[X] Close

ஒவ்வொரு நடிகருக்குமே டப்பிங் பேசுவது என்பது ஒரு பெரிய பாடம்: விஜய் சேதுபதி


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 20:52 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ஒவ்வொரு நடிகருக்குமே டப்பிங் பேசுவது என்பது ஒரு பெரிய பாடம் என்று 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது.

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதை முன்வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி என மாநில மொழிகளில் வெளியாகும் பதிப்புகளும் தனி கவனம் ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்து வருகிறது டிஸ்னி-மார்வல் நிறுவனம்.

இதன் ஒரு பகுதியாக, சர்வதேச நட்சத்திரமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக தனியாக ஒரு பாடலை உருவாக்கிவுள்ளார். இப்பாடலின் அறிமுகம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'அயர்ன்மேன்' கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்துள்ள விஜய் சேதுபதி மற்றும் 'ப்ளாக் விடோ' கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்துள்ள ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் டப்பிங் எவ்வளவு கடினம் என்பதை தன் பேச்சில் எடுத்துரைத்தார் விஜய் சேதுபதி. இச்சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது:

டப்பிங் யூனியன் மெம்பர் நான். கற்றுக் கொள்வதற்காக நிறைய மோகன்லால் சாருக்கு படங்களுக்கு பேசியிருக்கேன். அது ஒரு பெரிய பாடம். 2 வருடங்களுக்கு முன்பு, என் குழந்தைகளுக்கு டப்பிங் கார்டு எடுத்துருக்கேன்.

டப்பிங் யூனியன் கார்டு எடுத்தவுடன் முதலில் கார்டூன் படங்களுக்குப் பேசத் தான் முயற்சி பண்ணினேன். ஏனென்றால் அதுக்கு பேசுவது மிகவும் கடினம். எனக்கு கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்று ரொம்ப ஆசை. நிறைய முயற்சி செய்து பார்த்து கிடைக்கவில்லை.

ஒவ்வொரு நடிகருக்குமே டப்பிங் பேசுவது என்பது ஒரு பெரிய பாடம். இந்தப் படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு ரொம்பவே பயந்தேன். இன்னொரு நடிகர் நடித்த டைமிங்கிற்கு தகுந்தாற் போல் நான் பேச வேண்டும். அது ரொம்ப கடினம். என்னுடைய படங்களுக்கு டப்பிங் பேச, ரொம்ப கஷ்டப்படுவேன். பயப்படுறதா, கற்றுக் கொள்வதா என்னும் போது கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பேன்.

உலகமே ரசித்த ஒரு படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்க்க போகும் ரசிகர்கள் என்னை என்னவாக பார்க்கப் போகிறார்கள் என்று பயங்கர ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close