[X] Close

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் ஜூலை மாதம் வெளியாகும்: தயாரிப்பாளர்கள் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 19:01 pm
  • அ+ அ-

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா ஜூலை மாதம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

தெலுங்கில் 2017-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டாவை ஒரே இரவில் பெரிய நட்சத்திரமாக்கிய படம் இது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பதாகவும், பாலா இயக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகி 'வர்மா' என்ற பெயரில் படத் தயாரிப்பும் முடிந்து ட்ரெய்லர் வரை வெளியானது.

ஆனால் படத்தின் இறுதி வடிவம் திருப்தி தராததால் மொத்தப் படத்தையும் வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்கிறோம் என தயாரிப்பு தரப்பு அதிரடியாக அறிவித்தது. இந்த இரண்டாவது வடிவத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'ஆதித்ய வர்மா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிகின்றனர்.

ஆனால் சில இணையதளங்களில் இந்தப் பதிப்பும் கைவிடப்பட்டது என்றும், 'அர்ஜுன் ரெட்டி' படத்தையே டப்பிங் செய்து வெளியிடவுள்ளார்கள் என்றும் செய்திகள் வந்தன.

இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் மேத்தா, "இது போன்ற பொய்யான தகவல்களைத் தருபவர்களுக்கு ஏமாற்றம் தருகிறோம், மன்னித்துவிடுங்கள். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு பாடல் படப்பிடிப்புக்காக குழு 9-ஆம் தேதி போர்சுகல் செல்கிறது. ஜூலை 2019 படம் வெளியாகும்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close