[X] Close

’இந்தக் கட்சி அந்தக் கட்சி பாகுபாடெல்லாம் இல்ல!’ – ’எல்.கே.ஜி’. ஆர்ஜே. பாலாஜி கலகல


lkg-rjbalaji

எல்.கே.ஜி. - ஆர்ஜே.பாலாஜி

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Feb, 2019 19:16 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

'நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் கோபம்தான், லால்குடி கருப்பையா காந்தி என்கிற எல்.கே.ஜி. திரைப்படம். டிரெய்லரைப் பார்த்து முடிவு பண்ணாதீங்க. இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு பாகுபாடெல்லாம் இல்லாம வைச்சு செஞ்சிருக்கோம்’ என்கிறார் ஆர்ஜே.பாலாஜி.

நடிகர் ஆர்ஜே.பாலாஜி, எல்.கே.ஜி எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். படத்தின் போஸ்டரும் டிரெய்லரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், ஆர்ஜே.பாலாஜி, தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

கடந்த நான்கைந்து வருடங்களில், டூவீலரில் சென்றிருப்போம். வெளியூர் பயணம் செய்திருப்போம். குடும்பத்துடன் தீபாவளி மாதிரி பண்டிகையைக் கொண்டாடியிருப்போம். கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து மனம் விட்டுப் பேசியிருப்போம். இந்தத் தருணங்களிலெல்லாம் நமக்குள் ஒரு கோபம் அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெளிப்பட்டிருக்கும்தானே. அந்த ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் லால்குடி கருப்பையா காந்தி என்கிற எல்.கே.ஜி. திரைப்படம்.

டிரெய்லரில் சில கட்சிகளை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருப்பதாக பலரும் சொல்லுகிறார்கள். இன்னும் பல காட்சிகள், பல கட்சிகளைப் பற்றியெல்லாம் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் டிரெய்லரில் சொல்லிவிடமுடியாது.

தவிர, நடப்பு ஆட்சியாளர்கள் பற்றி சொன்னால்தான் மக்களுக்கு சட்டெனப் புரியும். மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்ததையெல்லாம் இப்போது சொன்னால், மக்களுக்கு ஞாபகம் இருக்காது. நமக்கெல்லாம் ‘ஷார்ட் டெர்ம் மெமரி’ இருப்பதால், பழசை அவ்வளவு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடிவதில்லை.

அரசியல் பற்றிய என்னுடைய சிந்தனை என்பது, சிறுவயதில் தாத்தாவால் எனக்குள் ஏற்பட்டது. அவருக்காக கடைக்குச் சென்று புத்தகங்கள் வாங்கி வருவேன். அதையெல்லாம் படித்துவிட்டு, பேச ஆளில்லை என்று என்னிடம்தான் அரசியல் நிகழ்வுகளையெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இப்போதைய சிந்தனைக்கு உருவாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டும் கேலி செய்தால்தான் ‘இவன் அவங்க ஆளு போல’ என்று சொல்லுவார்கள். எல்லாக் கட்சிகளையும் படத்தில் விமர்சிக்கிற போது, ’இவன் எல்லாரையும்தான் கலாய்க்கிறாம்பா’ என்று விட்டுவிடுவார்கள்.

இவ்வாறு ஆர்ஜே.பாலாஜி தெரிவித்தார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close