[X] Close

கலையின் அமைதிப் பாய்ச்சல்! - இயக்குநர் மகேந்திரன் அஞ்சலி


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:34 am
  • அ+ அ-

என் பள்ளிக் காலமான எண்பதுகளில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமில்லாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தேன். ஒரு படத்தைப் பார்த்துவிட்டுச் சிலபல நாட்களுக்கு மனங்குலைந்து அலைந்திருக்கிறேன். ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’ போன்ற படங்கள் அவ்வாறு என்னை அலைக்கழித்தன.

மகேந்திரன் எடுத்த படங்களி லேயே எளிய மதிப்பீட்டைப் பெற்ற படம் ‘கை கொடுக்கும் கை’. ஆனால், அந்தப் படத்தைக்கூட அவரைத் தவிர வேறு யார் இயக்கியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்காது. ரஜினிகாந்த் என்னும் பெரிய நடிகரை மீண்டும் நடிப்பின் திசை நோக்கி திருப்ப முயன்ற படம் அது. ‘கை கொடுக்கும் கை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்கள் வெற்றி பெற்றிருந்தால் ரஜினிகாந்த் மீண்டும் அழுத்தமான கதைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கக்கூடும்.

அமைதியின் உருவம்

மகேந்திரனின் பேச்சுகள், நேர்காணல் கள் ஆகியவற்றைக் காணும்போது வன்மையும் திண்மையும் வளமையும் மிகுந்த திரைப்படக்காரராகத் தென்படுகிறார். இரண்டாயிரமாண்டுத் தொடக்கத்தில் எழுத்தாளர் எஸ்.பொ.முன்னெடுத்த ‘தமிழ் இனி’ மாநாட்டில் பங்குபெற்றேன். அந்நிகழ்வில் மகேந்திரனும் நானும் பந்தியில் ஒன்றாக அமர வாய்த்தது. வானமெங்கும் அலைந்த பெரும்பறவை ஒன்று ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமைதியாக அமர்ந்தி ருக்குமே அத்தகைய அமைதியோடு என்னருகில் அமர்ந்தி ருந்தார் அவர்.

அதைக் குலைத்து அவரோடு ஒரு சொல்கூடப் பேசிக்கொள்வதற்கு என்மனம் இடங்கொடுக்கவில்லை. இருவரும் அமைதியாக உணவருந்தி எழுந்தோம். அன்று கண்ட அவருடைய அமைதிதான் அப்படியே அவருடைய படங்களின் திரைமொழி ஆகியிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். செய்யுளில் யாப்பமைதி என்று சொல்வோமே அதைப்போன்ற ஒன்று அவருடைய படங்களில் திரையமைதியாக வீற்றிருக்கிறது.

மக்களுக்கு நல்ல திரைப்படத்தைத் தரவேண்டும் என்ற வேட்கையில்தான் அவ்வாறானப் படங்களை எடுத்தார். வாழ்வின் சிறு நுணுக்கங்களையும் தவறவிடாமல் இழை இழையாகச் செதுக்கப்பட்டவை அவருடைய ‘ஷாட்’கள். கல்லூரி நிகழ்ச்சியொன்றில் எம்.ஜி.ஆரால் இனங்காணப்பட்டு திரைப்படத்துறைக்கு அழைத்து வரப்பட்டவர். சென்னையில் நாடகங்கள், திரைப்பட முயற்சிகள், இதழியல் பணி என்று முழுக்க முழுக்க எழுத்தை நம்பியிருந்தவர்.

கண்டுகொள்ளப்பட்ட திறமை

மகேந்திரன் தனது சென்னை வாழ்க்கையில் மனமுடைந்து ஊர் திரும்ப எண்ணியபோதெல்லாம் யாரேனும் ஒருவர் ஆறுதலும் தேறுதலும் கூறி மீண்டும் நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றனர். தன் அழைப்பின் பெயரில் சென்னைக்கு வந்து வாய்ப்பில்லாமல் பசி பட்டினியால் துன்புறுகிறார் என்பது தெரிந்தபோது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்திலிருந்து மகேந்திரனுக்குத் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பப் பட்டிருக்கிறது. 

மகேந்திரனின்  ‘தங்கப் பதக்கம்’ என்ற நாடகத்தைப் பார்த்து அதைத் திரைப்படமாக்கித் தாம் நடித்தேயாக வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் எம்.ஜி.ஆருக்கு திரையுலகப் போட்டியாளராக இருந்த சிவாஜி கணேசன். அதன்பின் கதையென்ன, காட்சியென்ன என்று எதையும் கேட்காமல் ஒரு படத்தை எடுத்துக்கொடுக்கும்படி ஆனந்தி பிலிம்ஸ் முதலாளி மகேந்திரனைப் படமெடுக்க அனுப்புகிறார்.

‘முள்ளும் மலரும்’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தாழம்பூவே’ பாடலைப் படமெடுக்க இயலாத சூழல் வந்தபோது கமல்ஹாசன் பண உதவி செய்ததோடு மட்டுமின்றி அப்படத்துக்குரிய ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்தி வைத்தார். ஓர் இயக்குநரின் முதல் படம் என்றபோதும், அன்று பரவலாக அறியப்பட்டுவிட்ட நடிகராய் இருந்த ரஜினிகாந்த் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தார்.

kalaiyin 2.jpg

மகேந்திரன் கொடுத்து வைத்தவர்!  திரையுலகப் பெரியவர்களின் இத்தனை ஊக்கங்களும் உதவிகளும்தாம் மகேந்திரனின் படைப்பாற்றலை மாசுபடாமல் வெளிக்கொணர உதவியிருக்கின்றன. அவ்வகையில் அவர் ஒரு கண்டுகொள்ளப்பட்ட திறமை. பின்னர் ஓர்  இயக்குநராகி நன்கு பொருளீட்டும் நிலைவந்தபோதும் எம்.ஜி.ஆரின் உதவித்தொகை நில்லாமல் வந்தபடியே இருக்கிறது. மிகுந்த தயக்கத்தோடு மகேந்திரனே எம்ஜிஆரிடம் சென்று கொடைத்தொகையை நிறுத்திக்கொள்ள வேண்டிய பிறகுதான் பணவருகை நின்றது.

தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த பத்துப் படங்கள் என்று யார் பட்டியலிட்டாலும் அப்பட்டியலில் மகேந்திரனின் நான்கு படங்களையேனும் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். எனது பத்துப் பட்டியலில் ‘பூட்டாத பூட்டுகள்’, ‘உதிரிப் பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ ஆகியனவற்றுக்குக் கட்டாய இடமுண்டு. ‘நண்டு’, ‘மெட்டி’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகிய படங்களை வேறு யாரேனும் தம் பட்டியலில் சேர்க்கக்கூடும்.

இலக்கியக் காதலர்

எழுத்தாளர்களின் ஆக்கங்களை மகேந்திரனைப் போல் யாரேனும் திரைக்குப் பயன்படுத்திக் கொண்ட வர்கள் தமிழில் இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். ‘பூட்டாத பூட்டுகள்’ பொன்னீலனின் கதை. ‘உதிரிப்பூக்கள்’ புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யிலிருந்து எழுதப்பட்ட திரைக்கதை. உமாசந்திரன் எழுதிய கதைதான் ‘முள்ளும் மலரும்’. ‘நண்டு’ சிவசங்கரியின் கதை. ‘சாசனம்’ கந்தர்வனின் புகழ்பெற்ற சிறுகதை. மகேந்திரன் பிற்காலத்தில் எழுத்தாளர் சு. வேணுகோபாலின் கதையொன்றைத் திரைப்படமாக்கும் எண்ணம் கொண்டிருந்தார்.

‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ என்னும் பழைய படமொன்றில் மகேந்திரன் பாடல் இசைக்கோப்பில் ஈடுபட்டிருப்பதைப்போன்ற காட்சியொன்று வருகிறது. அதில் மெட்டுகளைப் பாடிக்காட்டும் இசையமைப்பாளர்கள் சங்கரும் கணேசும் மகேந்திரனின் முகக்குறிப்பை நோக்கி “மகேந்திரன் சாருக்கு டியூன் பிடிக்கலபோல…” என்று பேசிக்கொள்வார்கள். அதற்கு மகேந்திரன் தம் விடையாய்க் கூறுவார் “எனக்குப் பிடிக்கிறது முக்கியமில்லை… ஜனங்களுக்குப் பிடிக்கணும்”.  மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நல்ல படங்களையும் எடுக்கலாம் என்பதற்கு மகேந்திரனே ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்.

தமிழின் சிறந்த படங்களை ஆக்கி அளித்த மகேந்திரனுக்கு இசையும் ஒளிப்பதிவும் தோள்கொடுத்தன. எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களில் வழிகாட்டினார்கள். மகேந்திரனின் திரைப்படங்கள் வாழ்க்கையின் பன்முகங்களையும் நுணுக்கியும் பெருக்கியும் காட்டிச் சென்ற அமைதிப் பாய்ச்சல்கள். கலையுணர்வாளர்கள் ஒவ்வொருவரும் அவற்றில் காலந்தோறும் திளைத்து மகிழ்வார்கள். சாமானிய ரசிகர்கள் அவற்றைக் காண்கையில் மகிழ்ச்சியாலும் கண்ணீர் துளிகளாலும் ஆராதிப்பார்கள்.

- மகுடேசுவரன், கவிஞர், எழுத்தாளர், மொழியறிஞர்,  திரைப்பட ஆய்வாளர். தொடர்புக்கு: kavimagudeswaran@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close