[X] Close

மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நாசர்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 13:04 pm
  • அ+ அ-

தற்போது நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் நாசர், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.

2015 - 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், நாசர் தலைமையில் ஒரு அணியும், சரத்குமார் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.

மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்தலில், 1,824 பேர் நேரடியாக வந்து வாக்களித்தனர். மேலும், தபால் மூலம் 783 பேர் வாக்களித்தனர்.

அஜித், நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட 532 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடும் போட்டிக்கு இடையே, நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ம் தேதி நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. நாளை (ஏப்ரல் 29) முதல் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும். ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும் தேதி, இடம் குறித்த விவரங்களை அவரே அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நடைபெற இருக்கின்ற தேர்தலில் மீண்டும் நாசர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பி.ஆர்.ஓ. ஜான்சன், தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close