[X] Close

ரூ.85 கோடி வசூல் வெற்றியைப் பற்றி ஏன் விளம்பரமில்லை? - அமிதாப் ஆதங்கமும், ஷாரூக் பதிலும்


85

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 17:09 pm
  • அ+ அ-

தனது 'பத்லா' படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி குறித்து சரியாக விளம்பரப்படுத்தப்படவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் ஆதங்கத்துடன் ட்வீட் பதிவிட்டுள்ளார். இதற்கு ஷாருக்கான் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமிதாப் பச்சன், தாப்ஸி நடித்து சுஜய் கோஷ் இயக்கத்தில் உருவான படம் 'பத்லா'. 'இன்விசிபிள் கெஸ்ட்' என்ற ஸ்பானிஷ் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கான இந்தப் படத்தை ஷாருக்கான் அஸுர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார்.

கடந்த மார்ச் 8 அன்று வெளியான 'பத்லா', கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் வசூலில் சோடை போகவில்லை. வெறும் பத்து கோடி ரூபாய்க்குள் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியான ஒரே மாதத்தில் இந்தியாவில் மட்டும் ரூ.85.56 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச வசூலையும் சேர்த்து மொத்த வசூல் ரூ.135 கோடியைத் தாண்டிவிட்டது.

இது பற்றி ட்வீட் செய்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், "யாராவது இந்த ஆரவாரமில்லாத வெற்றியைப் பற்றிப் பேச வேண்டிய நேரமிது. ஏனென்றால் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, லைன் ப்ரொடியூசரோ அல்லது பொதுவாக துறையிலிருந்து யாருமே, 'பத்லா'வின் வெற்றியைப் பற்றி பேச ஒரு நானோ விநாடியைக் கூட செலவழிக்கவில்லை. நன்றி" என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த இணை தயாரிப்பாளர் ஷாருக்கான், "சார் நீங்கள் எங்கள் அனைவருக்காகவும் பார்ட்டி நடத்துவீர்கள் என உங்கள் வீட்டின் முன் ஒவ்வொரு இரவும் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறிய அமிதாப், "நான் நடித்த படம். நீங்கள் தயாரித்த படம். நான் விளம்பரப்படுத்திய படம். இதற்கு நானே பார்ட்டி தர வேண்டுமா?" என்றார். இதற்கு ஷாரூக், "சார் இது உங்கள் படம். நீங்கள் நடித்துள்ளீர்கள். இது ஹிட்டானது உங்களால் தான். இந்தப் படம் சாத்தியமானதே நீங்கள் இதில் பங்கு கொண்டதால் தான். அதனால் நீங்கள் தான் பார்ட்டி தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தீவிரமாக ஆரம்பித்த ஒரு ட்வீட், இரண்டு மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரங்களிடையே சுவாரஸ்யமான உரையாடலாக மாறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close