[X] Close

’ஸ்டைலீஷ்’ கவுதம் வாசுதேவ் மேனன்… ஹேப்பி பர்த்டே!


goutham-vasudev-menon-birthday

கவுதம் வாசுதேவ் மேனன்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Feb, 2019 18:14 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தமிழ் சினிமாவில் நடிகர்களின் காலத்துக்குப் பிறகு இயக்குநர்களின் காலம் என்று தொடங்கியது. அதைத் தொடங்கிவைத்தவர் ஸ்ரீதர். இயக்குநர் ஸ்ரீதரின் படங்கள், அவரின் ஸ்டைலில், இருக்கும். அதையடுத்து கே.பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர் என்று பலரும் அவரவர் ஸ்டைலைப் கல்வெட்டுகள் போல் பொறித்தார்கள். ‘இது இன்னாருடைய படம்’ என்று முத்திரை பதித்தார்கள். அந்தவகையில், முத்திரை பதித்த இயக்குநர், ஸ்டைலீஷாகப் படம் பண்ணும் இயக்குநர்… கவுதம் வாசுதேவ்மேனன்.

‘சாலுலோக்கி’ என்றொரு வார்த்தை உண்டு. அதாவது, தனக்குத் தானே பேசிக்கொள்வது. தானே அந்த நிமிடத்தின் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது. கவுதம் வாசுதேவ்மேனனின் ஸ்டைல்களில் இதுவும் ஒன்று. தன்னுடைய முதல் படமான ‘மின்னலே’ படத்திலேயே மாதவன் கதையைச் சொல்லத் தொடங்குவார். ரீமாசென்னின் முதல் படம் இதுதான். அவரை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் கவுதம்தான்!

துள்ளத்துடிக்கிற ஒரு காதல் கதையைக் கொடுத்தார். இவரின் பாடல்கள் தனி ஸ்டைலில் இருக்கும். இது கவுதம் வாசுதேவ்மேனன் ஸ்டைல் என்று உணர்ந்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘வசீகரா’, ‘ஏய் அழகிய தீயே’, ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு.

அடுத்து வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யாவின் கேரியரில் லைஃப்டைம் படம். சூர்யாவின் நடிப்பும், ஜோதிகாவின் பார்வையும் பிரமாதம். அதையெல்லாம் தாண்டி, வில்லன் பாண்டியா ஜீவன் மிரட்டியெடுத்திருப்பார். மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, மனதை பதைபதைக்கச் செய்யும் வில்லன் கேரக்டர் என்று கவுதம் வாசுதேவ்மேனனை பத்திரிகைகள் விமர்சனங்களில் கொண்டாடித் தீர்த்தன. கெட்ட போலீஸ் சித்திரிப்பு சினிமா உலகில், அப்படியொரு துடிப்பான, நேர்மையான போலீஸ் குரூப்பைக் காட்டினார் கவுதம். இதிலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. புதுச்சேரிக்குச் செல்லும் வழியில், காரின் டயரைப் படமாக்கியதை, எல்லோரும் வியந்து சொன்னார்கள். சூர்யாவுக்கு மிக முக்கியமான படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ‘கவுதம் மேனன் படம்னா, முதநாளே பாத்துடணும்’ என்று பரவலாகப் பேசினார்கள் ரசிகர்கள். அதன் பிறகு, கமலை ராகவனாக்கியிருந்தார். இதிலும் துடிப்பான, பிரில்லியண்ட் போலீஸ் அதிகாரி. இந்த முறை சைக்கோ கொலைகாரர்கள். இந்த வில்லன்களும் மிரட்டினார்கள். இதிலும் பாடல்கள் சொக்கவைத்தன. ரிங்டோன், காலர்டியூன்களாக வலம் வந்தன.

‘காலேஜ் காலத்திலிருந்தே நான் கமல் சார் ரசிகன். இதோ… கையில் உள்ள காப்பு, ஹேர் கட்டிங் எல்லாமே ’சத்யா’ பார்த்து, போட்டுக்கொண்டது;  வைத்துக்கொண்டது’ என்று கவுதம் வாசுதேவ் மேனன் சொல்லியிருக்கிறார்.

திருச்சிக்கும் கீரனூருக்கும் இடையே உள்ள மூகாம்பிகை எஞ்சினியரிங் கல்லூரியில்தான் கவுதம் வாசுதேவ்மேனன் படித்தார். எனவே படங்களில் கல்லூரி, பெயர், ஊரின் பெயர் என்று இணைத்துவிடுவார்.

‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் சரத்குமாருக்கு அருமையான கேரக்டர். ஆண்ட்ரியாவை நாயகியாக்கியிருந்தார். ஜோதிகாவை வில்லியாக்கி, மிரட்டியிருந்தார். ஜோதிகா சம்மதம் தெரிவித்ததிலேயே கவுதமின் மேக்கிங்கைப் புரிந்துகொள்ளலாம்.

கவுதம் வாசுதேவ்மேனன் படமென்றால் லவ் போர்ஷன் கவிதை மாதிரி இருக்கும் என்றார்கள் ரசிகர்கள். ஹீரோ போலீசென்றால் ஒரு இண்டெலக்ச்சுவல் இருக்கும் என வியந்தார்கள். வில்லன் மிரட்டிருவான்யா என்று கிடுகிடுத்தார்கள். பாட்டெல்லாம் மயக்கிரும் என்று பாடல்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும்!

சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் தமிழ் சினிமாவுக்குமாக அவர் படைத்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வை மறக்கமுடியுமா என்ன? ‘இங்கே என்ன சொல்லுது… ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்பதையே மறக்காத போது, ஜெஸ்ஸியை எப்படி மறந்துவிடமுடியும்?

எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், கவுதம் வாசுதேவ்மேனனுக்கு ஒரு மேக்கிங் ஸ்டைல் உண்டு. அதுதான் அவருக்கான ரசிகப் பட்டாளத்தை, கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சூர்யாவுக்கு ‘வாரணம் ஆயிரம்’, அஜித்தை வைத்து, ’என்னை அறிந்தால்’ சிம்புவுக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று வெரைட்டி காட்டி ஹிட்டுகளைக் கொடுத்த கவுதமுக்கு தனியிடம் உண்டு. அது அவருக்கு மட்டுமேயான இடம்.

படத்துக்கு, பழைய நல்ல பாடல்களின் வரியைப் பிடித்து தலைப்பாக்கியிருப்பார். மாயா, அன்பு, ஆராதனா, ராகவன் என்றெல்லாம் அழகழகான பெயர்கள் சூட்டி அழகுபடுத்துவார். வில்லன்களுக்குக் கூட அழகான பெயர்களை வைத்த இயக்குநர் இவராகத்தான் இருப்பார். அட… இதுவும் கூட கவுதம் வாசுதேவ்மேனன் ஸ்டைல்தான்!

தனுஷுடன் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’ என்று போய்க்கொண்டிருக்கும்போதே, ரம்யா கிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் பயோபிக், வெப்சீரீஸ் என்று அடுத்தடுத்த வேலைகளில் வழக்கம்போல் டெடிகெஷன். இதுவும் கவுதம் வாசுதேவ்மேனன் ஸ்டைல்தான்!

ஸ்டைலீஷ் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு இன்று பிப்ரவரி 25ம் தேதி பிறந்தநாள்.

ஹேப்பி பர்த் டே கவுதம் வாசுதேவ் மேனன். மனம் கனிந்த வாழ்த்துகள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close