[X] Close

நடிப்புல இன்னொரு ரவுண்டு வருவேன்!- மீண்டும் சின்னத்திரைக்குள் சீமா


  • kamadenu
  • Posted: 06 May, 2019 18:54 pm
  • அ+ அ-

உ.சந்தானலெட்சுமி

எண்பதுகளில் ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து கலக்கியவர் நடிகை சீமா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், இயக்குநர் ஐ.வி. சசியைக் கரம்பிடித்தார். கொஞ்ச காலம் நடிப்புக்கு குட்பை சொல்லியிருந்த சீமா, தங்கம், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல்கள் வழியாக சின்னத் திரைக்குள் தடம் பதித்தார். சின்னத் திரையிலும் கொஞ்சம் பிரேக். இப்போது, விரைவில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ சீரியலுக்காக மீண்டும் மேக் அப் போட ஆரம்பித்திருக்கிறார். வளசரவாக்கத்தில் சீரியல் படப்பிடிப்பில் இருக்கிறார் சீமா எனக் கேள்விப்பட்டு நானும் அங்கே சமூகம் அளித்தேன்.

மாம்பழ நிறத்து மஞ்சள் புடவையில் ஜொலித்துக் கொண்டிருந்தார் சீமா. டைரக்டர் ஆக்‌ஷன் சொன்னதும் அநாயாசமாக தனது நடிப்பைக் கொட்டினார். கண்ணை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். சின்னதாய் ஒரு பிரேக் விட்டார்கள். பிடித்துக்கொண்டேன் சீமாவை. “எந்த பீல்டா இருந்தலும் காற்றுள்ளபோதே தூற்றிக்கணும்னு சொல்லுவாங்களே... ஆனா, நீங்க என்ன மேடம் இவ்ளோ லாங் பிரேக் விட்டுட்டீங்க?”

  “நடிப்பு மேல எனக்கு என்னிக்குமே தீராத காதல் உண்டு. ஆனா, அதைவிட என்னோட குடும்பமும் எனக்கு முக்கியம். கணவர், குழந்தைகள், அம்மா இவங்கதான் என்னோட உலகம். இடையில் கணவர் நோய்வாய்ப்பட்டதால அவரு கூடவே இருந்து ஒரு குழந்தைய பார்த்துக்கிற  மாதிரி பார்த்துக்க வேண்டியதா போச்சு. அப்படியும் அவரைக் காப்பாத்த முடியல. ரெண்டு வருசம் முந்தி அவரோட இறப்பு எனக்கு ரொம்பவே வலியைக் குடுத்துச்சு. அந்த வலிக்கு மருந்து போட்டு மீண்டு வர்றதுக்குள்ள எங்க அம்மாவையும் கடவுள் என்கிட்டருந்து பிரிச்சுட்டார். அடுத்தடுத்து இத்தனை சுமைகள் என்னை அழுத்துனதால என்னால  குடும்பத்தைத் தவிர வேற எதிலும் கவனம் செலுத்த முடியல. மறுபடியும் நான் நடிப்பேனாங்கிற சந்தேகம்கூட பல பேருக்கு இருந்துச்சு. அப்பத்தான், ஜீ தமிழ் சேனலுக்காகத் தயாராகிற  ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ சீரியல்ல நடிக்க அழைப்பு வந்துச்சு. வர்ற வாய்ப்பை எதுக்கு தட்டிக்கழிக்கணும்னு தோணுச்சு... உடனே ஓகே சொல்லிட்டேன்” என்றவரிடம்  “சீரியலைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...” என்றேன்.

 “இந்த  சீரியல்ல  எனக்கு  ரொம்ப நல்ல ரோல். முதல்முறையா பாட்டியா நடிக்கிறேன். பாட்டினா ஏதோ வயசான பாட்டி ரோலில்லை... நல்ல ஜாலியான, பவர்ஃபுல்லான பாட்டி கேரக்டர். இந்த சீரியலுக்காக அமைஞ்சிருக்கிற டீமே ஒரு சூப்பரான டீம். அஞ்சனா பாட்டிக்கும் பேரனுக்கும் நடக்கிற பாசப்போராட்டம்தான்  இந்த சீரியலோட கதை. இந்த சீரியல், கமிட்டான நேரத்துல மலையாளத்திலும் ஒரு சீரியல் வாய்ப்பு வந்துருச்சு. அத்தோட மலையாள படம் ஒண்ணுலயும் நடிக்கிறேன். இதெல்லாம் சக்சஸா அமைஞ்சுட்டா நடிப்புல இன்னொரு ரவுண்டு வரலாம்னு நினைக்கிறேன்” என்று சீமா மெய்சிலிர்க்கச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அடுத்த ஷாட்டுக்காக பரபரப்பாகிறது யூனிட்.  அஞ்சனா பாட்டியும் அப்பீட் ஆகிறார்.

பாட்டிக்கான ஷாட் என்பதால், சீரியலின் நாயகன் - நாயகியான டிக்டாக் புகழ் விஷ்ணு - ப்ரீத்தி ஜோடி அடுத்த டேக்கிற்கான ஒத்திகையில் இருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு சும்மா போவானேன் என நினைத்து அவர்களிடமும் அனுபவ  பாடத்தைக் கேட்டேன். “தமிழ்ல ஒரு சில சீரியல்கள்ல சின்னச் சின்னதா ரோல் பண்ணிருக்கேன். பர்ஸ்ட் டைமா இப்பத்தான் ஹீரோ ரோல் பண்றேன். ரொம்ப ஹேப்பிதான் போங்க. அதுவும், சீனியர் ஆர்டிஸ்ட்டான சீமா மேடத்தோட நடிக்கிறது ரொம்ப ப்ளஸ்ஸா இருக்கு” என்று விழிகளை விரித்தார் விஷ்ணு. அவரைப் பார்த்துக்கொண்டே பேசிய ப்ரீத்தி,  “தமிழ்ல எனக்கு இதுதான் முதல் சீரியல். ரொம்பவே எக்ஸைட்டா இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கான ஷாட்டும் வர, படப்பிடிப்புத் தளத்தைவிட்டு அவசர அவசரமாய் ஜூட் விட்டேன்!

படம்: பு.க.பிரவீன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close