சயிஷாவை மணக்கிறாரா ஆர்யா?

ஆர்யாவுக்கும் சயிஷாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.
அகில் அக்கினேனி ஜோடியாக ‘அகில்’ எனும் தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சயிஷா சைகல். பழம்பெரும் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் சாய்ரா பானு இருவரின் பேத்தி தான் சயிஷா. இவருடைய பெற்றோர்களும் நடிகர்கள்தான்.
‘அகில்’ படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கனுடன் ‘ஷிவாய்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார் சயிஷா. அதனைத் தொடர்ந்து ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து, தமிழிலும் அறிமுகமானார்.
தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சூர்யா ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில் மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா - சயிஷா இடையே காதல் மலர்ந்ததாகவும், ‘காப்பான்’ படத்தில் அது தொடர்வதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. வருகிற மார்ச் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திருமணச் செய்தி குறித்து இதுவரை இருதரப்புமே மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரிக்க ஆர்யாவைத் தொடர்பு கொண்டோம். கடந்த இரண்டு நாட்களாக அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்.