[X] Close

'உலகம் சுற்றும் வாலிபன்’... 46 வயது ; - வசூல் மன்னன் எம்ஜிஆரின் மெகா ஹிட்!


46

  • kamadenu
  • Posted: 11 May, 2019 14:16 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

காலுக்கு சக்கரமும் தோளுக்கு றெக்கையும் கட்டிக்கொண்டு, உலகத்தையே சுற்றி வருகிறார் என்று ஒரு சிலரைச் சொல்லுவார்கள். ‘என்ன, உலகம் சுற்றும் வாலிபனா நீ?’ என்று ஊர் சுற்றுபவர்களைக் கிண்டலாகக் கேட்பார்கள். இவையெல்லாம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகுதான்! எம்ஜிஆரின் மிகப் பிரமாண்டமான படங்களில் மிக முக்கியமான படம்... ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

எம்ஜிஆர் நடித்த படங்களில் செம ஹிட்டடித்த படங்கள் பல உண்டு. அவரே தயாரித்த நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் இந்த மூன்று படங்கள் மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடப்பட்டன. இதில், நாடோடி மன்னனும் உலகம் சுற்றும் வாலிபனும் எம்ஜிஆர் தயாரித்து, நடித்து, இயக்கிய படங்கள்.

‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்றொரு வாசகம், ‘நாடோடி மன்னன்’ படச் செலவினால் சொல்லப்பட்டது. மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் தந்தது. சினிமாவில், வசூல் மன்னனானார் எம்ஜிஆர். அதன் பிறகு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை அடுத்து, நாட்டுக்கே மன்னரானார். முதலமைச்சரானார்.

கலர்ஃபுல் படம். ஹைடெக்காக ஓர் கதை. அங்கங்கே, ரகசியத்தைக் கண்டறிய நாடுநாடாகச் செல்லும் திரைக்கதை, ‘நீங்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க. ஆனா அவரோ அடுத்து யார் ஆட்சி யார் ஆட்சின்னு சொல்லிட்டிருக்காரு’ என்பதான வசனங்கள் படம் நெடுக உண்டு. ஆமாம், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சி ஆரம்பித்த பிறகு, கருப்பு சிகப்புக்கு நடுவே அண்ணாவின் படத்தைக் கொடியாக்கிய பிறகு வந்த இந்தப் படத்தில், எம்ஜியார் பிக்சர்ஸ் கம்பெனியின் லோகோவில், அதிமுக கொடியும் அங்கம் வகித்தது.

இன்றைக்கு, தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல்.

திமுகவில் இருந்து பிரிந்து, கட்சி ஆரம்பித்த சமயத்தில், இந்தப் படம் வந்தது. எனவே, இந்தப் படத்துக்கு அப்போதைய ஆளும் திமுக அரசு, எக்கச்சக்க முட்டுக்கட்டைகள் போட்டன. அதில், போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதும் ஒன்று. ’உலகம் சுற்றும் வாலிபன்’ தமிழகத்தில் போஸ்டர்களே ஒட்டப்படாமல், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சாதனையெல்லாம் எம்ஜிஆருக்கு மட்டுமே சாத்தியம்.

விஞ்ஞானி ராஜூ ஒரு எம்ஜிஆர். அவரின் தம்பி போலீஸ் அதிகாரி இன்னொரு எம்ஜிஆர், விஞ்ஞானியின் காதலி மஞ்சுளா. உதவியாளர் லதா. உடன் இருப்பவர்களில் அசோகனும் மனோகரும் முக்கியமானவர்கள். விஞ்ஞான ரகசியத்தை அசோகன் கேட்கிறார். ஆனால் தரமறுக்கிறார். மேலும் அந்த ரகசியக் குறிப்புகளை ஒவ்வொரு இடத்தில் வைக்கிறார். ஒவ்வொருவரிடத்திலும் கொடுத்து வைக்கிறார். இதில் ஆவேசமான எம்ஜிஆரை சுட்டு, அவரை தன் கஸ்டடிக்குக் கொண்டு வருவதற்காக, அசோகன் சுடுகிறார்.

அண்ணனையும் ரகசியத்தையும் தேடி தம்பி எம்ஜிஆர் வருகிறார். லதாவைச் சந்திக்கிறார். அவருடன் அண்ணியார் மஞ்சுளாயும் சந்திக்கிறார். அதன் பின்னர், அந்த ரகசியங்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை, செம எமோஷனலாக, பக்கா கமர்ஷியலாகச் சொல்லியிருப்பார் இயக்குநர் (எம்ஜிஆர்). அதேபோல் கெளரவ வேடத்தில் வந்து மிரட்டிவிடுவார் நம்பியார்.

பன்சாயி, லில்லி மலருக்குக் கொண்டாட்டம், தங்கத் தோணியிலே, அவள் ஒரு நவரச நாடகம், சிரித்து வாழவேண்டும், உலகம் என எல்லாப் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கிக் கொடுத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நாகேஷும் தேங்காய் சீனிவாசனும் இருந்தாலும் அப்படியொன்றும் காமெடி இல்லை. அதேசமயம், காமெடியையெல்லாம் எதிர்பார்க்காத அளவுக்கு, கதையும் திரைக்கதையும் போட்டிபோட்டுக்கொண்டு வேகமெடுத்தன.

’அவள் ஒரு நவரச நாடகம்’ பாடலும் நீந்திக்கொண்டிருக்கும் லதாவைப் படம் பிடித்ததும் பேசப்பட்டது. ஜப்பான் எக்ஸ்போ விழா வாய் பிளந்து பார்க்கப்பட்டது. எம்ஜிஆர், இந்தப் படத்தின் மூலமாக வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்தார்.

73ம் ஆண்டு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியானது. 72ம் ஆண்டு, அன்னமிட்ட கை, இதயவீணை, ராமன் தேடிய சீதை முதலான படங்களும் 74ம் ஆண்டு உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நேற்று இன்று நாளை ஆகிய படங்களும் வெளியாகின. 1973ம் ஆண்டு, மே மாதம் 11ம் தேதி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீசானது. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி, 46 வருடங்களாகிவிட்டன. கிட்டத்தட்ட, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம்தான், எம்ஜிஆருக்கு கொட்டோகொட்டென்று வசூலைக் கொட்டி, சாதனைப் புரிந்த கடைசிப் படம் என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல், அந்தக் காலத்திலேயே படம் முடியும் போது, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்று விளம்பரம் செய்திருந்தார்கள். இதுவும் அப்போது பேசப்பட்டது. ஆனால் படம் எடுக்காமலேயே விட்டுவிட்டார் எம்ஜிஆர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close