[X] Close

'ராட்சசன்' தெலுங்கு ரீமேக் சர்ச்சை: அமலா பால் விளக்கம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 15:47 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'ராட்சசன்' தெலுங்கு ரீமேக் தொடர்பாக நிலவிவந்த சர்ச்சைக்கு, அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை, ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், அமலாபால் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றனர். ரமேஷ் வர்மா இயக்கி வருகிறார். தமிழில் 'ராட்சசன்' படத்தின் பின்னணி இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இங்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்த ஜிப்ரானே, தெலுங்கிலும் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார்

இந்நிலையில், "விஷ்ணு விஷால் பிரமாதமாக நடித்திருப்பார். அவரைப் போல பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸால் நடிக்க இயலாது. அவருடைய ஸ்டைலில் மட்டுமே அவரால் பண்ண முடியும்" என்று அமலா பால் கூறியதாகத் தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியானது. இது பெரும் சர்ச்சையாகவும் உருவெடுத்தது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு மறுப்புமே தெரிவிக்காமல் இருந்தார் அமலா பால்

தற்போது இச்செய்தி தொடர்பாக அமலா பால் தனது ட்விட்டர் பதிவில், “ ’நான் அப்படி சொல்லவில்லை’ என்பதன் ஆகச்சிறந்த உதாரணம் இதுதான். முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 'ராட்சசன்' ரீமேக் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close