[X] Close

திரைக்குப் பின்னால்: வயதுக்கு மீறிய திறமை!


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:29 am
  • அ+ அ-

“சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு பகுதியில்தான் பிறந்து வளர்ந்தேன். அங்கே இருக்கும் கேந்திரிய வித்தியாலயாவில் படித்தேன். அதில் அப்பா ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அப்பாவைப் பார்த்து முதலில் ஓவியம், பிறகு ஒளிப்படக் கலை என ஆர்வம் பிறந்தது. நான் எவ்வளவு சினிமா பார்த்தாலும் அப்பாவும் அம்மாவும் திட்டமாட்டார்கள்.

அப்பா ஒருநாள், ‘மசாலா படங்கள் என்று இல்லாமல் எல்லாவிதமான படங்களையும் பார்’ என்று கூற, பலவகையான பார்க்கத் தொடங்கினேன். பார்த்த படங்களைப் பற்றி அப்பாவிடம் பேசத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் நான் சினிமா இயக்கலாம் என்றிருக்கிறேன் என்றபோது அப்பாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

எனது ஆர்வம் உண்மையானது என அவர் புரிந்துகொண்டதால் தமிழக அரசு திரைப்படக் கல்லூரியில் பெரும் போராட்டத்துக்குப்பின் சேர்த்துவிட்டார். எனக்கு படத்தொகுப்புப் பிரிவில்தான் அட்மிஷன் கிடைத்தது. ஆனால் நான் அங்கிருந்த எல்லா துறைகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வந்துவிடுவேன். இண்ஸ்டியூட் படிப்பு ஒரு விஷயத்தை எனக்குத் தெளிவாக உணர்த்தியது. சினிமாவை உருவாக்க விரும்பும் ஒருவனுக்கு எடிட்டிங் மட்டுமல்ல, ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ் தொடங்கி அத்தனை கிராஃப்ட்களிலும் போதிய அறிவு இருக்க வேண்டும் என்பது புரிந்தபோது எனக்குத் தகவல்களையும் சினிமா தொழில்நுட்ப அறிவையும் வாரி வழங்கியது இண்டர்நெட்.

kavin 2.jpg

இணையம் வழியே போட்டோஷாப் முதல் கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ், சவுண்ட் டிசைன் வரை அனைத்தையும் கற்றுக்கொண்டு அதைச் செய்முறையாகச் செய்து பார்க்கத் தொடங்கினேன். இந்தக் கலைகளில் எல்லாம் ஒளிப்பதிவு என்னைக் கொஞ்சம் அதிகமாகவே ஆக்ரமித்துக்கொண்டது. அதன்பிறகு ஒளிப்பதிவு சார்ந்த தேடலில் இறங்கினேன். ஒளிப்பதிவாளர் ஆவது என்பதை முடிவு செய்து கொண்டேன்.” என்றவர் தனது சினிமா நுழைவு பற்றித் தொடர்ந்து பேசினார்.

“நாளைய இயக்குநர் சீசன் 5-ல் குறும்பட உருவாக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றினோம். இறுதிப் போட்டியில் எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் ராசு ரஞ்சித் இயக்கிய ‘தீதும் நன்றும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், அந்தப் படத்தின் ஒளிப்பதிவைக் கேள்விப்பட்டு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்துவிட்டார்.

இந்தப் படத்துக்கு, அதன் கதைக்கருவை காட்சியில் முன்னிறுத்தும் வகையில் ட்ரைபாட் பயன்படுத்தாமல் படப்பிடிப்பு முழுதும் ‘handheld’ முறையிலேயே எடுத்தேன். இப்போது பெரிய பெரிய இயக்குநர்களும் எங்கெங்கோ இருந்து ரசிகர்கள் அழைத்துப் பாராட்டுவதும் ரசனையுடன் செய்த வேலைக்குக் கிடைத்த பாராட்டாக இருக்கிறது.” எனும் கவின்ராஜ் அடுத்து மூன்று முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதியானதும் அவற்றை அறிவிக்க விரும்புகிறேன்” என்கிறார். ஆர்வமும் தேடலும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு கவின்ராஜ் ஒரு உதாரணம்.திரைக்குப் பின்னால்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close