[X] Close

நிகழ்வு: எம்.எஸ்.வி. இசையும் ‘சோ’வின் குறும்பும்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 10:58 am
  • அ+ அ-

-வா.ரவிக்குமார்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் இருந்தவர் மதுரை ஜி.எஸ். மணி. இந்தியாவின் பிரபல சபாக்களிலும் அயல் நாடுகளிலும் புகழ்பெற்ற கர்னாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஜி.எஸ். மணி. எவ்வளவு புகழ் வாய்ந்த மேடையிலும் தன்னை எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் என்பதையும்

எம்.எஸ்.விஸ்வநாதனின் மேதைமையையும் மிகவும் பெருமையோடு சொல்வதற்குத் தயங்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தான் பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான அனுபவங்களையும் அவரைக் குறித்த சுவையான தருணங்களையும் கடந்த ஞாயிறன்று சீனிவாச சாஸ்திரி அரங்கில் பகிர்ந்துகொண்டார். இடையிடையே எம்.எஸ்.வி. மற்றும் ராமமூர்த்தியின் இசையில் அமைந்த சில பாடல்களையும் பாடி அசத்தினார்.

எம்.எஸ்.வியிடம் அளவில்லாத கற்பனையும் அசாத்தியமான வேகமும் வெளிப்படும். அவருடைய விரல்களின் நுணுக்கமே அலாதியானது. எல்லோருக்கும் கட்டைவிரலைத்தான் ஸட்ஜமத்தை வாசிக்கப் பயன்படுத்துவார்கள். ஆனால், அவர் ஆட்காட்டி விரலைப் பயன்படுத்துவார்.

அவர் வாசிக்கும் வேகத்துக்கு நான் ஸ்வரம் எழுதி முடிப்பதே ஒரு பெரிய சவால். பாடகர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் பணியும் எனக்கு இருந்தது. இவற்றையெல்லாம் விவரித்த ஜி.எஸ்.மணி, சில பாடல்களுக்குப் பின்னணியில் நடந்த சம்பவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

12.jpg

அல்லா அல்லா பாடிய அனுபவம்

சோவின் ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் வரும் ‘நீயில்லாத இடமே இல்லை… நீதானே உலகின் எல்லை… அல்லா அல்லா’ என்ற வாலி எழுதிய பாடலை விஸ்வநாதன்தான் பாட வேண்டும் என்பது சோவின் விருப்பம்.

ஆனால், இதை நாகூர் ஹனிபா அல்லது சீர்காழி கோவிந்தராசன் பாடினால் நன்றாக இருக்கும் என்றார் எம்.எஸ்.வி. ஆனால், சோ அதை ஏற்கவில்லை. இறுதியாக, திருவுளச்சீட்டு போட்டு பார்க்கலாமே என்றனர். சரி... அப்படியே எழுதுங்கள் என்றார் எம்.எஸ்.வி.

சோ நான்கு சீட்டில் பெயர்களை எழுதி நீங்களே ஒரு சீட்டு எடுங்கள் என்றார் எம்.எஸ்.வியிடம். எம்.எஸ்.வி. எடுத்த திருவுளச்சீட்டில் அவரின் பெயர் எழுதியிருந்தது. திருவுளச்சீட்டுக்குக் கட்டுப்பட்டு எம்.எஸ்.வி.

பாடிய அந்த அல்லா பாடல் இன்றளவும் இறைவனின் அருளைப் பெருக்கும் பாடலாக உள்ளது. பல நாட்கள் கழித்து சாஸ்திரியிடம் சோ பேசும்போது நான்கு திருவுளச்சீட்டுகளிலுமே எம்.எஸ்.வியின் பெயரைத்தான் எழுதியிருந்தேன் என்று சொல்லியிருக்கிறார் தனக்கேயுரிய குறும்புடன்.

ராக தேவன் எம்.எஸ்.வி.

‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம்பெற்ற ‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை…’ பாடலின் சில வரிகளைப் பாடிய ஜி.எஸ்.மணி, வெகுஜன ரசிகர்களுக்குப் பெரிதும் நெருக்கமான ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்… சுகம்’ என்பதை சிந்துபைரவி ராக ஆலாபனையோடு பாடிக் காட்டினார். ஜி.எஸ்.மணியின் பாட்டோடு கோவை நடராஜனின் ஹார்மோனியமும் சரவணனின் தபேலாவும் போட்டிபோட்டு இனிமை சேர்த்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close