[X] Close

ரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சை: தீர்த்துவைத்த சிவகார்த்திகேயன்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 20:09 pm
  • அ+ அ-

‘Mr. லோக்கல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ சங்கர் பேச்சால் சர்ச்சையானது. இறுதியில், தன்னுடைய பேச்சில் விளக்கமளித்து தீர்த்துவைத்தார் சிவகார்த்திகேயன்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Mr. லோக்கல்’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஹிப் ஹாப் ஆதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில், ரோபோ சங்கர் பேசும்போது, படக்குழுவினரைப் புகழ்ந்து பேசிவிட்டு, ஒரு விஷயம் கேட்க வேண்டும் என பேசியது சர்ச்சையாக முடிந்தது.

“பத்திரிகையாளர்களுக்குப் படம் போட்டால் ஏன் ரொம்ப அமைதியாகப் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. குடும்பத்துடன் படத்துக்குப் போனால் இப்படித்தான் பார்ப்பீர்களா? எனக்குத் தெரியவில்லை. இங்குள்ளவர்கள் கைதட்டி ரசித்தால்தான், வெளியே இருப்பவர்கள் பலரும் கைதட்டி ரசிப்பார்கள். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தைத்தான் சிரித்து ரசித்துப் பார்த்தீர்கள். நானும் பல ப்ரஸ் ஷோக்களுக்கு வந்து, ரொம்ப அமைதியாகப் பார்த்ததால் எழுந்து எல்லாம் போயிருக்கேன். அதுக்காகவே பத்திரிகையாளர்கள் காட்சி என்றால் வருவதே கிடையாது. நல்ல காமெடியை இப்படி முறைத்துப் பார்க்கிறார்களே என்று பயப்படுவேன்” என்று ரோபோ சங்கர் தெரிவித்தார்.

இதற்கு, “உங்களுக்கு கைதட்டிக் கொண்டிருந்தால் பேசுவதை எப்படிக் குறிப்பெடுப்பது? அதுமட்டுமல்லாமல், மக்களோடு போய் முதல்நாள் படம் பார்த்தால், கைதட்டி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது பல வசனங்கள் எங்களுக்குப் புரிவதில்லை” என்று பல பத்திரிகையாளர்கள் கோபப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தவர்களைப் பேச அழைக்கும்போது, கைதட்டல்களுடன் அழைக்கிறேன் என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் கூறினார். இதுவும் சர்ச்சையாகி, “இது பத்திரிகையாளர் சந்திப்பா என்னது...” என்று பத்திரிகையாளர்கள் மீண்டும் கோபப்பட்டனர். பின்பு அமைதியானது.

இறுதியாகப் பேசிய சிவகார்த்திகேயன், “ரோபோ சங்கர் அண்ணனுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறேன். அண்ணா... ஒரு ப்ரஸ் ஷோ, ப்ரஸ் மீட் என்றால், அவர்களும் என்ஜாய் பண்ணுவார்கள். தினமும் 2 ப்ரஸ் மீட், 2 ப்ரஸ் ஷோ என்றால், அவர்களும் என்னதான் பண்ணுவார்கள். நம்ம எல்லாம் நமக்குப் பிடித்த படத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அவர்களோ, அனைத்துப் படங்களையும் பார்த்தாக வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு இது வேலையாகவே மாறிவிட்டது.

இப்போது எங்களை மேடைக்கு அழைக்கும்போதுகூட, ‘ஏன் யாருமே கைதட்டவில்லை?’ என்று ரோபோ சங்கர் கேட்டார். ‘வந்திருப்பவர்கள் எல்லாம் ப்ரஸ்ண்ணே... ஃபேன்ஸ் இல்ல’ என்று தமிழில்தான் சொன்னேன். பேசிவிட்டு அமர்ந்தபிறகு, ‘என்னப்பா... நான் ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா?’ என்றார். ‘அண்ணே... ப்ரஸ் அண்ணே... ஃபேன்ஸ் இல்ல அண்ணே’ என்று திரும்பவும் சொன்னேன். பத்திரிகையாளர்கள், பணிக்காக வந்துள்ளனர். இப்போதாவது புரிந்துவிட்டதா அண்ணே..?

நம்ம என்ன பேசப் போகிறோம் என்பது, நம்மைவிட அவர்களுக்கு முன்பே தெரியும். இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், அப்புறம் கூட நடித்தவர்களைப் பற்றி சொல்லுவீங்க. ‘இந்த ஆர்டர்தானே?’ என்பார்கள். அவர்களது கடமையை அழகாகச் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்குத் தெரிந்து படங்கள் பார்க்கும்போது, காமெடி நன்றாக இருந்தால் சிரிக்காமல் யாரும் இருக்கவே முடியாது. அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி, அவர்களும் மனிதர்கள்தானே... படங்கள் நன்றாக இருக்கும்போது சிரிக்கத்தான் செய்வார்கள். ‘ரஜினிமுருகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்” என்று பேசி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close