[X] Close

முதல் பார்வை: 100


100

  • kamadenu
  • Posted: 11 May, 2019 22:28 pm
  • அ+ அ-

-உதிரன்

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டே குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் காவல்துறை அதிகாரியின் கதையே '100'.

தப்பு எங்கு நடந்தாலும் துணிச்சலுடன் தட்டிக்கேட்கும் இளைஞர் அதர்வா. போலீஸ் வேலை அவருக்காகக் காத்திருக்கிறது. கல்லூரியில் தன் நண்பனின் தங்கையைக் கலாய்த்த இளைஞனை வெளுத்து வாங்குகிறார். இன்னொரு பக்கம் நண்பனுக்குக் கடன் கொடுத்த கவுன்சிலரைப் புரட்டி எடுக்கிறார். இந்த சூழலில் அவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வர, ஏகப்பட்ட கனவுகளுடன் காவல்துறையில் எஸ்.ஐ.ஆகப் பணியில் சேர்கிறார்.

ஆனால், அவருக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ரவுடிகளை, தவறு செய்கிறவர்களைப் போட்டு துவம்சம் செய்ய நினைத்த அதர்வா 100க்கு போன் செய்பவர்களிடம் பேச வேண்டிய சூழலை நினைத்து நொந்து போகிறார். இந்நிலையில் அவருக்கு வரும் 100-வது செல்போன் அழைப்பு அவரையும், அவரைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் திருப்பிப் போடுகிறது.

உண்மையில் அப்படி என்ன நடக்கிறது? அந்த செல்போன் அழைப்பால் நிகழும் விபரீதம் என்ன? புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதர்வாவால் அந்தப் பணியைச் சரியாகச் செய்ய முடிந்ததா? போன்ற கேள்விகளுக்கு மிக நேர்த்தியாக பதில் சொல்கிறது திரைக்கதை.

குழந்தை கடத்திய கும்பலைப் பிடிப்பதில் வேகம் காட்டுவது, பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து புத்திசாலித்தனமாக இயங்குவது என பரபர போலீஸுக்கான கச்சித உடல்மொழியில் அதர்வா செம ஃபிட்.  வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். ஸ்லோமோஷன் காட்சிகளுக்கும் சேர்த்தே நாயக பிம்பத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

ஹன்சிகா 3 காட்சிகள், ஒரு பாட்டுக்கு வந்துவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார். மைம் கோபியும், சீனு மோகனும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். ராதாரவி அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். நரேன், சிவகுமார், சரவணன், நிரோஷா ஆகியோருக்கு முக்கியத்துவம் இல்லை. யோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.

கிருஷ்ணன் வசந்தின் கேமரா ஆக்‌ஷன் படத்துக்கான டோனை அப்படியே அள்ளி வந்திருக்கிறது. சாம் சி.எஸ். பின்னணி இசையில் கதையின் ஓட்டத்துக்கு ஒத்துழைத்துள்ளார். ஹன்சிகா- அதர்வா சந்திப்பு, டியூஷன் என்று முதல் பாதியில் சில இடங்களை ப்ரவீன் கத்தரி போட்டு குறைத்திருக்கலாம்.

போதைப்பொருள் கடத்தும் கும்பல்,  பெண்களைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் குறித்த குற்றப் பின்னணியை விவரித்த விதத்தில் இயக்குநர் சாம் ஆண்டன் எளிமையான கதை சொல்லும் உத்தியில் அதிர வைக்கிறார். குழந்தையைக் கடத்திய கும்பலை சாதுர்யமாகக் கண்டுபிடிக்கும் உத்தி பாராட்டுக்குரியது. படத்தின் நீளம்தான் கொஞ்சம் சோர்வை வரவழைக்கிறது. திருப்பங்களும் கொஞ்சம் அதிகம். குற்றப் பின்னணியில் இருப்பது யார் என்பதை கடைசியில் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

பாடல், பன்ச் உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களைத் தவிர்த்துப் பார்த்தால் '100’ தரமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உள்ளது.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close