[X] Close

ப்ரான்சிஸ் கிருபாவுக்கு தொடர் வாய்ப்பு: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் அறிவிப்புக்கு குவியும் பாராட்டு


  • kamadenu
  • Posted: 12 May, 2019 14:58 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ப்ரான்சிஸ் கிருபாவுக்கு தொடர் வாய்ப்பு வழங்கவுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் அறிவிப்புக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ப்ரான்சிஸ் கிருபா. மது போதைக்கு அடிமையானதால் அனைத்து தொடர்புகளையும் இழந்து, ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போனார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டு மார்க்கெட் பகுதியில் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்று செய்திகள் பரவியது. காவல்துறையினர் ப்ரான்சிஸ் கிருபாவை கைது செய்தனர். ஆனால் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் வலிப்பு வந்து விழுவதைப் பார்த்துள்ளார். உடனே அவர் அருகில் சென்று முதலுதவி செய்ய முயற்சி செய்தார். வலிப்பு வந்த நபருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

அவரது நெஞ்சை அழுத்தி செயற்கை சுவாசம் அளித்து முதலுதவி செய்துள்ளார். இதை அங்குள்ள சிலர் பார்த்துவிட்டு இருவருக்குள்ளும் சண்டை நடக்கிறது என்று நினைத்து ப்ரான்சிஸ் கிருபாவைத் தாக்கியுள்ளனர். இதற்குள் மாரடைப்பு வந்த நபர் இறந்து போனார். இதனை சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ மூலம் தெரிந்து கொண்டு, ப்ரான்சிஸ் கிருபாவை விடுதலை செய்தது காவல்துறை.

இதனைத் தொடர்ந்து ப்ரான்சிஸ் கிருபாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவருக்கு தெரிந்த இயக்குநர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து பாராட்டினார்கள். மேலும், சிலர் பாடல் எழுதும் வாய்ப்பும் வழங்கினார்கள்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் படங்களில் ப்ரான்சிஸ் கிருபாவுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையை சமூகவலைத்தளத்திலும் வெளியிட்டது.

இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் செயலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close