[X] Close

அமெரிக்க தலித் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பா.இரஞ்சித்தின் 2 படங்கள்


2

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 30 Jan, 2019 13:52 pm
  • அ+ அ-

தமிழ் சினிமாவில் தலித்தியப் பார்வைக்கான இடத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், அமெரிக்காவில் நடைபெற உள்ள தலித் திரைப்பட மற்றும் கலாச்சார விழாவில் கலந்துகொள்கிறார். திரையிடல் பிப்ரவரி 23,24-ம் தேதிகளில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இதில் இரண்டு தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன. பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காலா', அவர் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' ஆகியவை திரையிடலுக்குத் தேர்வாகி உள்ளன. இவை இரண்டும் மற்ற மொழிப்படங்கள் நான்குடன் மோதுகின்றன. நீரஜ் கேவானின் 'மாஸான்', ஜெயன் கே.செரியனின் 'பபிலியோ புத்தா', நாகராஜ் மஞ்சுளேவின் 'ஃபண்ட்ரி' மற்றும் சுபோத் நாகதேவின் 'போலே இந்தியா ஜெய் பீம்' ஆகியவை அமெரிக்காவில் திரையிடப்படும் பிறமொழிப் படங்களாகும்.

இதுகுறித்துப் பேசிய பா.இரஞ்சித், ''படங்கள் எவ்வாறு தலித்தியப் பார்வையை முன்வைக்கின்றன என்பதையும் அவற்றை மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதையும் இந்தத் திரைப்பட விழா மூலம் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

தலித்தியப் பார்வையில் படைக்கப்படும் படங்களுக்கான முயற்சிகள் ஓர் இயக்கமாக உருமாறி உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரை உலகில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமூக உண்மையைத் தோலுரித்து மக்களுக்குக் காட்ட முடிகிற இடத்தை இது அளித்திருக்கிறது'' என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அம்பேத்கர் சர்வதேச சங்கத்தால் நடத்தப்படும் இந்த விழாவில் பா.இரஞ்சித் உடன், தேசிய விருது பெற்ற நாகராஜ் மஞ்சுளே மற்றும் முன்னாள் மிஸ் இந்தியாவும் நடிகையுமான நிகாரிகா சிங் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

தற்போது விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முன்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்தில் பா.இரஞ்சித் பணியாற்றி வருகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close