[X] Close

'என் ஆர்மோனியத்தில் இன்னும் இன்னும்... வெளிவராத இசை ஏராளம்’; இளையராஜா


ilayaraaja

இளையராஜா

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 12:33 pm
  • அ+ அ-

 ஜெயந்தன் 

‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா. 75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக்கும் வேளையில்… அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இசைக்கூடத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இசை, ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் அப்பால், இளையராஜாவை இத்தனை இளமையாக வாழ்வித்துக்கொண்டிருப்பது எது?

இந்த இரண்டுக்கும் அப்பால் எதுவுமில்லை. இரண்டு என்பதைவிட ஒன்று சொல்வதே சரி. என் இசையும் ஆன்மிகம்தான், ஆன்மிகம் என்பதே இசைதான். இளமையாக இருக்க வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அது முடியாது. ஆகிற வயது ஆகியே தீரும்.

உங்களது முதல் ஆர்மோனியம் இன்னும் உங்களிடம் இருக்கிறதா?

இன்னும் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அண்ணன்கள் அதை கோயமுத்தூரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். அதை நான் தொட்டால், தொட்ட கையைப் பிரம்பால் அடிப்பார்கள். அதைத் தொடாதே கெட்டுப்போய்விடுவாய் என்றார்கள். அவர்கள் இல்லாத நேரத்தில் அதைத் தொட்டுத் தொட்டுத்தான் நான் கெட்டுப்போனேன். காதலனும் காதலியும் சந்திப்பதைப் போல, அண்ணன்கள் இல்லாத நேரத்தில் அதை எடுத்து வைத்து வாசித்து இசைக்கக் கற்றுக்கொண்டேன். எனக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அந்த ஆர்மோனியத்துக்குத் தெரியும். ‘எனக்குள்ளிருந்து வர வேண்டிய இசை இன்னும் எவ்வளவோ இருக்கிறது’ என்று அது அடிக்கடி என்னிடம் கூறிக் கொண்டிருப்பதும் எனக்குப் புரியும்.

நினைவுகளைத் தூண்டி விடுவதுதான் உங்கள் இசையின் உச்சம். ஒவ்வொரு பாடலுமே வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது என்கிறார்கள்’. ரசிகர்களுக்கு மட்டும்தான் இந்த உணர்வா; மெட்டமைக்கையில் நீங்களும் வேறோர் உலகத்தில்தான் இருக்கிறீர்களா?

என்னிடம் கதையையும் பாடல்களுக்கான சூழ்நிலைகளையும் கூற இயக்குநர் மட்டுமே வருவார். கூறி முடித்தபின் அவரும் இருக்க மாட்டார். ஆனால் இயக்குநர் உருவாக்கி, அறிமுகப்படுத்திய கதாபாத்திரங்கள் எனது அறையில் இருப்பார்கள். இப்போது ஆர்மோனியப் பெட்டியில் கைவைத்தால் மெட்டுகள் வந்துகொண்டே இருக்கும். அது வேறோர் உலகம் என்று நீங்கள் அடையாளப்படுத்திக்கொண்டால் அது தவறில்லை. இன்றும் அது விவரிக்க முடியாத அனுபவம்தான். இசையமைத்தபின் ரசிகர்களின் உணர்வுடன் எப்படி அது கலக்கிறது என்பதும், அதைத் தங்களுடைய இசையாக எண்ணி அதில் அவர்கள் எப்படிக் கரைந்து போகிறார்கள் என்பதும் மிராக்கிள்தான்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close