[X] Close

கோடம்பாக்கம் சந்திப்பு: ஏமாற்றிய கவுதம் மேனன்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 11:06 am
  • அ+ அ-

ஏமாற்றிய கவுதம் மேனன்

‘எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீடு கோடை விடுமுறையில் இருக்கும் என்று படக்குழு தெரிவிக்கவே, தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், படத்தின் பைனான்ஸ் பிரச்சினை இன்னும் முடிவு பெறாததால், தற்போது வெளியீட்டுக்குச் சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

பைனான்ஸ் பிரச்சினையைச் சரிசெய்ய, புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி, அப்பணத்தைக் கொடுத்து முடிக்கலாம் என்று கவுதம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பிரச்சினையோ முற்றுப் பெறுவதுபோல் தெரியவில்லை. இதனால், கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டாரே என்ற கடும் கோபத்தில் தனுஷ் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹன்சிகா 50

தனது 50-வது படமான ‘மஹா’ முழுக்க முழுக்கத் தன்னைச் சுற்றியே அமைவதுபோல் கதையைத் தேர்வு செய்தார் ஹன்சிகா. இதில் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மே 15 முதல் நடைபெறவுள்ளது.

Untitled.jpg 

தற்போது மீண்டும் நாயகியை மையப்படுத்திய கதையில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஹன்சிகா. இப்படத்தை கல்யாண் இயக்கவுள்ளார். ‘ஜாக்பாட்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இப்படத்தை இயக்கவுள்ளார் அவர். இது ஹாரர் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட உள்ளது.

மல்லுவுட்டில் ரெஜினா

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துவந்த ரெஜினா மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். சித்திக் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ள ‘பிக் பிரதர்’ படத்தில் ரெஜினாதான் கதாநாயகி.

மோகன்லால் நடிக்கவுள்ளதால் மலையாளத்தில் தனக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வரும் என்ற உற்சாகத்தில் இருக்கிறார் அவர். தெலுங்கு நடிகர் தேஜீவுடன் காதல் என்று வெளியான செய்திக்குக்கூட, “நான் என் வேலையை மட்டுமே இப்போதைக்குக் காதலிக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் ரெஜினா.

மீண்டும் தாப்ஸி

‘பிங்க்’ படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிய, தமிழில் எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் தாப்ஸி. ‘மாயா’ இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது அஹ்மத் கூறிய கதையும் அவரைக் கவர்ந்துவிடவே ஜெயம் ரவிக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன.

விக்ரம் - அஜய் கூட்டணி

‘இமைக்கா நொடிகள்’ வெற்றிக்குப் பிறகு அஜய் ஞானமுத்து கதையில் நடிக்க விக்ரம் சம்மதம் தெரிவித்தார். முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்துக்குத் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது செப்டம்பரில் தேதிகள் என்று விக்ரம் தெரிவிக்க, மும்முரமாகப் பணியில் இறங்கிவிட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. படப்பிடிப்பு இடங்கள், விக்ரமுடன் நடிக்கும் நடிகர்கள் எனத் தேர்வு செய்துவருகிறார் அஜய்.

மேலும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த அனுராக் கஷ்யாப்பை வில்லனாக நடிக்க வைத்ததைப் போல, விக்ரம் படத்துக்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எதிர்பார்ப்பில் ஆர்யா

‘கடம்பன்', ‘கஜினிகாந்த்' போன்ற படங்கள் வசூல்ரீதியில் ஆர்யாவின் மார்க்கெட்டை மேலும் சரிவில் தள்ளிவிட்டன. இதனால் பொறுமையாகத் தன் படங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் ‘காப்பான்’, ‘மெளனகுரு’ சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ ஆகிய படங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

ஜூலையில் ‘மகாமுனி’ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்கள் தன்னுடைய மார்க்கெட்டைப் பழையபடி நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆர்யா. புதிதாக ‘மரகதநாணயம்’ இயக்குநர் சரவணன் இயக்கவுள்ள படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close