழ்ந்தனை ஒரு காபிக் கடையில் யதேச்சையாகச் சந்திக்கும் அஸ்வின் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். சாதியக் கொடுமைகள் குறித்து மகிழ்ந்தன் எடுக்கவிருக்கும் ஆவணப் படப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறான்.

“ஏன்?” என்று கேட்கிறார் மகிழ்ந்தன். சிறுவயதிலிருந்து சாதியக் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அஸ்வின், தன் வீட்டுப் பணிப் பெண்ணுக்குத் தன் அம்மா காபி கொடுப்பதில்கூடத் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதை நினைவுகூர்கிறான்.

அப்போது மகிழ்ந்தன் “உங்கள் அம்மாவுக்குள் இருக்கும் சாதிய உணர்வு உங்களுக்குள் இல்லையா?” என்று கேட்கிறார். அதற்குத்  தனக்கு “லோ காஸ்ட் (கீழ்ச் சாதி) நண்பர்கள்” பலர் இருப்பதாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறான் அஸ்வின்.

ரு புன்னகையை உதிர்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுகிறார் மகிழ்ந்தன். அவர் சென்றவுடன் அஸ்வினுக்கு இன்னொரு ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் வருகிறது. மகிழ்ந்தனின் அந்தக் குறும்பதிவு அஸ்வினுக்கு அவனது ‘சாதிய எதிர்ப்பு’ப் பார்வையில் உள்ள பிழையைப் புரியவைக்கிறது.

இந்தப் படம் அஸ்வினை மட்டுமல்ல, “எனக்கு எல்லா ஜாதியிலும் ஃப்ரெண்ட்ஸ் இருக் காங்க”, “எங்க வீட்ல என்னோட எல்லா ஃப்ரெண்ட்ஸையும் அனுமதிப்பேன்”, ”நா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருடனும் சமமாகப் பழகுவேன்.

அவங்ககூட ஒன்றாக உக்காந்து சாப்பிடுவேன்” என்றெல்லாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பலரையும் சாதிய எதிர்ப்பில் தாம் எங்கிருக் கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்ய வைக்கிறது. 

சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள் பவர்களும் அதை எதிர்த்து ஏதேனும் வகையில் செயல்படுபவர்களும் எந்த வகையான ஏற்றத்தாழ்வும் இல்லாத சமூகம் வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புபவர்களும் தங்களுக்குள் சாதி உணர்வு இருக்கிறதா என்று எப்போதும் தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சாதி எதிர்ப்பில் இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி தான். இந்தச் செய்தியைக் குறைவான காட்சிகள், கதாபாத்தி ரங்கள், வசனங்களுடன் புரிய வைத்திருக்கும் இந்தக் குறும்படம் வரவேற்கத்தக்க முயற்சி.

குறும்படத்தைக் காண: https://bit.ly/2Q3wY2l

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close