[X] Close

விமர்சனம்: தடம்


thadam-review

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 22:44 pm
  • அ+ அ-

ஓர் உரு இரட்டையர்களில் யார் கொலையாளி என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பதே 'தடம்' படத்தின் கதை.

எழில் (அருண் விஜய்) ஐஐடியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கவின் (அருண் விஜய்) நண்பன் யோகி பாபுவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். எழில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அருகில் திரைப்பட விமர்சகராக வேலை பார்க்கும் தீபிகாவை (தான்யா ஹோப்) காதலிக்கிறார்.

கவின் நிறைய பெண்களுடன் பழகி அவர்களை வலையில் விழ வைக்கிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஆகாஷ் என்பவர் தன் சொகுசு வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். போலீஸ் கொலை செய்தது யார் என்று ஆதாரங்களைத் தேடுகிறது.

அப்போது கிடைத்த ஒரு செஃல்பியைக் கொண்டு எழிலைக் கைது செய்கிறது போலீஸ். அதே ஸ்டேஷனில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக கவினும் வந்து சிக்குகிறார். ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இருவரில் யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதில் போலீஸ் திணறுகிறது.

இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ('பெப்ஸி' விஜயன்) தனிப்பட்ட முன் பகையின் காரணமாக எழிலை கொலை வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார். உண்மையில் நடந்தது என்ன? ஆகாஷ் கொலையானதற்கான பின்னணி என்ன, குற்றவாளி யார், யாருக்கு தண்டனை கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.

சிக்கலும் குழப்பமும் மிகுந்த ஒரு கொலை வழக்கை போலீஸ் புலனாய்வு செய்யும் விதத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

சவாலான இரட்டைக் கதாபாத்திரங்களில் கச்சிதம் காட்டி ஈர்க்கிறார் அருண் விஜய். நடை, உடை, பாவனைகளிலும் போலீஸாரை எதிர்கொள்ளும் விதத்திலும் அருண் விஜய் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என்று இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் எஸ்.ஐ.ஆக திறமை காட்டி நடிப்பில் மிளிர்கிறார் வித்யா ப்ரதீப். கோபாலகிருஷ்ணன் கேரக்டரில் பெப்ஸி விஜயனும், கவின் நண்பனாக சுருளி கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நிறைவாக நடித்துள்ளனர்.

'அம்மா அப்படிப்பட்ட பொம்பளை இல்லடா' என்று மகனிடம் சொல்லும் சோனியா அகர்வாலின் கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் புரியாத புதிர்.

புகை பிடிக்கும் காட்சிகளில் தில்லாக வந்து போகும் மீரா கிருஷ்ணன் கதையின் ஓட்டத்தில் காணாமல் போகிறார்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அருண்ராஜ் இசையில் இணையே உயிர்த்துணையே பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் அருண்ராஜ் டெம்ப் ஏற்றாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார். கவினும் எழிலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் சில்வாவின் உழைப்பு பாராட்டுக்குரியது.

வழக்கம் போல் ரொமான்ஸ் காட்சிகளில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கொலை வழக்கு முதலில் மந்தமாகச் செல்வது, முழு டீமும் மும்முரமாக இறங்கிய பிறகு வழக்கின் கோணம் மாறுவது, தடயத்தைத் தேடி போலீஸார் அலைவது பின் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து சேர்வது, அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கப் புரியாமல் திணறி நிற்பது என புலனாய்வு செய்யும் விதத்தின் நுட்பங்களை விரிவாகச் சொல்வது படத்தின் பெரும் பலம்.

கவினா, எழிலா யார் குற்றவாளி என்பதில் இருவர் மீதான பிளஸ், மைனஸை அலசிய விதம் படத்துக்கு கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. திரைக்கதை ட்விஸ்ட்டுகள் அத்தனை முன்முடிவுகளையும் மாற்றும் அளவுக்கு மிக வலுவாக உள்ளது. தீர்ப்புக்குப் பிறகான உண்மையைச் சொன்ன விதத்திலும் இயக்குநர் தனித் தடம் பதிக்கிறார்.

அருண் விஜய் தான்யா ஹோப்பை தேநீர் அருந்தச் செல்லலாமா? என்று கேட்கும் கேள்விகளும் அதற்கான பதிலும் எளிய இனிய கவிதை. அந்த தப்புதண்டா பாடல் மட்டும் காட்சிகளுக்கு இடையே வேகத்தடை. சோனியா அகர்வால் ஏன் சூதாடுகிறார் என்பது குறித்த டீட்டெயில் இல்லை. அதனால் வரும் பின்விளைவுகளும் அழுத்தமாக இல்லை. முதல் பாதியில் இருக்கும் மந்த நிலையையும் கொஞ்சம் கத்தரி போட்டு சரி செய்திருக்கலாம்.  இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தடம் டைட்டிலுக்கு ஏற்றவாறு  'தடம்' பதித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close