[X] Close

'என் இனிய பொன் நிலாவே’- ‘இளையநிலா பொழிகிறது!; ‘பொதுவாக எம்மனசு தங்கம்’- ‘ஆத்தா ஆத்தோரமா வாரியா?’ - இளையராஜா பிரத்யேகப் பேட்டி


ilayaraaja

இளையராஜா

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 13:32 pm
  • அ+ அ-

ஜெயந்தன்

உங்கள் பாடல்களைத் திரையில் பார்த்துக்கொண்டே கேட்பது, பார்க்காமல் கேட்க மட்டுமே செய்வது என ரசனையில் இருக்கும் வேறுபாட்டைக் கவனித்திருக்கிறீர்களா?

கேட்பதற்கும் பார்த்து உணர்வதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும், இசை மட்டுமே கரைந்துபோகாமல் இறுதிவரை எஞ்சி நிற்கிறது. காட்சிகளைப் பார்ப்பதற்கு இசை துணை புரிகிறது. இசையைக் கேட்டுவிட்டு, அதைக் காட்சியுடன் கண்டு ரசிக்க எதிர்பார்ப்புடன் திரையரங்கு செல்லும் பார்வையாளர்கள், பாடலுக்கான காட்சிகளைப் பார்த்து சரியாக ‘பிக்சரைசேஷன்’ செய்யவில்லையே என நினைக்கச் செய்த படங்கள் அதிகமுண்டு. ஒரு இடைவெளிக்குப்பின் பாடலை நினைக்கும்போது அந்தப் பாடலுக்கான காட்சியும் நினைவுக்கு வந்தால் அது அந்தக் காட்சியை உருவாக்கிய இயக்குநரின் திறமை, தனித்தன்மை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எந்தப் படத்துக்காக நான் இசையமைத்தேன் என்பதையே ஒரு சில ஆண்டுகளுக்குப்பின் மறந்துவிடுகிறார்கள். படத்தை மறந்துவிட்டுப் பாடலை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களது கவலை, துக்கம் போக்கவும், தூங்கவும்; ஏன் தூங்காமல் உழைக்கவும் என் பாடல்களை கூடவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பு உங்களுடையது; பாடல் உருவாக்கத் தில் அதைப் பாடுவதும் கருவிகளில் இசைப்பதுமான சக கலைஞர்களின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மிக முக்கியமான விஷயமாக இதைப் பார்க்கிறேன். இன்றைக்கும் எத்தனையோ இசைக்கருவிகளைப் பயன்படுத்தித்தான் நான் இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். சற்றுமுன் ரிகர்சலில் பார்த்தீர்கள்தானே. ஒரு பாடலில் எத்தனை பேர் வாசித்தார்கள். அத்தனை பேரும் கொடுக்கப்பட்ட இசைக்குறிப்புகளை அனுபவித்து, ரசித்து உணர்வுபூர்வமாக வாசித்து வரக்கூடிய அந்த ஜீவன் முழுவமும் சேர்ந்துதானே உங்களை மயக்குகிறது, ஆட்கொள்கிறது அல்லது உங்களை வசப்படுத்துகிறது. ஒரு கலை என்றால் அதில் பெர்ஃபாமென்ஸ் இருக்க வேண்டும். பெர்ஃபாமென்ஸ் இல்லையென்றால், அது இசை அல்ல. எஸ்.எம்.எஸ். டைப் செய்வதுபோல கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்துவிட்டு இசை என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்த ட்யூன் வேண்டாம், வேறு ஒன்று தாருங்கள்என்று கேட்கும் இயக்குநர்களைப் பார்த்திருப்பீர்கள். இப்படி ஒதுக்கப்பட்ட மெட்டுக்களை என்ன செய்வீர்கள்?

இந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இன்னொரு ட்யூன் பார்க்கலாமா சார் என்றுதான் கேட்பார்கள். ‘முரட்டுக்காளை’ படத்துக்குப் பாடலை கம்போஸ் செய்துகொண்டிருந்தேன். இயக்குநர் கூறிய சூழ்நிலைக்கு ‘ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாரியா’ பாடலின் மெட்டு பிறந்தது. ஆனால், இயக்குநர் எடுத்துக்கொண்டது ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை. இரண்டு பாடல்களும் ஒரே மாதிரிதான்  இருக்கும். இருந்தாலும் இது வேறு, அது வேறு.

‘மூடுபனி’ படத்துக்கான கம்போஸிங். பாலுமகேந்திரா ‘என் இனிய பொன் நிலாவே’ மெட்டைத் தேர்வு செய்துவிட்டார். அவர் கூறிய சூழ்நிலைக்கு முதலில் நான் மெட்டமைத்தது ‘இளையநிலா பொழிகிறதே’. இப்படி இடம் மாறிய, படம் மாறிய பாடல்களின் பட்டியல் பெரியது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close