[X] Close

கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்!


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 21:43 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

இப்போது நகைச்சுவைக்கும் பஞ்சம். நகைச்சுவை நடிகர்களுக்கும் பஞ்சம் என்றாகிப் போனது தமிழ் சினிமா. ஆனால் அந்தக் காலத்தில் இருந்தே நகைச்சுவை நடிகைகள் மட்டும் வெகு குறைவு. காமெடியிலும் அதகளம் பண்ணி, கேரக்டர் ரோலிலும் மனம் கனக்க வைத்த ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு, இரண்டிலும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒரே நடிகை... கோவை சரளா.

83ம் ஆண்டில் அறிமுகமானார் சரளா. அப்போது சரளாதான். முதல் படத்திலேயே முகம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானது. அறிமுகப்படுத்தியவர் கே.பாக்யராஜ். படத்தின் நிறுவனமும் லேசுப்பட்டதா என்ன? மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, வெள்ளிவிழா கண்ட ‘முந்தானை முடிச்சு’தான் அந்தப் படம். அடுத்த ஆண்டே ‘வைதேகி காத்திருந்தாள்’.

கவுண்டமணிக்கு ஜோடி. இன்னும் முகம் பிரபலமானது. ‘தம்பிக்கு எந்த ஊரு, ‘உயர்ந்த உள்ளம்’ என ரஜினி, கமல் படங்களும் கிடைத்து, அதிலும் எண்ட்ரி கார்டு போட்டாகிவிட்டது. ஆனாலும் ஒரு வெளிச்சம், தனித்ததொரு அடையாளம் இன்னும் கிடைத்தபாட்டைக் காணோம். அதுகுறித்து வருந்தாத சரளா, தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.

அப்போதுதான் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார் கே.பாக்யராஜ். அவரை விட வயது குறைவு கோவை சரளாவுக்கு. ‘சின்னவீடு’ படத்தில் மிக தைரியமாக நடித்தார் கோவை சரளா. பாக்யராஜின் அம்மாவாக நடித்தார். கே.கே.செளந்தருக்கு ஜோடியாக நடித்தார். படத்தில் இவர் வரும் காட்சிகளில், உடன் இருப்பவர்களையெல்லாம் மிக அழகாக, அனாயசமாக ஸ்கோர் செய்து கைத்தட்டல்களை அள்ளினார்.

பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், கமல் நடித்த ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் கவுண்டமணியுடன் ஜோடி போட்டு, ஜப்பானையே அதகளம் செய்த காமெடி இன்றைக்கும் பாப்புலர். கோவை சரளாவின் மிகப்பெரிய அடையாளம் அவரின் குரல். இந்தப்படத்துக்குப் பிறகுதான் சொந்தக்குரலில் பேசி நடிக்கத் தொடங்கினார் கோவை சரளா.

56593669_2291546711119208_682351929740754944_n.jpg 

எண்பதுகளில் கோவை சரளா அறிமுகமானது அவரின் திறமையுடன் பின்னே கைகட்டிக்கொண்டுவந்த அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். எண்பதுகளில், ஹீரோவை முதலில் புக் செய்கிறார்களோ இல்லையோ... முதல் டிக்... கவுண்டமணியின் கால்ஷீட்டைப் பிடிப்பார்கள்.

கவுண்டமணிக்கு செந்தில் ஒருபக்கம் ஜோடி என்றால் இன்னொரு பக்கம் கோவை சரளா. கவுண்டமணிக்கு காதலியாகவோ மனைவியாகவோ கோவை சரளா நடிப்பார். இன்னொரு படத்தில் செந்திலுடன் சேர்ந்து லவ்ஸ் பண்ணி, கவுண்டமணியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார். 

இதில் மகா மெகா ஹிட்... ‘கரகாட்டக்காரன்’. ‘என்னை காரைக்குடி செட்டுல கூப்புட்டாக...’ என்கிற வசனம் கோவை சரளாவின் மாடுலேஷனில், படத்தின் வெற்றிக்கான பல விஷயங்களில் இதுவும் ஒன்றென இடம்பிடித்துக்கொண்டது. ரசிகர்களின் மனதிலும்தான்! இந்தக் காலகட்டத்தில், வி.சேகர் தொடர்ந்து குடும்பக் கதைகளை இயக்கத் தொடங்கினார்.

அங்கே காமெடிக் குடும்பத்துக்கு கவுண்டமணியோ செந்திலோ விவேக்கோ வடிவேலுவோ தேவைப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல், ஜோடி போட்டு, படத்துக்கு பலம் சேர்த்தார் கோவை சரளா. இந்த வாரம் வெள்ளிக்கிழமை... கவுண்டமணி - கோவை சரளா, அடுத்த வாரத்தில் விவேக் - கோவை சரளா, மூன்றாவது வாரத்தில் செந்திலுக்கு ஜோடி, நான்காவது வெள்ளியில் வடிவேலுவை பின்னியெடுப்பார்.

இந்தக் காலகட்டத்தில்தான், ஆச்சி மனோரமாவுக்கு அடுத்து காமெடியில் அலப்பரையைக் கொடுக்கிறாரே என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிறகு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கோவை சரளா கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் கோவை சரளா.

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ‘சதிலீலாவதி’ படத்தில் நடித்தது மகுடம். தமிழகத்தில், இந்தியாவில் டாப் லிஸ்ட் நாயகன்களில், உலகநாயகன் கமல்ஹாசன் ஒருவர். இதில், கமலுக்கு மனைவியாக நடித்து சிக்ஸர் சிக்ஸராக அடித்து, செஞ்சுரி போட்டார். கோவை பாஷையும் கோவை சரளாவின் மாடுலேஷனும் வெல்லமென தித்தித்தன. தொடர்ந்து படங்களில் ஒவ்வொரு விதமான கேரக்டர்கள்.

அந்த சமயத்தில்தான், ‘காஞ்சனா’ பேய் ரூபத்தில் வந்தாள். ராகவா லாரன்ஸின் ஆத்மார்த்தமான நடிகைகளாக, காஞ்சனா பேயும் கோவை சரளாவும் தொடர்ந்து இடம்பிடித்தார்கள். ‘இவரைத் தவிர வேற யாரும் இந்தக் கேரக்டரைப் பண்ணமுடியாதுப்பா’ என்று கோவை சரளாவின் வெளுத்துக்கட்டுகிற நடிப்பில் பூரித்துச் சொன்னது தமிழ் சினிமா ரசிகர்கூட்டம்.

திடீரென கேரக்டர் ரோலில் சீரியஸ் முகமும் காட்டுவார். சிரிப்புச்சிரிப்பும் காட்டி கிச்சுக்கிச்சு மூட்டுவார். அதே எனர்ஜியுடன் இன்றைக்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கோவை சரளா. அன்றைக்கு, ஆச்சி மனோரமாவின் இடத்தை நிரப்பமுடியாது என்று ஆச்சியைக் கெளரவித்துச் சொன்னது போல், இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்... ‘கோவை சரளாவுக்கு இணையே யாரும் இல்லப்பா’ என்று! கொங்கு அம்மணி கோவை சரளாவுக்கு இன்று ஏப்ரல் 7ம் தேதி பிறந்தநாள். அவரை மனதார வாழ்த்துவோம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close