[X] Close

திரைப் பார்வை: ஒரு நாயக சினிமா (லூசிஃபர் - மலையாளம்)


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:31 am
  • அ+ அ-

-ஆர்.ஜெய்குமார்

மலையாள சினிமா தொடக்க காலத்திலிருந்தே அரசியலைப் பலவிதங்களில் பிரதிபலித்துவந்துள்ளது. காதல் படங்களில்கூட அரசியல் ஒரு சாரமாகச் சொல்லப்படுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கும் இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தீரத்தை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இவை அல்லாமல் அரசியல் பின்னணியில் வெகுமக்கள் சினிமாக்களும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. அந்த வரிசையில் ஒரு படம்தான் ‘லூசிஃபர்’.

மோகன்லால், விவேக் ஓபராய், பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர் என நட்சத்திர நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் அணி சேர்ந்துள்ளனர். படத்தின் இயக்குநர் மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன். ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற முரளி கோபிதான் கதை. இந்த அம்சங்களால் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்தது.

மோகன்லால், ‘லால் சலாம்’ என்னும் முழுநீள அரசியல் படத்தில் நடித்திருக்கிறார். பிருத்விராஜுக்கும் ‘தலப்பாவு’, ‘வாஸ்தவம்’ ஆகிய அரசியல் பட அனுபவம் உண்டு. முரளி கோபிக்கும் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ அனுபவம் இருக்கிறது. இந்த மூவரும் இணைந்து ஒரு நாயக சினிமாவுக்காக அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த ஒரு பெரிய அரசியல் நிகழ்வைத்தான் படம் உந்துதலாகக் கொண்டு விரிகிறது. 2016-ல் படத்துக்கான கதை உருவானதாக பிருத்விராஜும் சொல்கிறார். முதல்வரும் மக்கள் செல்வாக்குள்ள தலைவருமான ராம்தாஸ் மருத்துவமனையில் மரித்துவிடுகிறார்.

அதனால் உருவாகும் நிச்சயமின்மையால் பல குளறுபடிகள் நடக்கின்றன. இரண்டாம் கட்டத் தலைவர், இடைக்கால முதல்வாராகப் பரபரக்கிறார். அரசாங்கத்தையே ஒரு தொழிலாக நடத்திவரும் தலைவரின் கார்பரேட் மருமகனுக்கு வேறு திட்டம் இருக்கிறது.

கட்சியின் மக்கள் செல்வாக்குள்ள இளம் தலைவராகக் காட்டப்படும் ஸ்டீபன் நெடும்பள்ளிக்கு (மோகன்லால்) இதில் எதிலும் நாட்டமில்லை. இவர்கள் இருவரும் முரண்படும் புள்ளியில் படம் துளிர்க்கிறது.

ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையைச் சொல்வதற்கு ஒரு பெரிய கேன்வாஸை பிருத்விராஜ் தேர்ந்தெடுத்துள்ளார். அது ரஷ்யாவிலிருந்து இடுக்கிவரை நீள்கிறது. மோகன்லாலின் வருகைக்கு முன்பே படத்தில் அவரது பெயர் ஒரு பாதிரியின் குரலில் ஒலிக்கிறது: ‘எஸ்தபானே (ஸ்டீபனே) நீ போய் ராம்தாஸைப் பார்க்கணும்’. பிறகு ஜூலியன் அஸாஞ்சேவாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் இந்திரஜித் சுகுமாரனின் கண்டுபிடிப்பின் வழி மோகன்லால் கதாபாத்திரம் பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

இந்த இரு காட்சிகளுக்கும் முன்பு சர்வதேசக் காவல் துறையான இண்டர்போல் அலுவலகக் காட்சி சிறு மின்னல்போல் வெட்டிச் செல்கிறது. இந்த விவரிப்பு, ஈர்க்கும் குற்றப் பின்னணியும் விநோதத்தன்மையும் கொண்ட அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்த அலங்காரங்களுக்குள் இருக்கும் கதையை 80-களின் இந்தி, தமிழ் சினிமா பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

மோகன்லாலின் நாயக பிம்பத்துக்கு இதுபோல் நேர்மைசெய்த படம் சமீபத்தில் வெளிவரவில்லை. அதே நேரம் அவரது பிரபலமான படங்களைப் போல் இதில் அவர் மீசை முறுக்கவில்லை, முண்டு மடக்கிக் கட்டவில்லை. “ஆறு வருஷத்த இடைவேள கழிஞ்சு இந்துசூடன் வந்திருக்குந்நு புதிய களிகள் காணாணும் சிலது காணிச்சுப் படிப்பிக்காணும் சிலது படிப்பிக்காணும்” எனப் பஞ்ச் டயலாக் பேசவில்லை.

தீர்க்கமான முகமும் அளந்தெடுத்த வசனமும் கொண்டே ஒரு பிரம்மாண்ட மோகன்லாலை பிருத்விராஜ் உருவாக்கியிருக்கிறார். மோகன்லால் என்னும் நாயக பிம்பத்தைக் காண்பிப்பது இந்த மாதிரியான படத்தில் சவாலான விஷயம்தான். பிருத்விராஜ் அதைப் புரிந்துவைத்திருக்கிறார்.

‘ராஜவிண்ட மகன்’ ‘விண்செண்ட் கோமஸ்’, ‘நரசிம்ஹம்’ ‘இந்துசூடன்’, ‘இருபதாம் நூற்றாண்டு’ சாகர் அலைஸ் ஜாக்கி’ போன்ற மோகன்லாலின் நாயக பிம்ப படங்களின் கதாபாத்திரங்கள், கதைகளைத் தாண்டி இன்றளவும் கொண்டாடப்படுபவை.

அவை எல்லாம் வெகுஜன மலையாள சினிமாவின் கலாச்சார அம்சங்கள். ‘லூசிஃபரி’ன் ‘ஸ்டீபன் நெடும்பள்ளி’யை அந்த வரிசையில் ஒன்றாக ஆக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அது வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close