[X] Close

ஜெயலலிதா பயோபிக்: முக்கியக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி


samuthirakani-join-jayalalitha-biopic-movie

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 06 Feb, 2019 20:20 pm
  • அ+ அ-

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா பயோபிக்கில், சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கக் கடும் போட்டி நிலவி வருகிறது. பிரியதர்ஷினி, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை, ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இதில், ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனிடமும், சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் என்று படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பயோபிக்கை படமாக இயக்க 3 இயக்குநர்களுக்கு இடையே கடும் போட்டி நடந்துவரும் வேளையில், சத்தமின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக கெளதம் மேனன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close