[X] Close

‘மூலிகை பெட்ரோல்’ ராமர் பிள்ளை கதாபாத்திரத்தில் பிரசன்னா


  • kamadenu
  • Posted: 09 May, 2019 15:50 pm
  • அ+ அ-

வெப் சீரிஸில், ‘மூலிகை பெட்ரோல்’ புகழ் ராமர் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசன்னா.

மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. ஆனால், இது சாத்தியம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த வருடம் (2018) டிசம்பர் மாதம், ‘இதுதான் எனது கடைசி பேட்டி’ என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மூலிகை பெட்ரோல் குறித்த திட்ட வரைவு அறிக்கையை வரும் 10-ம் தேதிக்குள் (டிசம்பர் 10, 2018) சமர்ப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கும், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகு அவரைப் பற்றிய தகவல் இல்லை.

இந்நிலையில், அவருடைய ‘மூலிகை பெட்ரோல்’ கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ‘திரவம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில், ராமர் பிள்ளை கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ஆனால், கதாபாத்திரத்துக்கு ரவி பிரகாசம் எனப் பெயர் வைத்துள்ளனர்.

மூலிகை பெட்ரோலை ஒருவர் கண்டுபிடிக்கிறார். அதற்குப் பின் அவரிடமிருந்து அந்த ஃபார்முலாவை அபகரிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள், அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். மூலிகை பெட்ரோல் என்பது உண்மையா, பொய்யா போன்ற எந்தவொரு விஷயத்தையுமே இந்தக் கதையில் கூறவில்லை. மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தபின் இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும் எனக் கற்பனையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரசன்னா, “நடிகர்களைப் பொறுத்தவரையில் சில கதாபாத்திரங்கள் மிகக் கடுமையான சவாலாக இருக்கும். இந்தக் கதாபாத்திரம் அந்த மாதிரி. ரவி பிரகாசம் கதாபாத்திரத்தை முழுவதுமாக ரசித்து நடித்துள்ளேன். நீங்களும் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வருகிற 21-ம் தேதி முதல் ஜீ5 இணையதளத்தில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக இருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close