[X] Close

நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்: விஷால் பேட்டிக்கு உதயா காட்டமான கடிதம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:55 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று விஷால் அளித்துள்ள பேட்டி தொடர்பாக உதயா காட்டமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

பைனான்ஸ் சிக்கலைத் தாண்டி இன்று (மே 11) வெளியாகியுள்ளது 'அயோக்யா'. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் விஷால். அதில் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடைய படங்களின் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு “படம் நன்றாக இல்லை. அதனால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஒரு படத்தைப் பார்க்க 4 பேர் தான் வருகிறார்கள் என்னும் போது நான் எப்படி திரையரங்கு உரிமையாளர்களை 2 வாரங்கள் ஒட்டுங்கள் என்று நிர்பந்திக்க முடியும்” என்று பதிலளித்துள்ளார் விஷால்.

இந்த பதில் 'உத்தரவு மகாராஜா' படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்த உதயாவை மிகவும் கோபப்படுத்தியது. இதற்கு பதிலடியாக விஷாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் உதயா கூறியதாவது:

 “இந்த வாய்ப்பினை தங்கள் திரைப்படம் 'அயோக்யா' வெகு விரைவில் வெளியிடப்படவும், அரங்கம் நிறைந்த காட்சிகளாக, மகத்தான வெற்றி பெறவும் வாழ்த்துவதற்கு முதற்கண் பயன்படுத்திக் கொள்கிறேன். இத்திரைப்பட வெளியீடு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும் உடனடியாகத் தீர்வு கிடைத்திட வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்கு தாங்கள் அளித்த பேட்டியில், ’உத்தரவு மகாராஜா’ திரைப்படத்தை சரியான கதைக்களம் இல்லாததால், வெறும் நான்கு பேர் மட்டுமே இப்படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தீர்கள்.  நான் அனைவருடைய கருத்துகள்,  விமர்சனங்கள் அது  நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். விமர்சனங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால், நான் கண்மூடித்தனமான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. துரதிர்ஷ்டவசமாக எனது படத்தைக் குறித்த உங்கள் விமர்சனமும் அவ்வாறானதே. ஏனென்றால், நீங்கள் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். எனது படத்தைத் திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுற்றேன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், அந்தப் பேரிடருக்கு வழிவகுத்ததே நீங்கள் தான். இதற்கு நான் எனது ஆயுள் உள்ளவரை நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது படத்திற்கு திரைத்துறையினரிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் மற்றும் அனைத்து ஊடகங்களிடமிருந்தும் நேர்மையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நேர்மையான விமர்சனங்கள் எனக்குத் திருப்தி அளிப்பதாகவும் அமைந்தது. ஏனென்றால், இந்தப் படம் சராசரிக்கும் அதிகமான வியாபாரத்தை எனக்கு தந்திருக்கிறது. மிக குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருந்த போதும், மக்கள் அதை ரசித்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இன்னபிற நோக்கங்களுக்காவோ இருக்கக் கூடாது. ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும் நண்பரே.  சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. 'விதைத்ததை மட்டுமே அறுக்க முடியும்' என்ற எளிய பிரபஞ்ச விதியை நான் நம்புகிறேன்.

’அயோக்யா’ படம் வெற்றி பெற எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்''.

இவ்வாறு உதயா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close