[X] Close

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை;  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


ilayaraaja-75

இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Jan, 2019 19:24 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் வருகிற 2 மற்றும் 3ம் தேதிகளில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெறுவதற்கான பணிகள் மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவி ஏற்றதில் இருந்து முறைகேடுகள் நடந்துள்ளன, சங்கத்தின் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதைக் காரணமாகச் சொல்லி, தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், இளையராஜா 75 நிகழ்ச்சியை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஏன் நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பினார். இதையடுத்து இளையராஜா நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் போடப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும்,  2017-18 கணக்கு வழக்குகள் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி குறித்து முடிவெடுக்கப்பட்டது.  ஒய்.எம்.சி.ஏ.க்கு 35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ‘இளையராஜா-75’ நிகழ்ச்சிக்கு தடை கோரிய இடைக்கால கோரிக்கை மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஆளுநர் துவக்கி வைக்கவும் முடிவு செய்து அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை (31ம்தேதி) இந்த வழக்கில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடையில்லை என நீதிபதி உத்தரவிட்டார்.

எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி, இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close