[X] Close

பெரும் புரட்சி வரும் புரட்சி- வைரமுத்துவின் ஆவேசப் பாடல்


vairamuthu-s-song

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 10:33 am
  • அ+ அ-

சர்வதேச வர்த்தகச் சந்தையால் சிறுமுதலீட்டாளர்கள் அழிகிறார்கள். உலகமயமாதலால் உள்ளூர்த் தொழில்கள் பல நசுங்கிப்போயின. இந்தக் கருத்தை மையமாக வைத்து ‘மீனாட்சிப் பட்டணம்’ படத்துக்கு ஒரு பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தப் பாடலை ஒரு தெருப்பாடகன் மதுரை வீதிகளில் பாடிவருகிறான். வீதியில் செல்லும் கூட்டம் அந்தப் பாடலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுப் பயணத்தை நிறுத்திப் பாட்டைக் கேட்பதாகக் காட்சி விரிகிறது. ‘சேலி ஸ்டுடியோ’ நிறுவனம்  தயாரிக்கும் இப்படத்தை பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்ற மாணவர் வாஞ்சி நாராயணன் இயக்குகிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு விஷால் சந்திரசேகர்  இசையமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லும்போது “சமூகவியல் சார்ந்த நெருப்புப் பாடல்கள் எப்போதாவதுதான் பிறக்கின்றன. இவைபோன்ற பாடல்களே கலைவழியே சமூகக் கடமைகளை ஆற்றுகின்றன” என்றார் கவிஞர் வைரமுத்து.

அந்தப் பாடல் வரிகள்:

மீனாட்சி பட்டணம் – இது

மீனாட்சி பட்டணம்

காலையிலே கடன் கழிக்கக்

கட்ட வேணும் கட்டணம்

பெரியசாமி மண்சுமந்து

பிட்டு தின்ன பட்டணம் – இப்பப்

பீசாவோட கோகோ கோலா

பெட்டிக் கடையில் விக்கணும்

முட்ட மேல இடி இறங்கி

முட்டிப் போனது போல – இப்ப

இளநியோட விஸ்கி வந்து

இடுப்பொடிக்குது ஆள

கடலச் செடிய மேஞ்சு போன

கம்பளிப் பூச்சி போல

எங்க தொழில் செத்துப் போச்சு

எங்க போயி வாழ?

வெளிநாட்டுத் துணிக வந்து

விளம்பரமா ஆச்சு

உள்நாட்டுத் தறியெல்லாம்

ஒடிஞ்சொடிஞ்சு போச்சு!

மத்த நாட்டுப் பொருளு வந்து

மார்க்கட்டாகிப் போச்சு

பொட்டிக் கடைக எல்லாமே

பூட்டுப் போட லாச்சு!

எங்க வீட்டுக் கீரை கூட

ஏசி வாங்கப் போச்சு

கீரை வித்த சாதி மட்டும்

வேர்த்து ஒழுகிப் போச்சு!

சொந்த ஊரு வாழ – வெளிச்

சந்தைகளை நிறுத்து – இல்ல

சோசலிசம் கழுதை எல்லாம்

தண்ணி மேல எழுத்து

பட்டணம்தான் இந்தியான்னு

பகட்டுக் காட்ட வேணாம்

பட்டிக் காட்ட மறந்து நீங்க

பட்ஜெட் போட வேணாம்

கரிசக் காட்டு வெவசாயி

கருகிப் போக வேணாம் – நீங்க

கமிசனுக்கு ஆசைப்பட்டுக்

கதவு தொறக்க வேணாம்

தேகம் காக்கும் தயிரு மோரு

தெருத் தெருவா கெடக்கு – சும்மா

ஆளக் கொல்லும் ஐஸ்க்ரீமில்

எதுக்கு இந்தக் கிறுக்கு?

அடுத்த நாட்டு முதலீட்டில்

ஆகிப் போச்சு வறட்சி

போற போக்கப் பாத்தாப் - பெரும்

புரட்சி வரும் புரட்சி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close