[X] Close

சீயான் விக்ரம்... ஹேப்பி பர்த்டே!


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 14:30 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

திறமை இருந்து முயற்சியும் இருந்தால், வெற்றி ஒருநாள் வந்தே தீரும் என்பார்கள். அப்படியானவர்கள், எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். திரையுலகின் முக்கியமானவர்களில் ஒருவர்... விக்ரம்.

சிறுவயதிலிருந்தே சினிமா மீது மோகமும் நடிப்பின் மீதும் ஆர்வமும் கொண்டிருந்த விக்ரம், திரைப்படத்துக்குள் நுழைய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் பலவருடப் போராட்டங்களுக்குப் பிறகு, வாய்ப்பு வந்தது. ’என் காதல் கண்மணி’ எனும் திரைப்படம். ஆனால் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை.

அடுத்து, இயக்குநர் ஸ்ரீதரின் ‘தந்துவிட்டேன் என்னை’ திரைப்படம். கிட்டத்தட்ட, இதுவும் அறிமுகம் போலத்தான்.

ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா, ரவிச்சந்திரன், காஞ்சனா என எத்தனையோ நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி, அவர்களை முதல் படத்திலேயே உச்சாணிக்கொம்பில் ஏற்றிய ஸ்ரீதரின் படம், விக்ரமிற்கு ஏனோ அப்படி வாய்க்கவில்லை. அந்தப் படத்தின் தோல்வி, விக்ரம் பக்கம் வெளிச்சம் பாயவில்லை.

இதன் பிறகு, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கி இளையராஜா இசையமைத்த அந்தப் படத்தின் பாடல்கள், இன்றைக்கும் இரவுகளை இனிமையாக்கும் பாடல்களாக இருக்கின்றன. அந்தப் படத்தில், விக்ரம் ஹீரோ. லக்ஷ்மியின் மகள் ஐஸ்வர்யா நாயகி. படம் கவிதை மாதிரி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் கதை ரொம்பவே வீக்காக இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது. படம் ஓடவில்லை.

ஓப்பனிங் சரியாக அமையாத வேளையில், கேரளம் விக்ரமை வரவேற்றது. துணைக்கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகளை வாரி வழங்கியது. விக்ரமும் சளைக்காமல் துவளாமல் நடித்துக்கொண்டே இருந்தார். இப்படி ஒருவருடமோ இரண்டு வருடமோ இல்லை...  ஒன்பது வருடங்கள் இப்படியாகத்தான்  கழிந்தன அவரின் திரையுலகப் பயணம்.

இதற்கு நடுவே, பின்னணிக் குரலுக்கும் வாய்ப்புகள் வந்தன. ‘அதை ஏன் விடணும்? அதுவும் சினிமாவேலைதானே’ என்று சந்தோஷமாகச் செய்தார். ‘அமராவதி’ படத்தில் அஜித்துக்கு விக்ரம்தான் குரல் கொடுத்தார். அப்பாஸ், பிரபுதேவா என பல நடிகர்களுக்குக் குரல் கொடுத்த பெருமை கொண்ட மாஸ் ஹீரோ... விக்ரமாகத்தான் இருக்கும்.

இந்தச் சமயத்தில்தான், 99-ம் ஆண்டு, விக்ரம் வாழ்க்கையில் பூமாரி பொழிந்த நிகழ்வு. இயக்குநர் பாலாவின் முதல் படமான ‘சேது’வில் நடித்தார் விக்ரம். அதுவரை பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்தது. காத்திருந்தது வீண்போகவில்லை. திறமைசாலியான விக்ரமிற்கு வெற்றி தேவதை தேடிவந்து கை குலுக்கினாள். கை தூக்கிவிட்டாள். விக்ரம்... ‘சீயான்’ விக்ரமானார். சேதுவில் அழைத்தது போல், இன்றுவரைக்கும் அழைத்து வருகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில், தெலுங்கிலும் மலையாளத்திலுமாக இன்னும் இன்னும் படங்கள் வந்தன. இயக்குநர் ராஜகுமாரனின் ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ வந்தது. பேரும்புகழும் கிடைக்கவில்லை.

இதேகாலகட்டத்தில், விக்ரமின் கல்லூரி நண்பர், இயக்குநர் தரணி, ‘எதிரும் புதிரும்’ படத்துக்குப் பிறகு விக்ரமை வைத்து ‘தில்’ படத்தை இயக்கினார். அதிரிபுதிரி ஹிட்டைச் சந்தித்தது. இயக்குநர் சரண், ஏவிஎம் தயாரிப்பில் ‘ஜெமினி’யில் விக்ரம் நடித்தார். எல்லோரும் ‘ஓ’போட்டார்கள். மீண்டும் தரணி இயக்கத்தில் ‘தூள்’ கிளப்பினார் விக்ரம்.

தொடர்ந்து படங்கள் வரத்தொடங்கின. இன்னும் இன்னும் படிகள் முன்னேறினார். அவை எல்லாமே வெற்றிப்படிகளாகின. இயக்குநர் ஷங்கர், ‘அந்நியன்’ படத்தில் விக்ரமை நடிக்க அழைத்தார். அம்பி, ரெமோ, அந்நியன் என பன்முகங்கள் காட்டி, பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார்.

நடுவே ’காசி’ மாதிரி ஒரு படம், ‘மஜா’ மாதிரி வேறொரு ஸ்டைல் படம். ‘காதல் சடுகுடு’, ‘சாமுராய்’, ‘கிங்’ என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். முன்னதாக, விக்ரமன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘புதிய மன்னர்கள்’ படமும், அமிதாப் தயாரிப்பில், அஜித்துடன் நடித்த ‘உல்லாசம்’ படமும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது.

பரபரசுறுசுறு ஹரிக்குக் கிடைத்த முதல் வெற்றியே விக்ரமுடன் கைகோத்த ‘சாமி’தான். ஆறுச்சாமி மிரட்டியிருந்தார். அடுத்து வந்த ‘அருள்’ ஓரளவுதான் என்றாலும் சோடையில்லை. மீண்டும் பாலாவுடன் ‘பிதாமகன்’ விருதுகளை வாங்கித்தந்தது.

vikram.jpg 

இயக்குநர் விஜய்யின் ‘தெய்வத்திருமகள்’, சுசிகணேசனின் ‘கந்தசாமி’, மணிரத்னத்தின் ‘ராவணா’ என படங்கள் வந்தாலும், இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் நடிப்பும் மேக்கப்பில் மிரட்டியெடுத்த விதமும் விக்ரம்... ‘வேற லெவல்’ என்று சொல்லவைத்தன.

எவர் தயவும் இல்லை. நடிப்பில் எவர் சாயலும் இல்லை. உடலை முறுக்கி, இளைத்து எப்படியாகினும் வளைக்கக்கூடியவர். நடிப்பில், வசன உச்சரிப்பில் தனித்துவம் மிக்கவர் என்றெல்லாம் விக்ரமைக் கொண்டாடும் பட்டியல் ரொம்பவே பெரிது.

இப்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், சத்யராஜ், நாசர், மாதவன் ஆகியோரை அடுத்து நடிக்கும் ஹீரோ விக்ரமாகத்தான் இருப்பார்.

உழைப்பு, கடின உழைப்பு, முயற்சி, பகீரத முயற்சி, நடிப்பு, அசாத்திய நடிப்பு... இவற்றையெல்லாம் கலந்து ஜூஸாக்கினால்... அதுதான் விக்ரம். அவர்தான் விக்ரம்.

சீயான் விக்ரமிற்கு இன்று 17.4.19 பிறந்த நாள். ஹேப்பி பர்த் டே சீயான்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close